10 Jun 2018

மென்துளைக்காற்றாய்,,,,/


காலையில் எழுந்ததும் சமையல் அறை முகத்தில் முழிப்பதுதான் இவனது வழக்கமாய் இருக்கிறது இன்றுவரை,

எழுகிறதுதான் எழுகிறான் ,கொஞ்சம் சீக்கிரமாக எழக்கூடாதா,,,,,? மனைவி யும் சொல்லிப்பார்த்து விட்டாள் ,காலை யில கொஞ்சம் சீக்கிரமா எந்திருக்கக் கூடாதா என,,,/

அவனுக்கு எழக் கூடாது என பெரிய அளவிலான ஆசையெல்லாம் இல்லை, முடியவில்லைஎன்பதேநிஜமாகியும்மிகப்பெரியசங்கடமாகவும் ஆகிப்போகிறது.

”எனக்கு மட்டும் என்ன சீக்கிரம் எந்திரிக்கக்கூடாதுன்னு ஆசையா என்ன, இல்ல எதுனா வேண்டுதலா,,,,?வராத தூக்கத்த எப்பிடி கயிறு கட்டி இழுத்துக் கிட்டா வரச் சொல்ற,,,? என்ன காரணமோ தெரியல ,இல்ல என்ன மாயமுன் னும் தெரியல,இமைகள சேத்து வச்சி கட்டுனாக்கூட வர மறுக்குற தூக்கத்த எங்கிட்டுப்போயி கொண்டு வரச்சொல்ற,,,சொல்லு,,?”

”அது அப்பிடித்தான்னு ஆகிபோச்சி, எனக்குத் தெரிஞ்சி ரெண்டு இல்ல மூணு வருஷம் இருக்கும்,ராத்திரி சீக்கிரம் தூங்கி, காலையில சீக்கிரம் எந்திரிச்சி,

”வட்டமா இருக்குற சுவர்க்கடிகாரம் தனக்குள்ள மூடிஅடை காத்து வச்சிருக் குற சின்ன முள்ளும் பெரிய முள்ளும் அது கூட அலுப்பு காட்டாம கை கோர்த்து ஓடிக்கிட்டு இருக்குற விநாடி முள்ளும் ஒண்ணா சேந்து அம்புக் குறியிட்டு காண்பிக்கிற நேரங்கள் ராத்திரி கொஞ்சம் தாமதமாத்தான் ஆகித் தெரியுது எனக்கு,

“நானும் என்னதான் செய்யட்டும் சொல்லு,படுக்கையில படுத்துக்கிட்டு இமைகள இழுத்து இழுத்து மூடுனாக்கூட தூக்கம் கண்ணுக்கு கிட்டத்துல வந்து கூட எட்டிப்பாக்க மறுக்குது ,என்ன செய்யலாம்,வராதத வம்பா வர வழைக்கலாமுன்னு பாத்தா அது வர முடியாதுன்னு பூச்சிக் காட்டுது. பூச்சிக் காட்டுறது மட்டுமில்லாம எங்கெங்கயோ கூட்டிக்கிட்டு போய் வருது, கூட்டுக் கிட்டு போயிவர்றது என்னெத்தையோ கூடச்சேத்துக்கொண்டாந்து மனசுக் குள்ளஉக்கார வச்சிட்டுப்போயிருது.உக்காந்தத எந்திரிச்சி போக வைக்கி றதுக்குமுன்னாடி போதும் போதுமுன்னு ஆகிப்போகுது,

“ஒண்ணுஅப்பிடி ஒக்காந்த எண்ணங்களுக்கு அடி பணிஞ்சி போக வேண்டி இருக்குது ,இல்லைன்னா அதக்கூட்டிக்கிட்டு சங்கடம் காட்டி அலைய வேண் டியிருக்கு,இத விட்டாஅந்த நேரத்துல இருக்குற வழி ஒண்ணு டீ வி பாக் குறது இல்லைன்னா புத்தகம் படிக்கிறதுதான்,

