6 Jan 2019

படர் கொடியின் நகர்வு பட்டு,,,,,

வீட்டில் போய் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றிருந்த எண்ணம் நேரத்தைக் கூட்டிக் காட்டிக் கொண்டே போகிறதாய், 

நேரமாக நேரமாக விருட்சம் கொண்டு வளர்ந்த பசி வயிற்றினுள் அழுத்தம் கொண்டு தனது கரங்களை அழுத்தமாக ஊன்றி நாலாபக்கமும் விரித்து அட்டெண்சென், ஸ்டேண்டடீஸ், அபெவ்ர்டெர்ன்,,,,,என நினைத்த ரூபத்தில் உருவெடுத்துக் காட்டியது, 

கூட வந்தவன் பட்ட அவசரம் இருக்கிறதே, உலக அவசரமாய் இருக்கிறது. அவன் இவனது மாப்பிள்ளை , 

மாப்பிள்ளை என்றால் அத்தை பையனோ, அக்கா பையனோ இல்லை. வேறு வழிகளில்வந்த சொந்த மாப்பிள்ளையும் இல்லை. சொந்தக்காரனும் இல்லை.
வேற்று ஜாதிகளுக்குள் உறவு முறையை முடியிட்டு பாதுகாத்து வைத்திருக் கும் கிராமங்களில் இவனது ஊரும் ஒன்று, 

புழுதி படர்ந்த கிராமத்தின் செம்மண்ணும்,கரிசல் தரையும் அதன் சாயத்தில் இருந்த தோட்டமும் காடுகளும் வயல்களும் அது தரும் விளைச்சலும் ரத்தத் தை வியர்வையாயும் உழைப்பாயும் மாற்றி காடுகளையும் தோட்டங் களை யும் வயல்களையும் பொன்னாய் விளையச் செய்கிற உழைப்பாளிகளும் அவர் களின் நிழலில் வளர்ந்த ஆடுகளும் மாடுகளுமாய் நின்ற மண்ணில் பாவி படர்ந்திருந்த செடிகளாயும் கொடிகளாயும் பூத்து மலர் ந்திருந்த பூக்களாயும் படர்ந்தோடிய வேர்களாயும் பிணை கொண்டிருந்த மண்ணின் மைந்தர்களாய் இவனும் இவனது மாப்பிளையுமாய் குடி கொண்டி ருந்தார்கள். 

குடி கொள்ளலின் வேர்கள் உரங்கொண்டு முளைத்த நாட்கள் எது என இவனுக்கு சரியாகத் தெரியா விட்டாலும் கூட முளைத்த இடம் எது எனத் தெளிவாக ஞாபகம் இருப்பதாக... 

ஒரு வெயில் நாளின் உக்கிரத்தில் உடல் நலமில்லாமல் போன அம்மாவை டவுன் ஆஸ்பத்திரி கொண்டு போக கைகொடுத்தவன் அவனே,/ 

அன்று தனக்கு காய்ச்சல் இருப்பதாக யாரிடமும் சொல்லவில்லை அம்மா. வழக்கம் போல் மல்லிக்குளத்தார் கடையில் காய்ச்சலுக்கென வாங்கிப் போடும் மாத்திரையையும் கடுன்டீயையும் குடித்து விட்டு படுத்திருக்கிறாள்,
இரண்டு நாட்களாய் இப்படித்தான் இருந்திருக்கிறது. இரண்டு நாட்களும் சாப்பாடு தண்ணி சரியாய் எடுத்துக் கொள்ளாமல் மல்லிக்குளத்தார் கடை மாத்திரை யையும் கடுன்டீயையும் குடித்துவிட்டுப்படுத்திருக்கிறார்கள், 

யாரிடமும் தனக்கு காய்ச்சல் என சொல்லவும் இல்லை, அதோடுதான் மூணா வது வீட்டுக்காரர் தோட்டத்துக்கு களை எடுக்கப் போயிருக்கிறார்கள். நிறை தோட்டமாய் நின்ற மிளகாய்ச் செடியின் ஊடே குறை பட்டுக் காணப்பட்ட பசலைச் செடிகளையும் மற்ற மற்றதான களைகளையும் வெட்டி விட்டு வந்து வீட்டில் இவனுக்கும் தம்பிக்குமாய் சமைத்து சாப்பாடு போட்டு விட்டு படுத்த வளின் காய்ச்சலை மல்லிக் குளத்தார் கடை மாத்திரையும் கடுன்டீயும் ஒன்றும் ஆற்றுப்படுத்தி விடவில்லை. 

