28 Apr 2019

ஹைஜீனிக்,,,,,


நிழல் கடந்த நிஜமொன்று
அதிகாலை கண் விழிக்கையில் வீட்டின்
தரை பட்டுத்தெரிகிறது,
வாசல் பெருக்கி கோலம் போட்ட
மனைவியின் முகம்
பள பளத்த டைல்ஸ் தரையில்
விளக்கு வெளிச்சம் பட்டு மின்னிடுகிறது,,,/
சிறுது நேரத்தில் 
தரை அழகாகிவிடுகிறது,
வீடு புனிதப்பட்டுக்கொள்கிறது,
போட்ட கோலமும்,தெளித்த தண்ணீரும்,
கூட்டிய வாசலுமாய் விசாலம் கொண்ட இடம்
அன்றிலிருந்து திரும்பவும்
வீடென அழைக்கப்படுகிறது,,,/   


                    *********************


வீடு கூட்டுகையில் தப்பிப்போன போன
ஒற்றை தூசி தட்டையாய்,உருண்டையாய்
பின் ஏதோ ஒரு வடிவம் காட்டி நின்று நிலைத்து
பள பளத்த தரையின் உள் வடிவத்தின் உள்ளாகவும் 

அருகாமை காட்டியுமாய்,,,/

                           ******************

சாலையோரக்கடையில் மூதாட்டியிடம்
பணியாரம் வாங்கிகொண்டு திரும்பும் போது
எதிர்பட்ட நண்பன் சொல்கிறான்,
”இங்கெல்லாம் ஏதும் வாங்காதே,
சுத்தத்திற்கு உத்திரவாதம் கிடையாது,வா என்னுடன்”,,,,என
கூட்டிக்கொண்டு போன கடையில்
வாங்கிய பலகாரத்திற்கு சட்டைப் பையிலிருந்த
பாதி பணம் காவு போய்விடுகிறது,
நாங்கள் வந்ததையும் நண்பன் பேசியதையும்
பலகாரம் வாங்கியதையும் பார்த்தவாறே
கடையின் ஓரமாய் நின்று கையேந்திக்கொண்டிருந்த
பிச்சைக்காரர் கடை முதலாளியின் வசை பேச்சில்
மறுதலிப்புக்குள்ளாகிறார்,
இருக்கிற காசுக்கு தகுந்தாற்போல பணியாரம்
கொடுத்து அனுப்புகிற மூதாட்டி
தான் சுட்ட முதல் பணியாரத்தை
சாலையோர பிச்சைக்காரருக்குப்
படைத்து விட்டுத்தான் வியாபாரத்தை ஆரம்பிக்கிறாள் அன்றாடம்
என்பது ஏனோ அந்நேரம் நினைவிற்கு வந்து போவதாய்,,. /

                            **************************

பெரும் அதிர்வு கொண்ட பேருந்துகள்
வேகமெடுத்துக்கடக்கிற இடம் கிராமங்களாயும்,
நகரங்களாயும் ,அதன் கைபிடித்துச்செல்லும்
புற வழி மற்றும் அகவழிச்சாலைகளாகவும் பூத்துச்சிரிக்கின்றன,
வெடித்துச்சிரித்த பூக்களின் மென் இதழ்களாய்
சாலைகளிலும் கிராமத்து ,நகரத்து வீடுகளினுள்ளுமாய்
குடிகொண்டிருக்கும் மனிதம் அகம்,மற்றும் புறம் கண்டு
தன் நிலையில் பிடிகொண்டு வாழ்வதாயும்,பெரும் அதிர்வெடுத்த பேருந்துகளில் தங்களை உள்ளிருத்திப் பயணிப்பதாயும்,,,/

                                            ***********************
கனவுகளில் நனவுகளும்,
நனவுகளில் கனவுகளுமாய்
பயணிக்கிற வாழ்க்கை
தொட்டுச்செல்கிற தூரங்களின்
விளிம்புகள் நனவோடைகளின் நினைவுக்குறிப்புகளாய்,,,