“இதுல டீ வி பாக்குறதுன்னா வீட்ல தூங்கிப்போன எல்லாருக்கும் சங்கடமா இருக்கும்அவுங்க தூக்கத்துலயிருந்து முழிச்சி யெசகு பிசகா ஏதாவது சாபம் விடுறதுக்கு ,பேசாம புத்தகம் படிக்கிறது பெட்டர்ன்னு புத்தகம் படிக்க ஆரம்பி ச்சிருவேன்,

“அது என்ன புஸ்தகம்ன்னு இல்லை,குமுதம் ஆனந்த விகடன் இல்லைன்னா ஏதாவது மனம் பிடிச்சவங்களோட சிறுகதை தொகுப்பு நாவல்ன்னு எதையா வது கையில் பிடிச்சிக்கிட்டு பாயில சாய்ஞ்சிருவேன்” என்பான் மனைவியி டம்/

தூரத்து ஸ்னேகிதத்தில் கைகோர்க்கிற மித்ரா அக்காகூட கேட்பாள்,”என்ன தம்பி இன்னும் பாயிலையா படுத்துத்தூங்குறீங்க,ஆச்சிரியமா இருக்குப்பாஏங் பேத்திக்கு நாலு வயசுதான் ஆகுது,அவ படுத்துற பாடு அடேயப்பா,படுத்தா பெட்லதான் படுப்பேன் இல்லைன்னா ஓங் தோள்மேலயே படுத்துக்கிறேன்னு வம்பு பண்ணுவா,அவளுக்காக வீட்ல கெடந்த கட்டில்ல ஒரு பெட்ட வாங்கிப் போட்டேன்,அதுகளுக்கு இப்பயே அப்பிடி ஒரு சௌகரியம் கேக்குது பாத்துக்க” என்பாள்.

அது மட்டுமல்லாது உடன் இணைப்பாக கொஞ்சம் கொசுறுகளை சேர்த்து நூல் கோர்த்து விடுவாள்,அவளுக்கு நூல் கோர்ப்பதில் எப்பொழுது கொஞ்சம் அலாதி பிரியம் உண்டுதான்,என்ன கோர்க்கும் நூல் அறுந்து போகாமலும் பசையிட்டு பூசப்படமாலும் மாஞ்சா வகைகளை ஒட்ட வைத்துக்கொண்டு காட்சிப்படுத்தாமலுமாய் இருக்கிறவரை பாதிப்பு யாருக்கும் இல்லை என்கிற அளவில் இவனும் ”சரி சரி என போய் வர்றேன் அக்கா” என வந்து விடு வான்,

மித்ரா அக்காவிற்கு பக்கத்துத்தெரு பூச்சையன் அண்ணன் மீது ஒரு கண், அவன் மீது இருக்கிற ஆசையை தன் தங்கையிடம் சொல்லி வெளிப்படுத்து வாள், இல்லையானால் இருக்கிறதே இருக்கு சினிமாப்பாடல்கள்,பழைய சாவித்திரி ஜெமினிகணேசன் நடித்திருக்கும் காதல் பாடல்களுக்கு இவளுக் காகவே கண்ணதாசன் உயிர் கொடுத்திருப்பதாய் நம்பினாள், நம்புவ தோடு மட்டுமில் லாமல் அவ்வப்பொழுதுகளில் வெளிப்படுத்தவும் தவறுவதில்லை.,

அது மட்டுமில்லை வேறு யார் எழுதிய பாடல்களுக்கும் சரி பி.பி சீனிவா சனும் சுசிலா அம்மாவும் தங்கள் குரலால் உருக்கி ஊற்றியிருப்பது தனக்கா கவே என முழுதாக நம்பினாள்,

அப்படி நம்பவில்லையானாலும் கூட பைத்தியம் பிடித்து விடும் போலிருக் கிறது மித்ரா அக்காவிற்கு.அக்கா என்னக்கா பழைய காதல் நினைவா,,,,, என்றால் இல்லாப்பா என்பாள்,

போக டேய் விடுறா ஒரு அக்காகிட்டபோயி இதெல்லாமா கேக்குறது மடப் பையலே என்பாள்.

