21 Sept 2018

கொடிபடர்ந்த வேர்கள்,,,/

வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தான்.

அவனது மனதில் அந்த எண்ணம் தோன்றிய நேரம் கொஞ்சம் வழக்கமாய் சாப்பிடுகிற நேரத்தின்எல்லைதாண்டித்தான் ஆகியிருந்தது,

“எல்லை என்ன பெரியஎல்லை,,,? நாம பாத்து வச்சிக்கிறதுதான எல்லை. அது வும் நீங்க எல்லைவச்சிருக்க லட்சணத்தப் பத்தி தெரியாதாக்கும் எனக்கு/பசி நேரம் இது,இந்த நேரத்துல சாப்புடணும்,இந்த நேரத்துல தூங்கணும், இந்த நேரத்துல எந்திருக்கணுமுன்னு இருக்கு, இது மூணுமே ஒங்களுக்கு அலர்ஜி, ஆகாது,தட்டுல சாப்பாட போட்டு வச்சிட்டு சாப்புட வாங்கன்னு சொல்லும் போதுதான் செல் போன நோண்டுவீங்க,அதுல ஏதாவது முக்கியமானதுன்னா அப்பிடியே அதத் தூக்கீட்டு வெளிய போயிருவீங்க,ஒண்ணு அதுல யார் கூட யாவது பேசுவீங்க,இல்ல வாட்ஸ் அப் ,அது இதுன்னு ஏதாவது பாத்துக்கிட்டு இருப்பீங்க, இல்லைன்னா டீ,வி,அபூர்வமா எப்பயாவது டீ வி பாத்தாலும் கூட நியூஸ் சேனல்ல ஏதாவது விவாதம் ,இல்ல வேற ஏதாவது சேனல்ல நல்ல படம்,இல்ல மனசுக்கும் காதுக்கும் இனிமையான பாட்டுன்னு ஏதாவது இருந் துச்சின்னு வையிங்க ,அதுலயேயே கறைஞ்சி போயிருவீங்க,நான் ஒங்களுக் காக போட்டு வைச்சிருந்த சாப்பாட எடுத்து கிச்சன்ல்ல வைச்சிட்டு தூங்கப் போயிருவேன், மறுநாளு காலையிலதான் சொல்லுவீங்க, டீ வியில பாத்துக் கிட்டிருந்த படம் அப்பிடியே மனச மடக்கிப்போட்டு உக்கார வச்சிருச்சி, கேட்டுக்கிட்டிருந்த பாட்டு அப்பிடியே ஓடி வந்து தாலாட்டி ஒட்டிக்கிருச்சி/ விவாதம் புதுசா நிறையா விவரம்சொல்லீட்டுப்போச்சி,,,,,,ன்னு ஏதாவது சொல்லுவீங்க, நானும் சரி சரின்னு கேட்டுக்குறுவேன் ஆத்தமாட்டாம,

“என்ன செய்யிறது வேற வழியில்ல, ஏதாவது மறுப்பு தெரிவிச்சி பேசுனாலோ இல்ல மறு பேச்சு பேசுனாலோ ஒங்களுக்கு மொகம் சுருங்கிப் போகுது. அதுனாலயே நானும் ஒண்ணும் பேசுறதில்ல,ஆனா நீங்க விடாம நீயும் ஏங்கூட முழிச்சிருந்து படம் பாத்துருக்கலாம், பாட்டுக்கேட்டுருக்கலாம், விவாத நிகழ்ச்சிய கேட்டுருக்காலாமுன்னு சொல்லுவீங்க,நானும் மனசுக் குள்ள யோ வெளிபடையாவோ சிரிச்சிக்கிட்டு சரி சரின்னு தலையாட்டிகிட்டு அரை மனசா ஒங்க சொல்ல ஏத்துக்கிட்டும் புறக்க ணிச்சிட்டுமா இருந்துருக் கிருவேன்,

