3 Aug 2019

தருணங்களின் வாழ்வித்தலில்,,,

வாழ்வித்த தருணங்கள் வழுக்கியது,அப்படியானால் வழுக்கிய தருணங்கள் வாழ்வித்ததா பார்க்கலாமே சிறிதுதூரம் எழுத்தாற நடந்து சென்று /கொஞ்சம் கண்ணாரவும் மனதாறவும் என சேர்த்தும் கொள்ளலாம்,

அப்பொழுதுதான் பேருந்துலிருந்து இறங்கினான், நகரப்பேருந்து அது. நகரப் பேருந்து சமயத்தில் நகராப்பேருந்தாய் ஆகித்தெரிகிறது, அதற்காய் காத்துக் கிடக்கிற பொழுதுகளிலும், அது வராத நேரங்களிலுமாய் ,/

வருகிற பொழுதுகளில் கட்டி வைத்த கூட்டத்தை மொத்தமாய் பயணிகள் என்கிற கணக்கில் அள்ளி எடுத்து அடைத்துக்கொண்டு வரும்.

சொல்லாமல் கொள்ளாமல் வானம் அவிழ்ந்து கொள்கிற முன் மழைக்காலம் அது,

அலுவலகம் முடிந்ததும் வேலையின் அலுப்பை உடல் மற்றும் மனம் முழுவ துமாய் அப்பிகொண்டு அரை கிலோ மீட்டர் நடந்து பஸ் நிலையம் சென்றால் அதிசயம் பாருங்கள்,சுற்றி இருக்கிற் இடங்கள் எல்லாம் காய்ந்து போய் கிடக்க பஸ் நிலையத்தினுள் மட்டும் தெப்பக்குளம் போல் தண்ணீர்கட்டிக்கிடக்கிறது,

கட்டிக்கிடக்கிற நீரில் மிதவுண்டவையாய் அங்கிருக்கிற கடைகள் மற்றும் கட்டிடங்கள், கட்டிங்களுக்கு ஒன்றுமாகிவிடப் போவதில்லை, கடைகள்தான் சற்றே சிரமம் தாங்கித்தெரிந்தது,

இவன் வழக்கமாய் டீக்குடிக்கச்செல்கிற கடைக்கு அருகருகிலாய் இருக்கிற சேவுக்கடை பழக்கடை மற்றும் ஜீஸ்க்கடை போலவே பஸ் நிலையத்தினுள் இருந்த கடைகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தது.

காற்றின்திசையின் போகும் தண்ணீரில் இழுபட்டுக் கொண்டு செல்லும் சேவுத் தட்டையும்,மிக்சர் தட்டையும் அதன் இழுப்பில் செல்ல அனுமதிக்கா மல் தன் திசை நோக்கி கயிறு கட்டி இழுத்து வைத்திருந்தார்,கடைக்காரர்.

தண்ணீரில் நீச்சலிடித்துக்கொண்டே வந்து சேவு வாங்கிச் செல்கிற வர்களுக்கு தண்ணீரில் மிதக்கிற தராசு கொண்டே நிறுத்துப் போட்டு தண்ணீரில் மிதக்கிற கல்லாவிலேயே காசும் வாங்கிப்போட்டுக் கொண்டார்,

மற்ற எல்லாக்கடைக்காரர்களும் கூட அப்படியே செய்தார்கள்.இதில் பழக் கடைக்காரரிடமிருந்து கழண்டகன்ற பழங்கள் பஸ் நிலையம் முழுவது மாய் மிதந்து மிதந்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தது,

மிதந்தபழங்கள் யாவும் கடைக்காரரின் சொல்லுக்கும் பார்வைக்கு மாய் முழுக்க முழுக்கக்கட்டுப்பட்டவை போலும்.ஆமாம் அப்படித் தான் தெரிந்தது, பின்னே தன் திசையிலும் தன் இஷ்டத்திற்குமாய் எங்கும் போய் விடாமல் பழக்கடைக்காரரின் கண் முன்னாடியே காட்சிப்பட்டுகொண்டு இருந்ததாய்,

அவரும் கண்ணால் பார்க்கிறார்,கண்ணால் சொல்கிறார், கண்ணால் கூப்பிடுகி றார், கண்ணால் சைகை சைகை செய்கிறார்,கண்ணால் பேசுகிறார்,

அவரது கண் அசைவிற்கும் சைகைக்கும் பேச்சிற் கும் கட்டுப்பட்டது போல் திசைகொன்றாய் மிதக்கிற பழங்கள் அவர் கூப்பிடுகிற திசைக்கு வந்து செல்வதாய் தெரிகிறது.