நடு ராத்திரியில் வாசல் திண்ணையில் போர்வைக்குள் முகம் போர்த்திப் படுத்திருந்தவனை அம்மாவின் முனகல் சப்தம் எழுப்ப வீட்டின் உள்ளே போய்பார்த்திருக்கிறான், 

உடலெல்லாம் வேர்த்துக்கொட்டி கட்டியிருந்த புடவையின் நுனியும் அணிந்திருந்த ஜாக்கெட்டும் நனைந்து போக உடல் நடுங்கிப் படுத்திருந்தாள்.
எப்பொழுதும் அம்மாவின் அருகிலேயே உறங்கும் தம்பி இன்றைக்கு அத்தை வீட்டில் போய் தூங்கபோய் விட்டான், 

அத்தையின் மகனும் இவனும் ஒரே வகுப்பில் படிப்பதால் வீட்டுப் பாடங்கள் எழுதவும் படிப்பை பகிர்ந்து கொள்ளவும் தோதாய் இருக்கும் என அம்மாதான் அனுப்பி வைத்தாள் அங்கு போய் படிக்க. 

அத்தையின் பையனை இங்கு வந்து படி எனச் சொன்னதற்கு மாட்டேன் என்று விட்டான், ”சரி இப்ப என்ன அதனால அவன் இங்க வராட்டி நீ அங்க போயிரு..." என்ற சொல் உருவான நாளிலிருந்து இன்று வரை அங்குதான் போய் படித்துக் கொண்டிருக்கிறான், 

அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. 

”நாலாப்புப் படிக்கிற பயல இன்னும் பச்சப்புள்ளபோல ஓங் மடி மேலயும் தோளுக்குப் பக்கத்திலயும் தூங்க வச்சிக் கிட்டு இருந்தா எப்பிடி.../ அவுத்து விடு கண்ணுக்குட்டிய நாலுபக்கம் போயி வந்து தனியா தூங்கட்டும்” என அக்கம் பக்கத்தார்களும் அம்மா வயது பெண்களும் கேலி பேசிய நாளிலிருந்து தம்பியை அத்தை வீட்டுக்கு போக அம்புக் குறியிட்டாள். 

'நல்ல வேளை இப்பயாவது அனுப்புனயே...' என்ற சிரிப்பொலிக்கு மத்தியில் அவன் அத்தை வீட்டுக்கு போன நாளிலிருந்து இன்று வரை அங்கேயே படித்து விட்டு அங்கேயே படுத்தும் விடுவான், 

அத்தையும் 'இருக்கட்டும் ஏம் புள்ள போல வளரட்டும் என்ன இப்ப' என்பாள். அவளும் தம்பி தனது வீட்டில் சாப்பிடாமல் வருகிற இரவுகளில் சாப்பாடு போட்டு விடுவாள். 

அவள் மகன் மேல் இருக்கிற அக்கறையை விட இவனது தம்பி மீது கொஞ்சம் கூடுதல் பிரியம் இருக்கும் அத்தைக்கு. காரணம் நிறை மாதமாய் இருக்கிற அத்தைக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் இவனுக்கு கொடுத்து விடலாம் என்கிற ஆசையே... 

அத்தையையும் சும்மா சொல்லக்கூடாது, தம்பியை மட்டும் வைத்து கவனிக் கும் அத்தை அவ்வப்பொழுதாய் ஓய்ந்த பொழுதுகளில் அம்மாவையும் வந்து பார்த்துக் கொள்வாள். அவளுக்கும் ஆசைதான், அம்மா வீட்டிலிருக்கிற நேரங் களில் வந்து அம்மாவுக்கு ஒத்தாசையாய் இருந்து அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டும் என. ஆனால் அவள் பாடு அவளு க்கு, 

இந்த வயதிலும் உழைத்துச் சாப்பிடவும் முடிந்த வரை பிறர் கையை நம்பா மலும் வாழ வேண்டும் என அவள் முடியிட்டு வைத்திருந்த வைராக்கியம் அவளை யார் உதவியும் அற்று தனியாகவே இருக்கச் செய்துவிட்டது, 