“நீங்க சொல்லுற மாதிரி எனக்கும் நல்ல படமும் மனசு நெறைஞ்ச பாட் டுகளும் நல்ல கருத்தோட்டமான விவாதங்களும் இன்னும் பல நிகழ்ச்சிக ளும் கேக்கணுமுன்னு ஆசைதான்,ஆனா அப்பிடி ஒங்களோட சேந்து நானும் கேட்டுக்கிட்டு உக்காந்துருந்தேன்னு வையிங்களேன்.மறுநாளு வீடு நின்னு போகும்,

“பாத்திரம் வெளக்குறதுல இருந்து,துணி துவைக்கிறதுசமையலுன்னு,,,எல்லா வேலையும் அப்பிடியே போட்டது போட்ட படி நின்னு போகும்.அதுனாலத் தான் நான் அந்தது எல்லாம் பாக்குறதில்ல,அதுக்கெல்லாம் சேத்து வைச்சி பகல்ல பாத்துக்கிறேன்,நேரமிருக்கும் போது என்பவள் இது எனக்கு மட்டுமா கிட்டத்தட்ட என்னையப் போல இருக்குற பொம்பளைக்கெல்லாம் நடக்குறது தான்,என்ன வெளியில சொல்லாம கௌரவமா இருக்குறதுனால ஒங்களப் போல உள்ளவுங்க வண்டியெல்லாம் ஓடிக்கிட்டு இருக்கு என்பாள்.

”நேத்து அப்பிடித்தான் ஆபீஸ் முடிஞ்சி சாயங்காலம் நேரடியா ஒரு மீட்டிங் குக்கு போறேன்,வீடு வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகுமுன்னு சொன்னீங்க, சரின்னு நானும் புள்ளைங்களும் சாப்புட்டுட்டு காத்துருந்தோம்,வந்தீங்க ராத்திரி ஒன்பதரைக்கு மேல,வந்தவரு அதுக்கப்புறமா பாத்ரூம் போயி குளிச்சி முடிச்சிட்டு வர்றதுக்கு பதினோரு மணிக்கு கிட்டத்துல ஆகிப்போச்சி, அதுக்கப்பறம் ஒங்களுக்கு சாப்பாட எடுத்து வச்சிட்டு தூங்கப்போகும் போது பணிரெண்டு மணியாகிப்போகுது,

“நான் தூங்கிப் போனதுக்கப்புறமும் நீங்க கம்ப்யூட்டர்,செல்போனு டி,வீ ன்னு ஏதாவது பாத்துக்கிட்டு இருப்பீங்க,அதுக்கபுறம் நீங்க தூங்கிகாலையில எந்தி ரிக்கும் போது மணி எட்டுக்கு மேலாகிப்போகும்,

“அதுக்கபுறமாகுளிச்சி முடிச்சி அவசர அவசரமா ஆபிஸீக்கு ஓடுவீங்க,இப்பிடி கால்ல சக்கரத்த கட்டீட்டு ஓடுறதுல மட்டுமே குறியா இருக்குற நீங்க ஏன் நேரம் தவறாமையும்,ஒங்களது தனிபட்டஒழுக்கத்தயும் கடைபிடிக்கிறதில்ல, நேரத்துக்கு சாப்புடறதில்ல,நேரத்துக்கு தூங்குறதில்ல,நேரத்துக்கு எந்திரிக்கிற தில்ல.,,ரிலாக்ஸா குளிச்சிட்டு சாப்புட்டுட்டு ஆபிஸீக்கு போறதில்ல, எப்பப் பாரு எதுலயுமே ஒரு அவசரம்,பரபரப்பு,ஓட்டம்ன்னு இருக்கீங்க,நீங்க ரிலாக் ஸா இருக்குற ஒரு நேரம் எதுன்னா ராத்திரி சாப்புடும் போது மட்டும்தான், அப்பத் தான் ஏங் கூட பேசுவீங்க,ஆனா ஒங்க பேச்சக்கேக்குற அளவுக்கு எனக்கு பொறுமை இருக்காது,நான் நல்ல தூக்க மொகச்சியில இருப்பேன். நீங்க பேசுற பேச்சு பாதி காதுல விழும்,மீதி காத்துல கரைஞ்சி போயிரும், தண்டனையே ன்னு நீங்க சாப்புட்டு முடிக்கிற வரைக்கும் ஒங்க பேச்சக் கேட்டுக்கிட்டு அப்பிடியே ஒக்காந்துருப்பேன்,இதுல ஐயா சமயத்துல தண்ணி யோடவந்துருவீங்க,புள்ளைங்கெல்லாம்தூங்கீட்டாங்களான்னுகேட்டுக்கிட்டு, “இப்பிடி எதுவுமே சரியா கடை பிடிக்க மாட்டேங்குறீங்க ஒங்க தனிப்பட்ட விஷயத்துல என்பாள் சற்றே, கோபத்துடனும் அறஞ் சீற்றத்துடனுமாய்/

