16 Apr 2019

ஊர்ந்தோடியாய்,,,,

பார்த்த காட்சியின் அடர்வு
கண்களில் தைத்து விட
விழி கழண்டு உருண்டோய பார்வை
அத்துவானங்களில் தென்பட்டவைகள் யாவையும்
அள்ளிக்கூட்டி மனம் கட்டிக்கொண்டு வருவதாய்,,,,

                             +++++++++++++++

 ஊர்ந்தோடிய எறும்புகள் சென்றடைந்த பரப்புகள் இரைதேடியதும்,கூடந்ததுமாயும் இருந்தன.
கூடைந்த இடத்தை விட
இரை தேடிய இடங்களில்
சேதப்பட்ட எறும்புகளின் பின் தொடர்வுகள்
தன் மூதாதயரை நினைவில் இறுத்தியும்
தேவை நிமித்தமாய் இரை தேடிக்கொண்டும்,,,/


                               +++++++++++++


வழியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுகுட்டியின் மீது
இருசக்கரவாகனம் மோதிவிடாமல் ஓரம் கட்டிய நேரமாய்
துள்ளி வந்த இளம் ஆட்டுக் குட்டி ஒன்று 
கறுப்பும் வெளுப்பும் காட்டி வாகனத்தின்
முன் சக்கரத்தில்  விழுந்த போது 
நிலைதடுமாறி நின்ற வாகனம் சாலையின் மைய பொருளாயும்,
கனம் கொண்ட சாட்சியாயும்,அன்றாடங்களில்,,,/


                                  ++++++++++++++++

கால் விரல்கள்,கை விரல்கள்
இரண்டிலுமாய் சேர்த்து
வெட்டிய நகத்தின் துண்டுகள்
சிதறல்களாயும், முழு நீளம் காட்டியும்,
அரை குறையாயும்,
கூடவே நகத்தினுள் ஒட்டிக்கொண்டிருந்த அழுக்கும்,
தரை இப்பொழுது இருபது விரல்களின் ரூபம் கொண்டு/

     
                                   ++++++++++++++


வேகம் காட்டிய சாலையின் பரபரப்பின் ஊடாக 
ஆரஞ்சுப்பழச்சாறு கடை போட்டிருந்தவரின் 
கையிலிருந்த கத்தி பழம் அறுக்கிற போது 
அவரது வாழ்க்கையையும் சேர்த்து அறுப்பதாக,,./

                                  ++++++++++++++

சாலையோரமாய் மண்பானை விற்றுக் கொண்டிருந்தவர்
வீங்கிப் போன வலது காலை ஊனி
பானை எடுத்துக் கொடுத்து போது
அவரது பாதத்திலிருந்து வேறோடிய வாழ்க்கை
ஈரம் பூத்த மண்ணின் உள்ளிலும் உள்ளாயும்,
மனம் பாரித்துமாய்,,,/


                                      ++++++++++++++
சாலையோரமாய்க்கிடந்த ஒற்றைப் பேப்பர்ப் பையில்
என்ன இருந்து விட முடியும் பெரிதாய்,,,?
பெற்ற குழந்தையின் மலம் துடைத்த துணியாய் இருக்கலாம்,
இனி எதற்குமே உதவாது எனஎண்ணி கசக்கி எறிந்த பேப்பராய் இருக்கலாம்,
வீட்டை கூட்டி அள்ளிய குப்பையாய் இருக்கலாம்.
என எண்ணிய கணத்தில்,,,,,,,
குழைந்தையை பெற்று வளர்த்த தாயின் பாட்டையும்,
கசக்கி எறிந்த பேப்பரில் மாணவன் எழுதிய பாடத்தையும்,
வீட்டைக்கூட்டி அள்ளிய மனைவியின் முகத்தையும் நினைவூட்டிய
பேப்பர் பையை எளிதாய் புறம் தள்ளி விட்டு கடந்து விட முடியவில்லை,

                                           +++++++++++++++

நாவரண்டு போன நாயொன்று
எடுத்த தாகத்திற்கு தண்ணீர் தேடி
 ஊரெல்லாம் அலைந்தும் கிடைக்காத நேரத்தில்
 வீட்டின் முன் தாழ்வாரத்தில் சோப்புப்பவுடரில்
முக்கி வைக்கப்பட்டிருந்த அழுக்குத்துணிகள்
நிறைந்த டபரா நீரை நக்கிக் குடிக்கிறதாய்,,,/  


