1 May 2018

மொச்சையுருண்டை,,,,,/

இரண்டு மொச்சைகள் நான்கு வடை போதும் என்று தோணுகிறது,

மொச்சை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது,அனேகமாக இப்பொழுது கடையில் கிடைப்பது எல்லாம் ரங்கூன் மொச்சைதான்,அதில் கடலை மாவை போட்டு கலந்து கொல கொல என வைத்து விடுகிறார்கள்,

இதுவும் அப்படித்தான் இருக்கும் போலத் தெரிந்தது,

வட்டத்டட்டின் நிறைய குவித்து வைத்திருந்த மொசையின் மீது பிளாஸ்டிக் பேப்பரை கொண்டு போர்த்தியிருந்தார்கள்.

போர்த்தியிருந்த பேப்பரைத்தாண்டி மொச்சையின் மஞ்சள்க்கலர் வெளித் தெரிந்ததாய்,,/

மொச்சை தட்டுக்குள் சின்ன வட்டக்கிண்ணம் ஒன்று வைத்திருந்தார்கள், அதை வைத்துத்தான் அளந்து தருவார்கள் போலும்.

எங்கு எப்பொழுது மொச்சையைப்பார்த்தாலும் வாங்கி விடுறான், மொச் சையின் மேல்இவனுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருந்தது,மொச்சை மட்டும் என இல்லை. கிராமத்துப்பலகாரம் எதைப்பார்த்த போதிலும் சரி,விடுவதில்லை,

கையில் காசு இருந்தால் வாங்கி விடுவான்,சந்தன முனியாண்டி கோயில் முக்கிலிருக்கிற தெருவில் சுஷ்யம் கிடைக்கும் என கேள்விப்பட்டு ஒரு வாரமாய்அலைகிறான்,ம்ஹூம் கிடைத்த பாடில்லை.ஒன்று இவனுக்கு போக நேரமிருந்ததில்லை,அல்லது இவன் போகும் வேளை சுஷ்யம் காலியாகிப் போயிருக்கும்/

கடைக்குப் போனதற்கு அடையாளமாய் வடை அல்லது பணியாரம் வாங்கி வருவான்,வடையும் பணியாரமும் எங்கும் எப்பொழுதும் கிடைப்பதுதானே,,,? ஆகவே அது பற்றி கவலை கொள்ள வேண்டியதும் அக்கறை கொள்ளவும் தேவை இல்லை.

இருந்தாலும் நகரத்திற்குள் இப்பொழுது எங்கு பார்த்தாலும் குழிப்பணியாரம் இங்கு கிடைக்கும் என்கிற போர்டை பார்க்க முடிகிறது, ஒரு பக்கம் இது பார்க்க சந்தோசமாக இருந்தாலும் கூட மறு பக்கம் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறதுதான்,

கம்பங்கூழ்,கேப்பைக்கூழ்,இதுபோல் பணியாரம்,,,என இன்னும் இன்னுமாய் நிறைந்து போன கிராமத்துப்பலகாரங்களும் உணவு வகைகளும் நிற்க நேரமி ல்லாத நகரத்தில் கிடைப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே,,,/ இத்த னைக்கும் அதன் பிறப்பிடமான கிராமங்களே அதை மறந்து போன பின்னாய்,,, என்பது தான் இதன் தாங்கியாய் இருக்கிறது.

இருக்கட்டுமே என்ன இப்பொழுது குறைந்து போனது என யோசிக்கிற வேளையில் கிராமத்தின் உருதாங்கிகளாயும் அடையாளங்களாயும் நகரங்கள் அடையாளம் பூண்டு காணப்படுகிறது,

நெருக்கம் மிகுந்த நகரத்தின் பிரதான வீதி ஒரு பக்கம் கோட் சூட் அணிந்த நாகரீக மனிதனையும் ஒரு பக்கம் கந்தலை கசக்கி அணிந்து கொண்டு போகிற மனிதனையும் அடையாளப் படுத்தி தன்னகத்தே வைத்திருக்கிறது தான் இன்னும்,,,என்கிற ஆறுதல் மொச்சை போன்ற பலகாரங்களை பார்க் கையில் வந்து விடுகிறதுதான்.