தற்பொழுது புழக்கத்திலுள்ள இணையமும் கைபேசியும் மற்ற மற்றதான காட்சி ஊடகங்களும் இது போலானதொரு பழக்கத்தை கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் விதைத்துக்கொண்டிருக்கிறதுதான்,சிறியவர் பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமலும்,பாரமட்சமில்லாமலுமாய்/

ஆனால் அந்த இணையம் வழி வந்த தகவலின் கைபிடித்துத்தான் இப்பொழு து வந்திருந்தான் மீட்டிங்கிறகு, அந்த மீட்டிங்கும் முடிந்து போனது,

மீட்டிங்க் நன்றாக இருந்தது,கூட்டமும் நல்ல கூட்டம்.வழக்கமாய் இதற்கென வருகிற கூட்டம் தவிர்த்து புதிதானவர்களை பார்க்க முடிந்து கொஞ்சம் சந்தோஷமாயும் மனதுக்கு இதமாயும்.

அறம் கொண்ட கருத்துக்கள் புதிய மற்றும் பழையவர்களை நோக்கி பாயும் போது அதன் அதை அவர்கள் உட்கொள்கிற விதமும் எடுத்துக்கொள்கிற தன்மையும் எப்படி இருக்கிறது, அதன் கனமும் அர்த்தமும் பரிமாணமும் யாரில் எப்படிப் போய் விதை கொள்கிறது என்பதை அறிய இது ஒரு நல்ல சந்தர்ப்பமாய் ஆகிப் போகிறதுதான்,

என்ன நண்பரே ,என்ன தோழரே,என்ன உறவினரே,,,நலம்தானா எப்படியிருக் கிறீர்கள்,,?என நலம் விசாரித்துக் கொண்டே இதையெல்லாம் உற்று நோக்குற போது கிடைக்கிற மனத்தேட்டங்கள் கொஞ்சம் வித்தியா சங்கள் விதைக்கப் பட்டுத்தெரிகிறதாய்.

தெரிவு படுகிற வித்தியாசங்கள் வேர் கொண்டு மண்கீறி துளிர்த்து தளைத்து கிளைத்து இலையும் காயும் கனியுமாய் நிற்கிற போது காணக்கிடைக்கிற சந்தோஷங்கள் மனதில் ஊற்றப்பட்ட இனிப்பாயும் தித்திப்பு கொண்டுமாய்/

மாரி அண்ணனையும் கரிய மேகத்தையும் பார்க்க முடிந்தது,பணி ஓய்வு பெற் றவர் என்பதற்கான முழு அடையாளத்துடனும் இவன் பார்த்த நாளிலிருந்து இன்று வரை மாறாத முழு மனிதனாகவுமாய் இருக்கிறவராய்,

அவரைபற்றிநண்பர்சொல்லும் போது அவர் ”மாரிஅண்ணன்”இல்லை, ”மாறாத அண்ணன்” என்பார்,

வாஸ்தவம்தான்,காலம்உள்ப்பொதித்தும்உருவகித்துமாய்வைத்திருக்கிறவை களில் எத்தனை எத்தனையோ சிதைந்தும் அர்த்தமற்றும் உருமாறியுமாய் போய் விடுகிற போது ரத்தமும் சதையும் உயிரும் உணர்வும் கொண்ட மாரி அண்ணன்,

இவன் அவரைப்பார்த்த இளம் பிராயத்திலிருந்து இன்று வரை அப்படியே அசல்கொண்டு அலைகிறார் என்பது ஆச்சரியமாகவும் முழு நீள கேள்விக்குறி பட்டுமாய் எழுந்தமிள்கிற ஒன்றாயும் இது இருக்கிறதுதான்.