”ஆமாமாம் நானா கேக்காட்டியும் கூட நீயா வந்து சொல்லத்தான போற கொஞ்ச நேரத்துல” என்னும் போது சிரிப்பாள் கொஞ்சமாய் வெட்கப்பட்டு.

”அடப்போடாஒனக்கென்னதெரியும்,அவரும் நானும்பெரியஅளவுல ஒண்ணுக் கொண்ணு பேசிக்கிட்டது கூட கெடையாது,எதுத்தெத்தாப்புல பாத்து சிரிச்சிக் கிட்டது கூட கெடையாது,இப்ப இருக்குறது போல அப்பயெல்லாம் வண்டி செல்போனு மத்த ஈ மெயிலு இண்டர்நெட்டுன்னு கெடையாது தம்பி, ஒருத் தருக் கொருத்தரு பாத்துக்குறதுக்குள்ள பாதி உசுர் போயி உசுரு வரும்,

”ஒருத்தரு பார்வைக்காக ஒருத்தரும் ஒருத்தர் பேச்சுக்காக ஒன்னொருத்தரும் நாள்கணக்காக்கூடகாத்துக்கிட்டுஇருப்போம்,ஒருகண்பார்வைக்காகஏங்கிட்டுக் கெடந்த காலங்களெல்லாம் உண்டு,

“அப்பிடியாப்பட்டவர கடைசியா நான் பாத்ததது ஒரு ஹோட்டல்ல வச்சி, என்ன நல்லாயிருக்கீங்களான்னு கேக்க வந்த அவர கேக்க விடாம அவரு போட்டுருக்குற சர்வர் ட்ரெஸ் தடுக்குது, அந்த வார்த்தைய வாங்கி நெஞ்சுக் குள்ள வச்சிக்கிறணுமின்னு நான் தவியா தவிக்கிறேன்,முடியல,

அந்த நேரத்துல,நானு அம்மா ரெண்டு பேரு மட்டும் போருக்கிறோம் கடைக் கி, அப்பயெல்லாம் கடையில போயி சாப்புடுறதுங்குறது பெரிய விஷயம், பஜாருக்கு போயிட்டு வந்த அம்மாவும் நானும் அப்பிடியே கடைக்குள்ள நொ ழைஞ்சிட்டம்,இத்தனைக்கும்பசி கூட பெரிய அளவுல இல்லை,கொஞ்ச நேரம் நடந்தா வீட்டுக்குவந்துடலாம்,அப்பிடி இருந்தும் கூட அன்னைக்கி அம்மா கடைக்கி கூட்டிக்கிட்டுப் போனது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமா போச்சி, என்னடா இதுன்னு,,/

”கேட்டாலும் கூட்டிக்கிட்டு போக மாட்டா, இன்னைக்கி என்னஇப்பிடி ரொம்ப கரிசனை காட்டுறான்னுபெரியசங்கடமாப்போச்சி எனக்கு, கேட்டதுக்கு சொ ல்றா இன்னும் கொஞ்ச நாள்ல வேற வீட்டுக்குப் போகப் போற,”அங்கன இதெல்லாம் வாய்க்குமோ வாய்க்காதோ தெரியல அதுனால இங்க இருக்கும் போதே இதெல்லாம் சாப்புட்டுக்கோன்னாங்க,சரின்னு நானும் மறுப்புச் சொல் லாம சாப்புட்டேன் அன்னைக்கி.ஒரு தோசையும் ரெண்டு இட்லியும் சாப்புட் டதா நெனைப்பு,அதுக்கு போட்ட பில்லே அத்துக்கிட்டு போயிருச்சி/

அவுங்க போட்ட பில்லு தொகைக்குவீட்டுல இருக்குறமொத்தப் பேரும் சமை ச்சி சாப்புட்றலாம்போலிருந்தது.