இவன் போன வேளை காலை எட்டு மணிக்குள்ளாய் இருக்கலாம், காலை யில் ஆறு மணிக்கெல்லாம் கரண்ட் போய் விட்டது,சரி லீவுதானே கூடக் கொஞ்சம் தூங்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் போன் வந்து விடுகிறது கனியண்ணனிடமிருந்து,,/

”சேய் தூக்கம் போச்சே,,” என்கிற எண்ணத்தில் உதறி எழுந்து முகம் கழுவு கையில்தண்ணீர் சுட்டது,தண்ணீர் சுடும் என்பது இதுதான் போலும் தீர்ப்பு எதுவும் இல்லாமல்,,/

காரணம் நேற்று அடித்த வெயில் ,அடிக்கிற வெயிலுக்கு உடம்பே வெம்பிப் போகும் போது தண்ணீர் எந்த அளவுக்குத்தாங்கும் சொல்லுங்கள், அதுவும் பிளாஸ்டிக் டாங்கில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற நீர் எவ்வளவு தாங்கும் என்றாள் மனைவி,

அவளிடம் சொன்னான்,பணம் வாங்கிக் கொண்டு.இதோ வந்து விடுகிறேன் கனியண்ணனைப்பார்த்து விட்டு என,,/

சரி பேஸா போயிட்டு வாங்க, இதோ டீஅடுப்புல வெந்துக்கிட்டு இருக்கு. யெறக்குனதும்குடிச்சிட்டுப்போங்கஎன்றாள்.”இல்லநேரமாகிப்போகுது,இப்பவே பாலவனத்தத்த தாண்டி வந்துக்கிட்டிருக்கேன்றாரு,இன்னும் டீ,,,கீ,,,குடிச்சி போயிக்கி இருந்தேன்னா லேட்டாயிரும்,அவரு வந்து அங்க காத்துக்கிட்டு இருப்பாரு,,” என்றான்,

“சரி போங்க போங்க வீட்ட விட்டு வெளியில தவ்விப் போறதுன்னா ஆம்ப ளைகளுக்கு ஒரு தனி சந்தோஷந்தான் எனச் சிரித்தவளாய்,,, அனுப்பி வைத் தாள் நெற்றியில் திலகம் எதுவும் இடாமல்/

இன்னும் எங்கிட்டுப் போய் திலகத்தை இட என நினைக்கையில் திலகத்தின் ஞாபகம் இவனில் வந்து போகாமல் இல்லை,

திலகம் அருமையான பெயர்,இவனுக்கு பிடித்தப் பெயரும் கூட,,,../

திலகம்,,,திலகா,,,திலகாக்கா,,,,என அவளது பெயரை நீட்டி முழக்கிக் கூப்பி டும் போது கொஞ்சம் அழகு பட்டும் கொஞ்சம் ஈர்ப்பு ஏற்பட்டுப் போயுமாய் ஆகித் தெரிகிறது.

இவன் பொதுவாய் திலகமக்கா என்று தான் அழைப்பான்.இவன் வேலை பார்க்கிற அலுவலகத்தின் எதிர்ப்புறம் இருக்கிற சந்தில்தான் இருக்கிறாள். காலையில் இவன் அலுவலகத்திற்கு செல்கிற வேளை அவளைப்பார்க்க முடி யாது,

காலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்து வேலைக்கு போய் விடுவேன் என்பாள், ”பயர் ஆபீஸீல வேலை பாக்குறதுனால காலையில வெள்ளேன ஆபீஸ் பஸ்ஸீ வந்து எங்கள் கூட்டிக்கிட்டு போயிரும்,அப்பறமா சாயந்தரம் வந்து வீட்டுக்கிட்ட கொண்டு வந்து யெறக்கி விட்டுரும்” என்பவள்,”என்ன பொழப்பு தம்பி எங்க பொழப்பு” என்பவள்

”தம்பின்னு கூப்புடலாமுல்ல,எனக்கு ஒரு தம்பி இருக்கான்,அசப்புல பாக்குற துக்கு ஒங்களப்போலவே இருப்பான், அதுதான் ஒங்கள பாத்த மொத நாளே அப்பிடிகூப்புடனுமுன்னு தோணிச்சி,கூப்புட்டுட்டேன்,தப்புஒண்ணும் இல்லை யே” என்றாள் முதன் முதலாய் இவனை சந்தித்த தினத்தின் அன்று.