                         +++++++++++++++

பூக்களை பறிப்பதை விட பூக்களை மிதிப்பதே
பாவத்தின் சம்பளமாய் ஆகிப்போகிறது என்கிறார்கள்,
மாடிப்படியோரமாய் உதிர்ந்து கிடந்த
வேப்பம் பூக்களில் சில செருப்பின் உள்ளுமாய்
உதிர்ந்து கிடக்க தட்டிவிட்டுவிட்டு செருப்பைக்காலில்
மாட்டிக்கொள்ள மனமில்லாதவனாய் கிளம்புகிறேன்
வெறுங்காலுடன்,,,/
சம்பளத்திற்கு அஞ்சி அல்ல,
மிதிபடுகிற ஓசைக்கு அஞ்சியே,,,,/
   
                         +++++++++++++++

 ரூபாய் அறுபத்தைந்து,பதினாலு,
எழுபது ,தொண்ணூற்று ஆறு,,,,,,என
விலைப்பட்டியல் எழுதப்பட்டிருந்த
நீளமான பழுப்பப்புக்கலர் பேப்பரில்
விளைவித்தவனின் முகமும் ,
அவனின் வியர்வைவரி நீர்க்கோடுகளும்,
அதன் மித மிகு வாசனையும்,,,/

                 ++++++++++++++

இதில் வெட்கம் கொள்ள என்ன இருக்கிறது
என் அன்பே/
என்னிடம்தானே சொன்னாய்,,/
வார்த்தைகளை கோர்த்து,,/
தூக்கம் வராத ஒரு பின் இரவில்
உடலும் மனதும் வேர்த்திருக்க
அருகில் படுத்துறங்கும் பேரனின் முதுகை வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தவளாய்
என்னிடம்தானே சொன்னாய்/
கையில் பிடித்திருக்கும் தேனீர் கோப்பை
கனக்கிறது என என்னிடம் கொடுத்து விட்டு
தோள்சாய்ந்து கண்ணீர் சுரக்கிறாய்,
அந்தக் கண்ணீரின் அர்த்தம் உனக்கும்,எனக்கும்
மட்டுமே புரிந்ததாய் இதுநாள்வரை/
புரிதலில் பிடிபடுகிற வாழ்க்கை
இனிமை சுமந்தததாய் பொழுதுகள் பட்டு,,/
சொன்னது நீ கேட்டது நான்,
இதற்கு ஏன் அனாவசியம் காட்டி
வெட்கம் கொள்ள வேண்டும்,,?
பேரன் பேத்தி எடுத்து விட்ட இந்த முதுமையில்
திரும்பவும் ஒரு முறை திருமணம் செய்து கொள்ளலாமா,,?
என நீ கேட்ட கேள்விக்கு நாணம் கொண்ட நான் கொஞ்சமாய் காதல்கொள்கிறேன் உன்மீது என் பிரிய சகியே,,,/

                              ++++++++++++++

பத்து ரூபாயில் இரண்டு
இருபது ரூபாயாக ஒன்று,
ஐம்பது ரூபாயாக ,,,,,
சமயத்தில் நூறு ரூபாய் ,,,என 

கொடுத்த பயணிகளுக்கு 
அவரவர்களின் ஊருக்கேற்ற கட்டணத்தில் 
அச்சிடப்பட்டிருந்த பயணச்சீட்டுகளை 
கிழித்துக்கொடுத்து கொண்டிருந்த நடத்துனர்
சங்கடம் காட்டி நெளிந்து கொண்டும்

குற்ற மனப்பான்மையுடனுமாய் 
நின்று கொண்டிருந்த வளரிளம் பருவத்து இளைஞனை
உற்று நோக்கிவிட்டு அவன் செல்ல வேண்டிய 
ஊருக்கான பயணச்சீட்டை கிழித்துத்தருகிறார்,       

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை உன்னிப்பாக கவனிப்பு...!!!

vimalanperali said...

மனம் வியாபித்த நன்றியும் அன்பும்/

vimalanperali said...

அத்துவானங்களில்
பரந்து வியாபித்த அன்பும் நன்றியும்/