”ஹோட்டலுக்குள்ள நொழஞ்சதும் கையக் கழுவீட்டு வந்துடேபிள்ள ஒக்காந் தோம் நானும் அம்மாவும்.அவருதான் நாங்க ஒக்காந்துருக்குற டேபிளுக்கு பரிமாறவந்தாரு,என்ன வேணுமின்னு தலைய கவுந்துக்கிட்டே கேட்டவரு ஏங் குரலை கேட்டதும் அப்பிடியே வேர்த்து விறுவிறுத்துப் போனாரு. அடுத் து அவருக்கு பேச்சும் ஓடல, என்ன செய்யிறதுன்னும் தெரியல ,அப்பிடியே கொஞ்ச நேரம் ஆணியடிச்சாப்புல நின்னவரு நகண்டு போயி நடை பொணமா த்தான் எங்களுக்கு தேவையானத கொண்டு வந்தாரு,

“கொண்டு வந்தவரு என்ன இப்பிடி பண்ணீட்ட நான் ஒருத்தன் ஒனக்காக இங்க காத்துக்கிட்டு இருக்கும் போது நீயி வேற வீட்டுக்கு வாக்கபட்டுப் போகப் போறயாமில்லன்னு கேட்டு ஒரு கடுதாசிய எழுதிக்குடுத்துட்டு கெளம்பீட் டாரு,வாழையெலையோடவாழையெலையா ஒரு துண்டுயெலையில அவரு எழுதி கொண்டு வந்துருந்த வாழையெல கடுதாசிய அம்மாவுக்குத் தெரியாம பொடவ முந்தானையில முடிஞ்சி வச்சிக்கிட்டு வந்து வீட்ல கொண்டாந்து படிச்சேன், திரும்பத் திரும்பப்படிச்சப்பவும் கூட எனக்கு புரியாததா ஒண்ணு மட்டுமே அதுல இருந்தது,

“வேற வீட்டுக்கு வாக்கப்பட்டு போறேன்னு எழுதீருக்காறே,அதுதான் மனசப் போட்டு வாதிச்சிக்கிட்டே இருந்துச்சி,என்ன செய்ய நானு,நான் குடியிருக்குற வீட்டுக்குள்ள எனக்கே தெரியாம இப்பிடி ஒரு ஏற்பாடு நடக்கும் போது ரொம்ப வேதனையா இருந்துச்சி,என்ன செய்ய பின்னே இப்பப் போல அப்பா அம்மா முன்னாடி போயி நெஞ்ச நிமித்தி பேசிறல்லாம் முடியாது அந்த நேரத்துல, மிஞ்சி மிஞ்சி போனா எங்க சந்தோஷம் அழுகை சொகம் துக்கம் ,,இன்னும் இன்னுமான்னு நாங்க பகிர்ந்துக்கிட்டு நிக்கிற யெடம் அம்மாங்குற உயிர்கிட்ட மட்டும்தான்.

”அப்பஎங்களுக்கான உயர்ந்தபட்சஉரிமை செலுத்துற யெடமா அவுங்க மட்டும் தான் இருந்தாங்க,அப்பாகிட்ட பேசுறதுங்குறது குதிரைக் கொம்பு.மீறி ஏதாவது வாயத்தெறந்தா என்ன பொம்பளப் புள்ளைக்கு இவ்வளவு நாட்டாமையும் பேச்சும்,,,ன்னு சட்டுன்னு மண்டையில வந்து விழும் அடி,விழுகுற அடி மண்டை தாண்டி உள்ளுணர்வு வரை போயி தைக்கும் அதுக்கு சங்கடப்பட்டுக் கிட்டே எதுவும் பேசுறதில்ல,தவுர அப்ப வீடுகள்ல அவ்வளவுதான் எங்களு க்கான உரிமையும் கூட/”

“இந்தா இருக்குற பத்து கிலோ மீட்டர் தூரம் பஸ்ஸுல போயிட்டு வர்றதுக்கு எங்களுக்கு அனுமதி கெடையாது தெரிஞ்சிக்க,