பதிலுக்கு சிரித்த இவன் ”நான் ஒங்கள பாத்த ஒடனே அக்கான்னு கூப்புட் டுட்டேன்,நீங்க ஏங் என்னைய தம்பின்னு கூப்புட தயங்குறீங்க,நீங்க அப்பிடி கூப்புட நான் குடுத்துல்ல வச்சிருக்கணும்,,,,” என ஆரம்பித்த பேச்சு அன்றின் சுபயோகசுபமுகூர்த்தில் வேர் விட்டு விழுது வாங்கி படர்ந்து பாவி காணப் பட்டதாய்,,,/

அதன் படர்வில் இன்று வரை அக்கா,தம்பி என தொடர்கிற உறவை இவன் கடந்த மூன்று தினங்களாய் போய் பார்க்கவும் இல்லை,அவளும் அலுவலத் தில் வந்து சந்திக்கவும் இல்லை.

பொதுவாகஅப்படியெல்லாம் இருக்கமாட்டாளே அவள்,,,?கட்டிப் போட்டாலும் இருக்க முடியாதே அப்படியெல்லாம் என நினைத்த நினைப்புடனாய் இவனும் ஏதோ ஒரு வேலையாகவோ அல்லது வேலையின் நினைவாகவோ இருந்து விட்டான்.

அவள் தினசரி மாலை வேலை முடிந்து வந்ததும் குளித்து முடித்து விட்டு ஈரத்தலையுடன் அலுவலகத்திற்கு வந்து விடுவாள்,

“என்ன தம்பி என்ன வேலை முடிஞ்சிபோகப்போற நேரமா,,கடுன் டீகொண்டு வர்றேன்சாப்புடுறீங்களா”என்கிறகேள்விதாங்கியவளாய்,,,?கேட்டகேள்வியின் ஈரம் காயும் முன்னாகவே அவளே அதற்கு பதிலும் சொல்லி விடுவாள்.

”இருக்கட்டும் தம்பி ஒங்களுக்கு கடையில இருந்து டீ வந்துருக்கும் இந் நேரம்,நான் கொண்டு வந்து குடுத்தாலும் நீங்க குடிக்கப் போறதில்ல”,,,என்பது போலான பேச்சுக்கள் கூடிக்கொண்டே போன ஒரு நாளின் திவ்ய நேரத்தில் ”உடன் பணிபுரிகிறவர் வாங்க போயிட்டு வந்துருவம், அவுங்க வீட்டுல போயி டீயக்குடிச்சி வந்துருவம்,இல்லையின்னா அந்தம்மா சாபம் குடுத்துருவாங்க போலருக்கு,,,” என்ற நாளின் மாலையில் போய் குடித்துவிட்டு வந்த டீக்கு நன்றி சொன்னாள் அவள்.

அப்படியெல்லாம் வயது முதிர்ந்த பட்டாம் பூச்சியாய் இறக்கை கட்டிக் கொண்டு திரிபவள் மூன்று நாட்களாய் இப்படி முடக்கம் காட்டித்திரியக் கார ணம்,,,எது என மூன்றாம் நாள் மாலை அலுவலகம் முடிந்து திலகம் அக்கா வை போய் பார்த்த போது சொன்னாள்.