இவனும் தம்பியும் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போதே பெயர் தெரியாத கொள்ளை நோயில் அப்பா இறந்து போன நாளிலிருந்தே ஏதோ வைராக்கியம் பூண்டவளாயும் பாறை துளைத்து வந்த காட்டுச் செடியாயும் இருந்து விட்டா ள். உறவுகளும் நட்புகளும் தோழமைகளும் அவள் அப்படியே இருக்கட்டும் மனம் பிடித்தது போலவே என விட்டு விட்டார்கள், 

அவ்வப்பொழுதுமாயும் அதிக நேரங்களில் இல்லாமலுமாய் வந்து செல்லும் அத்தைக்கும் இது புடிபட சரி என்கிற அளவில் அம்மாவுக்குப் பிடித்தது போல் நடந்து கொண்டு போய் விடுவாள். 

அம்மாவுக்கு காய்ச்சல் கண்ட அன்று முதலில் ஓடி வந்தவள் அத்தைதான், அத்தைக்குதான் முதலாவதாய் தகவல் சொன்னான், அத்தை வந்தபிறகுதான் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தார்கள், 

”அப்பொழுதான் அங்கு வந்த மாப்பிள்ளை என்ன இது ஏன் இப்பிடி போட்டு வச்சிருக்கீங்க, மொதல்ல மாதவன் ஆட்டோவ வரச்சொல்லுங்க, டவுன் ஆஸ்பத்திரிக்கி கொண்டு போவோம், என அவனே தனது செல் போனில் போன் பண்ணினான் உள்ளூர் ஆட்டோக்காரரான மாதவனுக்கு/ 

“ஏம்மா சுத்தி இத்தனை பொம்பளைங்க நிக்குறீங்களே, அவுங்களுக்கு பொடவை சட்டைய மாத்திவிட்டு தலைய சீவி விடக்கூடாதா” என அவனே சீப்பை எடுத்து தலை வாரி விட ஆரம்பித்ததும் சுற்றி நின்ற பெண்களில் சிலர் இவனையும் இவனது மாப்பிள்ளையையும் வெளியில் அனுப்பிவிட்டு புடவை மாற்றி தலை சீவி விட்டு ஆட்டோவுக்காக காத்திருந்த வேலையில் உள்ளூர் ஆட்டோ வந்து விட்டிருந்தது, 

அன்று மாப்பிள்ளைதான் அம்மாவை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு போய் ஆட்டோவில் உட்கார வைத்தான். கூடவே ஆஸ்பத்திரிக்கும் வந்தான். அம்மா வுக்கு உடல் நிலை சரியாகும் வரை மூன்று நாட்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து வந்து போனான். ஒரு நாள் ராத்திரி ஆஸ்பத்திரியிலேயே தங்கி விட்டான். அம்மாதான் சொல்லியிருக்கிறார்கள் அவனை இவனுடன் துணைக்குத் தங்கும்படி சொல்லி விட்டிருக்கிறாள். 

அம்மாதான் சொன்னாள் அவனைப்பற்றி, ”அவன் நமக்கு சொந்தம் கெடை யாது, அவுங்க அப்பாவும் ஒங்க அப்பாவும் ரொம்ப நல்ல பழக்கமுள்ளவுங்க, ஆதியிலயிருந்தே அவுங்க குடும்பத்துக்கு ஒண்ணுன்னா ஒங்க அப்பா ஓடுவாரு, ஒங்க அப்பா குடும்பத்துக்கு ஒண்ணுன்னா அவரு ஓடி வந்துருக்கா ரு. ஒங்க அப்பா என்னைய கைபுடிச்சதுக்கப்புறமும் தொடர்ந்துருக்கு அவுங்க பழக்கமும் உறவும்/” 

”அவுங்க அப்பான்னா தங்கச்சி தங்கச்சின்னு ஏம் மேல உயிரா இருப்பாரு, அன் னைக்கி அவுங்க அப்பா ஓடி வந்த அதே யெடத்துல இன்னைக்கி மகன் வந்து நிக்கிறான். அன்னைக்கி மொளைச்ச மாமன் மச்சான் உறவு இன்னைக்கி வரை க்கும் தொடர்ந்துக்கிட்டு இருக்கு” என/ 

அன்றைக்கு அம்மாவை கையில் ஏந்தியதற்கு எந்தவித குறை பாடும் இல்லா மல் தன்னை பாசத்தாலும் அரவணைப்பாலும் அன்பாலும் ஏந்தி நிற்கிறான் மாப்பிள்ளை,அவன்தான் அவசரம் காட்டினான். 