“அப்பத்தான் சைக்கிள கைக்குள்ளயும் பைக்குள்ளயுமா வச்சிட்டு அலைஞ்சது போல அலைஞ்ச அவரு எனக்குள்ள பெரிசு பட்டு தெரிஞ்சாரு, பள்ளிக் கூடத் துக்கு எங்க தெருவழியாத்தான் போவாரு வருவாரு,அவருக்கு அப்ப இருந்த ஒரே கனவு படிப்பு படிப்பு படிப்புதானே தவிர்த்து வேறெதுவும் பெரிசா இருந் ததா தெரியல, ஆனா அப்பிடியாப்பட்டவருக்குள்லயும் என்னைப்பத்துன ஒரு நெனைப்பு மெல்லிசா ஓடிக்கிட்டு இருந்துக்குங்குறது போகப்போக அவரு நடவடிக்கை மூலமா எனக்கு தெரிய வந்துச்சி,

”அப்பப்ப ஒரு பார்வை,ஒரு சிரிப்பு இவ்வளவுதான் அவரு ஏங் மேல ஆசையா இருக்காருங்குறத வெளிக்காண்பிக்கிறசைகையாஅமைஞ்சி போகும். நானும் இத மொதல்ல பெரிசா எடுத்துக்கிறல எனக்குள்ள எந்தவித பாதிப்பும் ஏற் படுத்தல அது, நாள் போகப்போகத்தான் ஆறாத வடுவா ஆகிப் போச்சி அவரோட பார்வையும் அந்த மெலிசான சிரிப்பும்,/

“அது ஏற்படுத்துன பாதிப்புல இருந்து மீள்றதுக்குள்ள நான் முழுசா என்னை யும் அறியாம அவருக்குள்ள விழுந்துட்டேன்,அவரு கிட்ட என்னைய இழுத்து தது எதுன்னு தெரியாட்டிக் கூட பத்துகிலோ மீட்டர் வரைக்கும் கூட சேந் தடியா பஸ்ஸீல பயணம் பண்ணி போயிக்கிட்டு வந்து பழகாதவ அவரு சைக்கிள் ஓட்டுற ஸ்டைல்லயும் உடுத்தியிருக்குற சோக்குலயும் அசந்து போயிட்டேன்னு சொல்லலாம்.

”அவரு பெரிசா படிச்சி பெரிய உத்தியோகத்துக்குப் போயி கைநெறைய சம்பா திச்சி என்னைய ராணி மாதிரி வச்சி காப்பாத்தனும்ன்னு ஆசையெல்லாம் கெடையாது. அம்பது ரூபாய்க்கு ஒரு நூல் பொடவை எடுத்துக் குடுத்தாலும் போதும் அத கட்டிக்கிட்டு காலம் கடத்தீறலாமுன்னு கனவு காண ஆரம்பிச் சிட்டேன்,

“அவருஅந்த நேரத்துலபத்தாப்பு பாஸ் பண்ணி பி யூ சி போறதுக்காக காத்துக் கிட்டு இருந்த நேரம்,அந்த காத்திருப்புக்கு பலன் கெடைக்காம போச்சி,

”அவுங்க வீட்டுல படிச்சது போதும் இனி ஒன்னைய படிக்க வைக்க எங்களுக்கு வசதி போதாதுன்னு அவர வேலைக்கு அனுப்பனும்ன்னு முடிவு பண்ணீ ட்டாங்க, அவருன்னா பீ யூ சி படிக்கப்போறப்ப போட்டுக்குறக்காக ஒரு பெல் பாட்டம் பேண்டும் கழுதக்காலர் வச்ச சட்டையும் தைச்சிட்டாரு, பீ யூ சி படிக்க அப்ளிகேஷன் வாங்கியும் வச்சிட்டாரு,அதக் கொண்டோயி அவுங்க அப்பா
கிட்ட கையெழுத்து வாங்கப்போகும் போதுதான் அவுங்க இந்த முடிவச் சொல் றாங்க,