”தம்பி முந்தா நா வழக்கம் போல ஆபீஸ் விட்டுவந்ததும்குளிச்சி முடிச்சிட்டு ஆபிசுக்குள்ள வந்தேன்,அங்க நீங்களும் இல்ல,ஒங்க கூட வேலை பாக்குற இன்னொருத்தரும் இல்லை.என்ன செய்யிறதுன்னு தெரியல,அங்க ஒங்க ரெண்டு பேருதான் எனக்கு நல்ல பழக்கம்,கொஞ்சம் நல்லா பேசக்கூடிய ஆள்க, சரிநீங்க இல்லைன்னு போன வேகத்துல படக்குன்னு வந்துறவும் முடியாது.ஒங்க கூட வேலை பாக்குற இன்னொருத்தர் இருப்பாரே,அவரு கூட சும்மா ஒப்புக்காக பேசிக்கிட்டு இருந்தேன்,

“பேசிகிட்டே இருந்தவரு ஏங் கைய காண்பிக்கச்சொன்னாரு, என்னத்துக்காக இப்பிடி கேக்குறாருன்னு தெரியாம நானும் தயங்கி தயங்கிதான் குடுத்தேன் கைய,சரி ஒரு பெரிய மனுசன் கேக்குறாரேன்னு நெனைச்சி/சரி நம்ம கரி மருந்து வேலை செய்யிறதுனால கையிக்கு ஏதாவது வந்துருக்குமோன்னு பாத்து சொல்லப்போறாக்கும்முன்னு குடுத்தா,,,, அவரு பாருங்க தம்பி விரிச்சி காண்பிச்ச கைய தடவுனவரு ஓங் கையி ரொம்ப காய்ச்சிப் போயிருந்தாலும் பாக்குறதுக்கு ரொம்ப சாப்டா இருக்குன்னு சொல்லீட்டு கைய தடவிக்கிட்டே இருந்தாரு,

“நான் படக்குன்னு கைய பின்னாடி இழுத்துக்கிட்டவ இந்த சாப்டான கையால கன்னத்துலஒண்ணு குடுத்தா எப்பிடி இருக்குமுன்னு தெரியுமான்னு சொல்லீ ட்டு ஓடி வந்துட்டேன்,

”வந்த வேகத்துல ஒண்ணும் செய்யத்தோணாம அப்பிடியே கட்டுல்ல ஒக்காந் துட்டேன்,சோறு தண்ணி எதுவும் சமைக்கத்தோணல,,,ஒரே அழுகையா வந்துருச்சி ,புருசன் செம்மையா வாய்க்காத வீடுதான்னாலும் கூட நானென்ன போறவன் வர்றவன் கூடயெல்லாம் படுத்தெந்திருக்கிறவளா தம்பி,கட்டுன புருசனா இருந்தாலும் விருப்பம் இருந்தாத்தானதம்பி,,,,?” என நிறைய புலம்பி யவள்,,,நான்அஞ்சுபத்துன்னு கூலிக்கு அலையிறவதான் தம்பி, ஆனா மானத் துக்கு பஞ்சமில்லாம வாழ்றவ,

“பயர்ஆபீஸில இப்பிடித்தான் ஒருத்தன் யெசக்கேடா பேசிட்டான்னு செருப்பக் கழட்டி அடிச்சிட்டேன் தம்பி, அன்னைக்கிலயிருந்து அவன் எப்ப என்னைய பாத்தாலும் ஒரு பத்தடி தள்ளிதான் நடப்பான்,எனக்குதான் ஒரே பாவமா போச் சி அவனப்பாக்கும் போது,,/

“அட வாப்பா ஒனக்கு என்ன ஏங்க மகன் வயச விட ஒரு அஞ்சி ஆறு வயசு கூட இருக்குமா,,,? கல்யாணம் பண்ணி நல்லா வாழ வேண்டிய வயசு,கண்ட படிக்கி மனச இப்பிடி அலை பாய விடாத,நீயி என்னைய அப்பிடி லேசா நெனைச்சி பேசுற அளவுக்கு நீ ஒண்ணும் குபேரனும் இல்ல,நான் ஒண்ணும் பிச்சைக்காரியும் இல்லை, பிச்சைக்காரின்னாக் கூட அப்பிடிப் பாத்துருறக் கூடான்னு சொல்றவ நானு, நீயும் நானும் ஒரே ஜாதிதானப்பா ஒழைக்கிற ஜாதி,வேலை செஞ்சாத்தான் இங்க சம்பளம்,மாறா வேற ஏதாவது செய்ய ணுமின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தா வேற மாதிரி ஆகிப்போகும் பாத்து க் கன்னு சொன்னேன்,