“என்னைய்யா மாப்புள இவ்வளவு நேரமா ஒரு மீட்டிங் முடிச்சி வர்றதுக்கு?” என்பவனின் மேல் வைத்திருக்கும் மதிப்புப் போலவே இவன் சார்ந்திருக்கிற இயக்கத்தின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருப்பவன்,

ஆனால் ”என்ன என்றால் என்ன” என்பதோடு மட்டுமே வைத்துக் கொள்வான்,
கேட்டால் ”மாப்புள இந்தா பாரு நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது... ஆமா போக ஓம் பழக்க வழக்கம் வேற, ஏம் பழக்கம் வேற, நீயி படிப்பு புத்தகம் கொண்ட கொள்கையின்னு இருக்குறஆளு, நான் அப்பிடியில்லை, இருந்த வரைக்கும் போன வரைக்கும்ன்னு இருக்குற ஆளு, ஒன்னைய ஒருகட்டுக் குள்ள புடிச்சி அடைச்சிறலாம்,இல்ல அது கூட வேணாம் ஒனக்கு நீயே ஒரு கட்டுப்பாட்ட விதிச்சிகிட்டு ஒரு கட்டுக்குள்ள இருக்குற ஆளுதான். நான் அப்பிடியில்ல. நாக்கும் மனசும் ஏதாவது நமநமன்னு இருக்குது வையி, அப்பிடியே கெடக்குறது கெடக்கட்டும்ன்னு போயி தண்ணியடிக்கப் போயிரு வேன். தண்ணி யடிச்சிட்டு அப்பிடியே கால் போன போக்குல சினிமா கினிமா ன்னு போயி ஒக்காந்துட்டு போதை தலைய விட்டு யெறங்கவும் வீட்டுக்குப் போயிருவேன், “நீ அப்பிடியெல்லாம் இல்ல, கையக் காலப்புடிச்சி கட்டி வச்சிக் கிட்டு ஊத்துனாலும் ”வேணாம் இது ஆயினு துப்பீர்ற ஆளு”/ 

”ஒன்னையும் என்னையும் ஒன்னு சேத்து பாக்க முடியுமா சொல்லு மாமன் மச்சான்ங்குறதுக்காக எல்லாம் ஒத்துப்போயிருமுன்னு அர்த்தமா, இங்க பாரு நான் வேணாம் வேணாங்க நீயி வம்படியா கூட்டிக்கிட்டு வந்து இங்க ஒக்கார வச்ச, எனக்கு என்னவோ மனசுல ஏறல, அப்பிடியே நைசா ஒனக்குத் தெரியா ம ஒண்ணுக்கு இருக்கப்போறவன் மாதிரி வெளியில போயிட்டு இப்பத்தான் மீட்டிங் முடியப்போறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தேன், 

”அதுக்காக எனக்கு மீட்டிங் புடிக்கல அங்க பேசுற விஷயம் நல்லாயில் லை ன்னு இல்லை, என்னால அங்க பேசுற விஷயங்கள கிரகிச்சிக்கிற முடியல, அங்க ஒக்காந்துருக்குற நேரம் என்னால முழு மனசோட அங்க இருக்க முடியாது. ஒடம்பு மட்டும்தான் அங்க இருக்கும் மனசு பூராம் வேற எங்கயோ இருக்கும். அப்பிடியான நேரங்கள்ல ஒண்ணு ஒன்னையயப்போட்டு பெராண் டுவேன், இல்ல எரிச்சல்ல ஒன்னைய மனசுக்குள்ள கெட்ட வார்த் தைக ளால திட்டுவேன். இதுதான் நடக்கும். அது எதுக்கு ஏம் மாப்புளைய நானே வஞ்சிக் கிட்டுன்னு போயிருவேன் அப்பிடியே/ 

அன்னைக்கி நீயும் நானும் சினிமாவுக்குப் போனம். நல்லாயிருந்துச்சின்ன. நானும் பாதி நேரம் படம் பாத்துக்கிட்டும், பாதி நேரம் ஒன்னையப் பாத்துக்கிட்டுமா இருந்தேன். தெறந்த வாய் மூடாம படம் பாத்துக்கிட்டு இருந்த நீ கொஞ் சநேரம்சிரிக்கிற, கொஞ்ச நேரம் அழுகுற, கொஞ்ச நேரம் சீரியஸ் ஆகுற, கொஞ்ச நேரம் அப்பிடியே ஒரைஞ்சி ஒக்காந்துர்ற, எனக்கு ஒன்னையப்பாத்த கொஞ்ச நேரம் ஒண்ணும் புரியல, ஏன்னா அன்னைக்கித் தான் ஓங்கூட மொத மொதலா படம் பாக்க வந்துருக்கேன்,ஒரு மனுசன் இப்பிடியுமா படம் பாப்பான்னு அன்னைக்கித்தான் யோசிச்சேன், 

“நானெல்லாம் படத்துக்குப்போனா கொஞ்சம் சிரிச்சேன் கொஞ்சம் ரசிச்சே ன்னு எந்திரிச்சி வந்துருவேன், போதும் குடுத்த காசுக்கு நாம படம் பாத்தது ன்னு... ஆனா நீ அப்பிடியான ஆளு இல்லைனு தெரிஞ்சிச்சி, ஓங் தோள் தொட் டும் தோள் ஒரசியுமா பாத்த நானு நீயி அசையாம படம் பாக்குறதப் பாத்துட்டு நாலாபக்கமுமா அலைபாய்ஞ்ச ஏங் மனச இழுத்துக் கூட்டிகிட்டு வந்து இறுக்கக் கட்டி ஒக்காரவச்சேன் ஒரு கூட்டுக்குள்ள/ 

”அப்புறம் என்ன ஒன்னையப் போலவே அழுகவும் சிரிக்கவும் ரசிக்கவும் படத் தோட ஒன்றிப்போகவும் கத்துக்கிட் டேன். அப்பிடி படம் பாக்குறதும் நல்லாத் தான் இருந்துச்சி. எதுக்காக காசு குடுத்து டிக்கெட் எடுத்து படத்துக்கு போனோ மோ, அது பிரயோஜனப்படணுமில்லங்குற கணக்கு அன்னைக்கிதான் எனக்கு பிடிபட்டுச்சி,” 

“அதுபோல ஓங்கூடஎப்பவாவதும் என்னைக்காவதும் வர்ற மீட்டிங்கையும் முழுசா ஒக்காந்து கேக்குற அளவுக்கு வந்துருவேன், அதுக்கு கொஞ்சம் நாளாகும், அந்த நாள் வரைக்கும் இந்த மாப்புள்ளைய இப்பிடியே இருக்க அனுமதிக்கணும் பெரிய மனசுப்பண்ணி” என்றவனை கண்ணீர் வராத குறையாக கட்டியணைத்தவன் ”நான் என்ன மாப்புளை புண்ணியம் பண்ணுனேன்...? ஒன்னையப் போல ஒருத்தன் இந்த ஜென்மத்துல மாப்புளை யா கெடைக்கிறதுக்கு”/ என்றவனை ஏறிட்டவன் கண்களில் ஈரம் சுற்றியது, 

நான் பாக்க இப்பிடியே ஒத்துமையா இருக்குற நீங்க ஏங் கண்ணுக்குப் பின்னா டியும் இப்பிடியே இருக்கணும்ப்பா என்ற இவனின் அம்மா இறந்த பின்னும் அவளதுஆசையை நிறைவேற்றுபவர்களாய் இன்னும் தோள் தொட்டும் மனம் படர்ந்தும்/




(எங்கள் பிளாக்கில் கேட்டு வாங்கிப்போடும் கதைப்பகுதியில் வெளிவந்த எனது கதை,,,,நன்றி எங்கள் பிளாக்கிற்கு/)

8 comments:

ஸ்ரீராம். said...

நன்றி உங்களுக்கும். அவ்வப்போது கதை அனுப்புங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

எங்கள் பிளாக்கிலேயே படித்திருக்கிறேன் நண்பரே

vimalanperali said...

நன்றி சார்!

vimalanperali said...

அன்பும் பிரியமும்!

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கும் வாழ்த்துகள்...

vimalanperali said...

பிரியம் விளைக,,/

Thulasidharan V Thillaiakathu said...

அங்கும் வாசித்தோம் நண்பரே/சகோ...

துளசிதரன், கீதா

vimalanperali said...

நன்றியும் அன்பும்!