வெள்ளைச் சட்டையும் கறுப்புப்பேண்ட்டும் மட்டுமல்ல, விரும் பிய வண்ண ங்களில் பளிச்சென இப்பொழுதான்அவர் உடை அணிந்து பார்த்திருக்கிறான்,

எங்கு போனாலும் எதற்காகப் போனாலும் சைக்கிள் சைக்கிள் சைக்கிளே,,,./

சைக்கிளைமடக்கி கைக்குள்ளே வைத்துக் கொண்டால் போகிற இடங்களும் சென்றடைகிற தூரங்களும் இலகுப்பட்டுத்தெரியும் என்பதை அவர் சொல்லிக் கேட்டிருக்கிறான்,

அவரின் தலையில் இருக்கிற நரைகள் அவரின் தோற்றத்தை வயது படுத்தி காண்பிக்குமே தவிர அவர் இன்றும் இளமையின் வாசலில் நிற்பதாகவே தெரிகிறது.

சரிஇருக்கட்டும்,அது அப்படியே இருப்பது ஒரு வகையில் நல்லதாகவே படுகி றது, அவரைப் பார்க்கிற நேரங்களில் ஆகா என்றும் மாறாத மாரி அண்ணன் என நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்,

அது போக அப்படி இருக்க வாய்ப்பது ஒரு கொடுப்பினையும் வாய்க்க பெற்ற வரமும்தானே என்பான் இவன் அவரிடமே/அதற்காகவாவது அவர் அப்படியே இருக்க கடவாராக/

இளம் ஊதாக்கலரில் உடல் பிடித்த பனியன் அணிந்திருந்த கரிய மேகத்தை கவனிக்கவில்ல முதலில், மாரி அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்த பேச்சின் ஓட்டம் கொஞ்சம் சுணக்கம் கொண்ட போது முதுகுக்குப்பின்னால் யாரோ நிற்கிற அரிச்சை தோன்ற திரும்பிப்பார்த்தால் அட கரிய மேகம்.

ஆகாஎப்பொழுது பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் ”வாங்கண்ணே,நல்லா இருக் கீங்களா” என நலம் விசாரிக்கிற அன்பு உள்ளம்.

பார்த்த சிறிது தினங்களிலிருந்தே அதே அன்பையும் பரிமாரபடுகிற நட்பையும் தோழமையையும்கொண்டமனிதர்,”நல்லாயிருக்கீங்களா,,”என்கிறகேள்வியின் உட்ப்பொதித்தலில் நன்றாக இருக்கிறேன் என சிரிப்பை பதிலாய் தந்து விட்டு இவனும் மாரி அண்ணனுமாய் பேசுகிற பேச்சில் கலந்து கொள் கிறார்,

அவர் அணிந்திருந்த பனியன் நன்றாக இருந்தது,அது போல் ஒன்று வாங்க வேண்டும்,அதே கலரில் என நினைத்தவனாய் அந்த இடத்தை விட்டு அகல் கிறான்,

இருபத்தி இரண்டும் இருபத்தி இரண்டுமாய் நாற்பத்தி நான்கு கிலோ மீட்டர் கள் ஓடிய இரு சக்கர வாகனத்தை மண்டபத்தின் ஓரம் வண்டிகள் நிறுத்தி வைக்கபட்டிருந்த இடத்தில் நிறுத்தியிருந்தான்,

பாவப்பட்டதுபோல்நின்றிருந்த வண்டியை எடுத்துக்கொண்டு இனி வீட்டுக்குப் போக வேண்டும்,