                             **********************

பேருந்தின் நிறுத்ததில் நின்று கொண்டிருந்த நான்
நேரம் கடந்து, நேரம் கடந்து நிற்கிறேன்,
வர வேண்டிய பேருந்து அரை மணி தாமதம் என்றார்கள்,
ஏதோ பழுதாம்,பழுது சரி செய்யப்பட்டு பேருந்து சாலையில் அம்புக்குறியிடுவதற்கு முன்னாய்
காத்திரமாய் ஒரு தேநீர் அருந்தி விடலாம்
என்கிற நினைப்பில் கடை நோக்கி நகன்ற நேரம்
பேருந்து கடந்து விடுகிறது நிறுத்தத்தைத்தாண்டி,,/
பரவாயில்லை வாருங்கள்,
இது போலான பொழுதுகளில்தான்
நாவின் சுவைறும்புகள் தொட்டு உள்ளின் உள்ளில்
பயணிக்கும் ஒவ்வொரு மிடறு தேநீரையும் சுவைத்தருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருக்கலாம் சிறிது நேரம் என்றார் கடைக்காரர்,,,/

                                   **********************

அவசரம் காட்டி சென்று கொண்டிருந்த என்னை
ஸ்னேகம் கொண்டும் தோள் தொட்டுமாய்
அழைத்த குரல் தேநீர்க்கடைகாரருடையதாய் இருந்தது,
"பேருந்து விட்டு கீழிறிங்கியதுமாய்
எனது கடை வாசலுக்கு வழியிட்டு விடும் நீங்கள்
இன்று நான் தருகிற ஒரு மிடறு தேநீரைக்கூட அருந்தாமல்
செல்வது வருத்தமளிக்கிறது எனக்கு"
என்றவரின் பேச்சில் வியாபாரம் ,பணம்,,,,
என்கிற சொல் தாண்டி அன்பும் வாஞ்சையும் போர்த்திக் கிடப்பாதாய்,,,/

                                  ***************************


அதிர்வு கொண்ட பேருந்தின் பெரும் பரப்பெங்குமாய் அமர்ந்திருந்த மனிதர்களும் அவர்களின் கைபொருட்களும் கூடவே சுமந்து வந்த பிள்ளைகளும் நெருக்கம் கொண்டு அமர்ந்திருக்க,,,
வேகம் கொண்டு போய்க்கொண்டிருந்த பேருந்தின்
நகர்வின் கூடவே அத்துவான வெளியில் காய்ந்து கொண்டிருந்த வெயிலும் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து பயணிப்பதாக,,,/

                              ***********************

கடித்துப்போட்ட வெள்ளரிப்பிஞ்சின்
சிறு துண்டொன்று பேருந்தின்
ஜன்னல் விளிம்பில் ஒட்டிக்கிடக்க
ஓரச்சீட்டில் அமர்ந்த சிறுமி
சிறிது நேரம் அதை உற்றுப்பார்த்தவாறிருந்து விட்டு
இன்னமும் ஈரம் காயாமல் இருந்த வெள்ளரித்துண்டை எடுத்து
எறிந்து விட்டும் கைலியிருந்த கர்ச்சிப்பால் தூசியை தட்டிவிட்டும்
ஜன்னலின் விளிம்பில் கையூன்றியவாறு தாயை ஏறிட்ட போது
அவள் சொல்கிறாள்,
வெள்ளரிப்பிஞ்சின் ஈரம் மிகுந்த துண்டு
எப்போதும் சுவையானதும் பின் பசி போக்குவதும் ஆகும்/
ஈரங்களும் ,வாஞ்சைகளும் இல்லையேல்
வாழ்க்கை அர்த்தமற்றுத்தான் தெரிகிறதாய்,,,,/

                                   ******************



                          



            

No comments: