19 Apr 2019

வருபடலின் வாசமாய்,,,,,

வறுபடுகிற பொருட்களின் வாசமும்,
சட்டியினுள் இழுபடுகிற கரண்டியின் சப்தமும்
பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தவனின்
காதை உரச,
உரசலின் சப்தமும்,சமையலின் மணமும்,,,,,
அவள் அன்றாடம் வார்த்து அடுக்கிய தோசைகளையும்,

அவித்தெடுத்த இட்லிகளையும்,
சமைத்தெடுத்த சாப்பாட்டையும்
அறுத்தெடுத்த காய்கறிகளையும் ,
உறித்தெடுத்த வெங்காய வாசனையையும்,,,
இவைகளை அடை கொண்ட 

நம் வீட்டுப்பெண்களின்
அன்றாடங்களையும் சொல்லிச் செல்கிறதாய்,,,/


                                  ******************

முழு அசைவு கொண்டு சென்று கொண்டிருந்த
பேருந்திலிருந்து கேட்ட சப்தம் எங்கிருந்து வருகிறது
எனத் தெரியாததாய்/
பேருந்தின் முழு அசைவிற்கேற்றபடி
ஆடியவர்களாய் பயணித்தவர்களில் இவனும் ஒருவனாய் /
இவன் ஏறிய ஊரிலிருந்து பயணித்துக்கொண்டிக்கிற
ஊர்வரையாய் ஏறவும் இறங்கவுமாய் இருந்த
பயணிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கூடியும்
கொஞ்சம் குறைந்துமாய்/
பயணிகளின் எண்ணிக்கை குறைகிற போது முகம் வாடிப்போதலும்,பயணிகளின் எண்ணிக்கை கூடுகிற போது
சந்தோஷம் கொள்ளலும் ஓட்டுனர் நடத்துனரிடம் நிகழாமல் இல்லை.
நிகழ்ந்த நிகழ்வுகளின் பிண்ணனியாய் பேருந்தினுள்ளாய் கேட்ட சப்தம் எங்கிருந்து வருகிறது எனத்தேரியாததாய் இன்னும்,,/
இருக்கட்டுமே ,தெரிந்தவைகளை விட
தெரியாமல் இருப்பதே விஷயங்கள் சிலவைக்கு அழகாயும்,
 விஷயத்தை உற்று நோக்குபவருக்கு விடையாயும்,,,/

                                     **********************


ஜன நடமாட்டம் மிகுந்த சாலையில்
பைத்தியம் போல் தோற்றம் கொண்ட
அவர் சாலையோரக்கடையில்
டீக்குடித்துக்கொண்டிருந்த இவனிடம்
தயங்கித்தயங்கி கையேந்துகிறார்,
பரட்டைத்தலையும் ,இறக்கி விடப்பட்ட
அழுக்கு வேஷ்டியும் சட்டையில்லா வெற்று உடம்பும்
அவரை பைத்தியம்தான் என உறுதி செய்கிறது,
அவரின் மேல் பரிதாபப்பட்டு நீட்டிய கையில்
கொடுப்பதற்கு பஜ்ஜியை எடுத்து கொடுத்தபோது
வாங்கிய பஜ்ஜியை மேலும் கீழுமாய் பார்த்து விட்டு
இவனது முகத்தில் திருப்பி எறிந்துவிட்டு
ஓடி அலைகிறார் ஜன நடமாட்டம் மிகுந்த சாலையில்,,,/

                                 *********************

எந்த ஊர் இது எனச்சொல்லுங்கள் தயவு செய்து/
இறங்க வேண்டும் நான்
எனக் கேட்ட மூதாட்டியிடம்,,,
உங்களது ஊர் வரவில்லை இன்னும்
வந்ததும் சொல்கிறேன் எனச்சொன்ன நடத்துனர்
”யாதும் ஊரே ,யாவரும் கேளீர்
“என நினைத்துவீட்டீர்களோ பேருந்தில் ஏறுகையில் என்கிறார்/
பதிலுக்குச்சிரித்த மூதாட்டி
பேருந்து கடக்கிற ஒவ்வொரு ஊர் வாசலையும் 

கையெடுத்துக்கும்பிடுகிறார்.