கள்ளிப்பட்டியிலிருந்து வரும் பொழுது இடையில் லைசென்ஸ் செக்கிங்க் என போலீஸ் வழி மறித்து விட இவன் தான் வேலைபார்க்கும் இடத்தை சொல்லியும் சைசென்ஸ் எல்லாம் வீட்டில் இருக்கிறது ,எடுத்து வர மறந்து போனேன் எனச்சொல்லியும் வந்து விட்டான். வண்டியை எடுத்து க்கொண்டு நகன்ற பொழுதுதான் ஞாபகம் வருகிறது,லைசென்ஸ் செக்பண்ணிய இடத் திருந்து கொஞ்சம் தள்ளி காடு போல் இருக்கிற இடமாய் பார்த்து ஒண்ணுக்கு இருந்து விட்டுப்போகலாம் என நினைத்தது,

ஆனால் அது இப்பொழுது வரை நடக்காமலேயே/

ஆண்கள் கழிப்பறையும்,பெண்கள் கழிப்பறையும் அருகருகாமை காட்டியே இருந்தது,

இது போலானஇடங்களில்செல்வதை பெரும்பாலுமாய் இவன் தவிர்த்து விடுவான், தவிர்க்க இயலாத அவரசங்களில் வேறு வழியில்லாமல் சென்றும் இருக்கிறான்.

பாத்ருமை விட்டு வெளியில் வந்த போது வண்டி வைத்த இடமும் இவனது வண்டி போலவே நான்கைந்து வண்டிகள் நின்றதும் காணக் கிடைக்கிறது,

வெற்றுவெளியில் பூத்துப்படர்ந்து விட்டபூக்கொடியின் படர்வாய் இரு சக்கர ங்கள் தாங்கி நின்ற வண்டிகள் பல நிறங்கள் காட்டியும் உருவங்கள் பல காட்டியுமாய்/

வண்டியை எடுத்துக்கொண்டு நகரும் போதுதான் யோசனை வருகிறது, போகிற போக்கில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டுப் போய் விடலாம்,

வழக்கமாய் போவதாலோ என்னவோ கடையின் முதலாளி இவனைப் பார்த் ததும் வணக்கம் வைத்துவிடுவார், ”நல்லாயிருக்கீங்களா” என்பதுதான் அந்த வணக்கத்திற்கு இவன் செய்கிற பதில் மரியாதையாய் இருக்கும்.

இவனது மெனுவில் பெரியதாய் ஒன்றும் இருக்காது,அதுபோல கடுமையான உணவு என ஒன்றும் இடம் பெற்றதில்லை,

எப்பொழுதுதாவது என்றாவது ஒரு நாளில் நேரம் வாய்க்கிற போது வந்து செல்கிற தினங்களில் இவனது உணவு மென்மை காட்டியே இருக்கும்,

இரவென்றால் ஊத்தப்பம், அல்லது தோசை,இல்லையென்றால் கோதுமை புரோட்டா விரும்பிக்கேட்டு வாங்கிச் சாப்பிடுவான்.மதியம் என்றால் சாதம், சாம்பார்,ரசம்,மோர்மட்டுமேஅல்லது விருப்பட்டால் பிரியாணி என்பதாய் நிறுத்திக் கொள்வான்,

சமயா சமயங்களில் பரிமாறுகிறவரையும் பரிமாறப் படுகிற விதத்தையும் பொறுத்து உணவில் கொஞ்சம் சேர்மானம் கூடும்,

என்ன பெரிதாய் கூடி விடப்போகிறது,ஒரு ஆம்ப்ளேட் அல்லது கொஞ்சம் அசைவமாய் ஏதாவது அவ்வளவே,,,,/

இன்றும் அப்படித்தான் சாப்பிட்டுச்செல்ல வேண்டியிருக்கும் போல/என்கிற நினைவும் ஆவலும் மனதில் வட்டமிட்டபோது வீட்டிலிருந்து போன் வந்து விடுகிறது,”இன்னைக்கிவீட்ல வேலை கொஞ்சம் அதிகமாகிப் போச்சி, அதுனால நைட்டுக்கு சமைக்கல,கடையில சாப்புட்டு வந்துருங்க,,” என்கிற மனைவியின் பேச்சு பதிவாகியது,

சரி என்பதைத்தவிர்த்து வேறென்ன சொல்லிவிட முடியும் இதற்கு,,?

வாழ்க்கைப்பட்டு வந்த வீட்டின் சுகதுக்கங்களுக்கு தங்களது தன்னை ஒப்புக் கொடுத்து விட்ட அவளது உலகத்தின் அகல நீளங்களில் இது போலாய் சமை யல் அற்ற பொழுதுகளும் கடையில் விரும்பியதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வதும்கொஞ்சமல்லரொம்பவேமனஇளைப்பாறுதலானவிஷயமாகவே/

இப்பொழுதே நேரமாகிப் போனது,ஆகிப்போன நேரம் கொஞ்சமும் நஞ்ச முமல்ல பத்து தாண்டி கால்மணியை பறைசாற்றியது,

இந்நேரத்திற்கு மேல் எங்கு போய் ரத்தப் பரிசோதனை எடுப்பது,,? லேப் திறந்திருப்பார்களா இல்லை மூடியிருப்பார்களா என்பது கேள்விக்குறியே/

இன்று காலை அலுவலகத்திற்கு கிளம்பும் போதே கொஞ்சம் கிறுகிறுப்பாக இருந்தது.ஏன்அப்படிஇருக்கிறதுஎனஅவதானிக்கமுடியவில்லை,ஒரு வேளை கூடிப்போன அல்சர்காக இருக்கலாம்.இல்லை லோ சுகராக இருக்கலாம்,

கல்லுப்பட்டிக்கு மாறுதல் ஆன நாளிலிருந்து இப்படித்தான் பிரச்சனையாக இருக்கிறது,தினசரி காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் என இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது கொஞ்சம் கொஞ்சம் அல்ல நிறையவேஅசத்திவிடுகிறதுதான்ஆளை,”டொண்டிபோர்அவர்ஸீம்ஸ்டாண்டி ங்கிலயே இருக்கேன்,,,” என்கிற சினிமா வசனம்போல காலையில் இருபத்தி இரண்டு மாலையில்இருபத்தி இரண்டு என தினசரி நாற்பத்தி நான்கு கிலோ மீட்டர்கள் மடக்கியகாலை நீட்டாமல் போய் வரும் போதும் ஏரிச்சலாகப் போய்விடுகிறது,உடல் அலுத்துப் போகிறது, சுமையாகிப் போகிறது/ அலுத்துப் போன உடல் குளிரடிக்க ஆரம்பிக்கிறது, அப்படித்தான் இன்று காலையில் கிளம்பும் போதும் இருக்க சரி போவோம்,பார்த்துக்கொள்ளலாம் மாலை வந்து என அலுவலகத்திற்கு போய்வந்தான்,என்பது கடையில் சாப்பிட்டுக் கொண்டி ருக்கும் போது அவனுள்ளாய் அசை கொண்டிருப்பதாய்/

இந்நேரம் வீட்டிற்குப் போயிருந்தால் தட்டு நிறைந்த சூடான மோர் சாதத்தை கைநிறைய பிசைந்து அள்ளி அன்பும் பிரியமுமான மனைவியின் முகம் பார்த்துக்கொண்டும்பிள்ளைகளின் இளம் கனம் கொண்ட பேச்சுகளை கேட்டுக் கொண்டும் சாப்பிட்டிருக்கலாம்,

”அது வாய்க்கப் பெறாமல் போய் விட்டது இந்தப் பொழுதில்”என நினைத் தவனாய் கடையில்சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கையில் வீட்டுச் சாப்பாட்டிற்கென வாங்கி வைத்திருந்த பக்கோடாப்பொட்டலம் கனத்தது. கூடவே மனைவியின் நினைவும்/

3 comments:

vimalanperali said...

நன்றியும் அன்பும் சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

அவசர உலகம்... ஏக்கம் மட்டும் தொடர்கதை...

vimalanperali said...

அன்பும் நன்றியும் கூடவே பிரியமும் சார்,,/