“அன்னையில இருந்து ஒரு ரெண்டு மாசத்துல அவனும் கல்யாணம் பண்ணி பொண்ணெடுத்த ஊருப் பக்கம் போயிட்டான். கல்யாணத்தன்னைக்கி பொண் ணுக்கு அம்மா ஸ்தானத்துல என்னையத்தான் கூட்டிக்கிட்டு போயி நிக்க வச்சான், எனக்குன்னா ஒரே ஆச்சரியமா போச்சி அப்பிடி இருந்த பையலுக் குள்ள இப்பிடியும் ஒருத்தன் இருந்துருக்கானேன்னு,,,/

“கல்யாணம் முடிஞ்சி போகும் போது பொண்டாட்டிய கூப்புட்டுகிட்டு ஏங் வீடு தேடி வந்துட்டான்,வந்தவன் அக்கான்னு ஒங்களச்சொல்ல எனக்கு அருகதை இல்லாட்டிக்கூட விருதாவாதிரிஞ்ச என்னைய,கேப்பாரு பேச்சு கேட்டு கெட்டு தூர்ந்து போயிருந்த என்னைய ஒங்க சொல்லு திரித்தீருச்சி,இனி நா நல்லா இருபேன்,போறேன் ஊர விட்டுன்னு அழுகையோட போனான்,

“நம்மஅப்பிடியெல்லாம் ஊர் பயலுக நல்லா இருக்கணுமுன்னு நெனைப்போட இருக்கும் போது நம்மளையே வந்து போட்டுப்பாக்குறாருன்னா அவரு எந்தள வுக்கு இருப்பாருன்னு யோசிச்சிப் பாருங்க,தம்பி,எனக்கு வந்த வேகத்துல ஊரக்கூட்டிஅவர அசிங்கம் பண்ணீறலாமு ன்னு நெனைச்சேன். சரி வேணாம் ஏதோ புத்தி கெட்டுப்போயி பண்ணிட்டாருன்னு நெனைச்சி அப்பிடியே வந்துட் டேன்,

“அன்னையில இருந்து நானும் ஒங்க ஆபீஸ் பக்கம் வரல,நீங்களும் ஏங் வீட்டுப் பக்கம் வரல,சரி விஷயம் தெரிஞ்சிதான் வராம இருக்கீங்க போலயி ருக்குன்னு நானும் இருந்துட்டேன்,நீங்க என்னடான்னா ஒண்ணும் தெரியா தது போல ஏங்கிட்ட வந்து எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருக்கீங்க,

“விடுங்க தம்பி நானும் மறந்துட்டேன் அந்த சம்பவத்த,நடந்ததையே நெனைச் சிக்கிட்டு இருந்தா நம்ம பொழப்ப கவனிக்கணுமில்ல, சரி போற வழியில பறவை எச்சம் போட்டுருச்சின்னு நெனைச்சி விட்டுட்டேன். என்று சொன்ன திலகம் அக்கா என்னில் கொஞ்சமாக உயர்ந்து நிற்கிறாள் இன்று வரை,,,/

முக்கு ரோட்டில் இறங்கிய கனியண்ணனிடம் கொடுக்க வேண்டிய பொருளை கொடுத்து விட்டு கடையில் டீக்குக்கும் போதுதான் கவனிக்கிறான்,

அந்தக் கடையில் மொச்சை இருந்ததை/

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான வர்ணிப்பு...!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்கருத்துரைக்குமாக.


vimalanperali said...

அன்பும் பிரியமும்,,,/

iramuthusamy@gmail.com said...

சிறப்பாக வந்துள்ளது.

vimalanperali said...

அன்பும் பிரியமும்!