               ****************************


”கரைச்சிக் குடிக்கையில தெம்பா இருந்தவரு 
அள்ளிச்சாப்புடும் போது அரை உசுரா ஆகிப்போனாரே”,,,
பாதகத்தி நான் பக்கத்துல இருந்துருந்தா
பதனமா பாத்துந்திருப்பேன்,
ஊரெட்டிப் போன உறவுல குடுத்ததால எப்பிடி கவனிச்சிக்கிறாகளே,என்னன்னு ஆக்கிப்போடுறாங்களோ,
கை காலு சொகத்துல இருந்து குடும்பம் நடத்துறது வரைக்கும் 

அவரோட ஒத்துப்போறாளோ இல்ல எட்ட நிக்கிறாளோ தெரியல,,,
என நிறை ஆதங்கம் கொண்ட அவள்
இவனின் முன்னாள் காதலியாய் உருக்கொண்டு தெரிகிறாள்,
அவளது கணவன் குழந்தைகளுடன் அவளும்,
இவனது மனைவி மக்களுடன் இவனுமாய் 

ஒரே ஊரில் குடியிருந்த போது/ 

               *********************

நான்கு மணிக்கு எழுந்திருங்கள் என்றார்கள் எழுந்தோம்,
மூன்று மணிக்கு எழுந்திருங்கள் என்றார்கள் எழுந்தோம்,
இரண்டு மணிக்கு எழுந்திருங்கள் என்றார்கள்
எழுந்தோம்,
ஒரு மணிக்கு எழுந்திருங்கள் என்றார்கள்,,,,
நாங்கள் இரவு தூங்கப்போகிற நேரமே அதுதானே,
அந்நேரம் எழுப்பினால் எப்படி என்கிற கேள்விக்கு,,
நீங்கள் தூங்கினால்,ஓய்வு எடுத்தால்,,,,, 

நாங்கள் உயர்வது எப்படி,,,,?
என்கிற எதிர் கேள்வியே அவர்களின் பதிலாய்,,,,/ 

                         ***********************

சாமி கும்பிடப்போயிருந்தோம் கோயிலுக்கு
நானும் மனைவியுமாக/
போன பின் தான் தெரிந்தது,
சாமியைக்கூப்பிட்டுக்கொண்டே
சாமி கும்பிட வந்திருக்கிறேன் என,,,/


                     *********************

அடுக்கி வைக்கப்பட்டிந்த பானைகளிருந்தது,
பூந்தொட்டிகள் இருந்தது,ஜாடிகள் இருந்தது,
விளக்குகள் இருந்தது,அடுப்பு இருந்தது,
இன்னும் இன்னுமாய் பொம்மைகள் இருந்தது,
அனைத்தையும் கண்ணுற்றவாறும் 

மென்மை முளைத்திருந்த கையால் தடவிக்கொண்டுமாய்
கடையை பார்த்தவாறே வந்த சிறுமி 

உண்டியலைக்காட்டி வேண்டும் என்றாள்.
விலை சொன்னதும் பணம் குறைவாய் உள்ளது 

எனச்சொன்ன சிறுமியிடம் உண்டியலை 
எடுத்துக்கொடுத்து விட்டும், 
அதில் ஒற்றை ரூபாய் நாணயம் ஒன்றையும்
போட்டு அனுப்புகிறார்
மண்பானை விற்கும் கடைக்காரர்/
               

                          ******************

நகன்றோடி அசைவு காட்டுகிற
சின்னதும் பெரியதுமான முட்கள்
ஸ்நேகம் கொண்டும், தோள் அணைத்துமாய்
கூட்டிக்கொண்டு சுற்றிய விநாடி முட்கள்
இரண்டின் கை பிடித்தும் தன் ஒற்றுமை காட்டியும்
காலத்தை நிர்ணயித்துச் சொல்வதாய் ,,,,/


                                 ******************

  

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

யாதும் ஊரே, யாவரும் கேளீர்...

அருமை தோழர்...

Nagendra Bharathi said...

அருமை

vimalanperali said...

அன்பும் பிரியமும் சார்/

vimalanperali said...

அன்பும் நன்றியும்!