அவரும் என்னென்னெமோ கெஞ்சிப்பாத்துருக்காரு அவுங்க அப்பா அம்மா கிட்ட,கெஞ்சுனஅவரு முன்னாடி அம்மாவும் அப்பாவும் குடும்ப நெலைமைய தூக்கிப் போட்டு படமாவிரிச்சிக்காமிச்சிருக்காங்க,வேற வழியில்லாம அரை மனசோட சம்மதிச்ச அவரு ஹோட்டலுக்கு வேலைக்கு போறதுக்கு மொத நாளு பீ யூ சி படிக்கிறதுக்காக தச்சி வச்சிருந்த பெல்பாட்டம் பேண்டையும் கழுதக்காலர் சட்டையையும் போட்டுக்கிட்டு எங்க தெருவழியா ஒரு நா பூரா சுத்திக்கிட்டு இருந்தாரு,சைக்கிள்ல /

“அப்பிடியே அதப்போட்டுக்கிட்டுவேலைக்கும் போயிருக்குறாரு.அந்த ஹோ ட்டல் மொத லாளி இப்பிடியெல்லாம் பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு வேலை க்கு வரக் கூடாது,ஒனக்குன்னு யூனிபார்ம் தருவோம் அத போட்டுகிட்டுதான் வேலை பாக்கணுமுன்னு சொல்லீற அன்னிக்கோட அந்த பேண்ட் சர்ட் போட் டத விட்டவரு அன்னைக்கி நைட்டே வந்து பேண்டையும் சட்டையையும் தீயில போட்டு எரிச்சிட்டாரு,

அன்னைக்கி அந்த தீயில எரிஞ்சது அவரோட பேண்ட சட்டை மட்டுமில்ல, பரஸ்பரம் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருந்த எங்க ரெண்டு பேரு ஆசையும் கூடத்தான்,

“அதுக்குப்புறமா நான் இப்ப ஒரு பக்கமா ஓங்கிட்ட நின்னு பேசிக்கிட்டு இருக் கேன், அவரு இப்ப எங்க இருக்காருன்னு தெரியல,ஆனா அவரு ஞாபகம் மட்டும்காத்துல கலந்து மெதந்து வர்ற அலையாட்டம் அப்பப்ப வந்து அலைக் கழிக்கிது,அவருக்கும் அப்பிடித்தான் இருக்குமுன்னு நெனைக்கிறேன், இருக்க ட்டும் மிகைப்பட்டுப் போகாத இந்த நெனைப்புக நம்ம குடும்பங்க மத்தியில இருக்கும்ன்னு நெனைக்கிறேன்,எனச்சொல்கிற மித்ரா அக்கா பீ பீ சீனிவா சையும் சுசீலா அம்மாவையும் கூட்டிக்கொண்டு போகிறாள் இவனுடன் பேசி முடித்து விட்டு/

என்ன இப்பிடி எந்திரிச்சதும் சமையல்க்கட்ட சுத்திச்சுத்திவர்றீங்க எனக்கேட்ட மனைவியிடம் விஷயத்தைச்சொன்னதும் இவனை வாஞ்சையுடன் ஏறிட்ட வள் தோளில் சாய்த்து கொண்டு தலை கோதி விட்டு போய் உட்காருங்கள் டீக்கொண்டுவருகிறேன் என்றாள்.

5 comments:

இராய செல்லப்பா said...

மித்ரா அக்காவின் காதல் கதை சோகமயமானது. உம்...நம்மைச் சுற்றி எவ்வளவு மித்ரா அக்காக்கள் இருக்கிறார்களோ!

இராய செல்லப்பா சென்னை

திண்டுக்கல் தனபாலன் said...

நடந்த நிகழ்வா...?

vimalanperali said...

நிறைந்து போன மித்ரா அக்காக்களை
அடை கொண்ட குடும்பங்கள்
நம் கண்முன்னே அன்றாடம்,
நன்றியும் அன்பும் சார் வருகைக்கு/

vimalanperali said...

அன்பும் பிரியமும்,,,/

vimalanperali said...

இச்சமூகத்தில் எங்காவது நடந்த
நிகழ்வின் பதிவு கொண்ட சாயலாகத்தானே
இது இருக்க முடியும்,,?
தவிர இது போலும் இதற்கு சற்றும்
குறைச்சலும் இல்லாமல்
இச்சமூகமெங்குமாய்
விரவிக் கிடக்கிற நிகழ்வுகளுக்கு
பஞ்சமில்லை.