அவரும் கைக்கு வந்த பழங்களை வலிக்காமல் எடுத்து தராசில் வைத்து கேட்டவருக்கு புன்னைகை மாறாமல் கொடுத்தார்,

நீச்சலில் வந்தவரும் வாங்கிக்கொண்டு வலிக்காமல் போய் விட்டார் ,முங்கு நீச்சல் போட்டுக்கொண்டும், மல்லாக்க நீந்தியவறுமாய்/

பஸ் நிலையம் தண்ணீர் ,மிதந்து நின்ற கடைகள் அதில் மிதந்து தெரிந்த பொருட்கள் நீச்சலத்த மனிதர்கள் மிதவையாய் போய் வந்து கொண்டிருந்த பேருந்துகள்,எல்லாம் ஒரு சேர காட்சிக் கொண்டி ருந்த நேரத்தில் இவனு க்குத்தான் புதிதாய் முளைத்துத் தெரிந்த சிக்கல் ஒன்று தண்ணீர் மேலிடைக் கல்லாய் மிதந்துபட்டுத் தெரிந்ததாய்/

டீக்குடிக்க வேண்டும் இப்பொழுது ,திடீர் திடீர் என சொல்லாமல் கொள் ளாமல் அவிழ்ந்து விடுகிற வானத்திலுருந்து கொட்டுகிற தண்ணீர் மழையாய் காட்டி பொழிந்த பொழுது அலுவலகத்திலி ருந்து பஸ் நிலையம் வருவதற் குள்ளாய் கொஞ்சம் நனைந்து விட்டான்,

லேசாக குளிர்ந்தது.பற்கள் கொஞ்சம் தந்தியடித்தது, வயதாகி விட்டதோ,,,. ஐய்யையோ,,,,,

இளம் சூடாய் ஒரு டீக்குடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோனியது,ஆனால் நீச்சலடித்துப்போய் டீக்குடிக்கிற அளவெல்லாம் தைரியமில்லை இவனுக்கு, என்ன செய்யலாம் இப்பொழுது.

குளிர் கூடிஉடல் நடுக்கம் அதிகமாகிக்கொண்டேவருகிறது,என செய்யலாம்,? பஸ் வர வேண்டிய நேரம் தாண்டி பத்து நிமிடங்கள் ஆகிப்போனது,

இவனது யோசனையும்,மனப்பிராண்டலும் டீக்கடைக்காரருக்குக் கேட்டு விட்டது போலும்,/

கடைக்காரர் அங்கிருந்தவாறே டீயும் இரண்டு ஒரு வடையையும் சேர்த்து கட்டி நீளமான குச்சி ஒன்றின் முனையில் கட்டி அனுப்பி வைத்தார்,

வடையை சாப்பிட்டு விட்டு டீயைக்குடிக்கப்போகும் போதுதான் கவனிக் கிறான்,

அருகில் கையேந்தி நிற்கிற பிச்சைக்கார சிறுமியை, குடிக்க இருந்த டீயை அப்படியே சிறுமிக்குக் கொடுத்து விட்டு இவன் டீக்கடைக்காரரை நோக்கி சைகை செய்கிறான்,

அவரும் அதே குச்சியில் கொஞ்சமும் நனைந்து விடாமல் டீயை கட்டி அனுப்பி வைக்கிறார்,

கூடவே வந்த வடையை சிறுமிக்குக்கொடுத்து விட்டு இவன் டீசாப்பிட்டுக் கொண்டு நிற்கும் போது தாமதமாய் வந்த பேருந்து மிதவை காட்டி வந்து கொண்டிருந்தது,

பாண்டியன் நகர் பஸ்டாப் அது ,பாண்டியன் நகர் என்றால் கே.கே எஸ்.எஸ். என் நகர், ரோசல் பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ்,மற்றும் பாண்டியன் நகர் பஸ்டாப் என்கிற மூன்று நிறுத்தங்களுமே/

மூன்றுக்கும் பாண்டியன் நகர் ஸ்டாப் என்றுதான் பெயர் அப்படிச் சொல்லித் தான் டிக்கெட்டும் எடுக்கிறார்கள், மூன்று இடங்களுக்கும் டிக்கெட் ஒரே விலைதான்,

மூன்றுக்கும் இடைவெளி தலா அரைக்கிலோ மீட்டர்களாவது இருக்கும். சொல்லி வைத்தது போல,/

இப்படியெல்லாம் அமைவது ரொம்பவும் அபூர்வமே/ தூரங்களில் இடைவெளி சொல்லிச் செல்கிறதாயும் அளவீடுகள் சரி காட்டியுமாய்/

இவன் இறங்க வேண்டிய இடம் மூன்றாவதாய் வந்து நின்ற பாண்டியன் நகர் பஸ்டாப்பில்/

இவன் இறங்கி கால் தரையில் கால் வைத்த நேரம் இவன் எதிரே சவ ஊர்வலம் ஒன்று மெல்ல நகர்ந்து போய்க்கொண்டிருந்தது,

தெரு விளக்குகள் போடப்பட்டிருந்தது,விளக்குகளின்வெளிச்சத்தில்ஆம்புலன் ஸினுள் படுக்க வைத்திருந்தவர் எதோ சொன்னது போல் சாலையையும் சாலையின் மனிதர்களையும் பார்த்து/

வாழ்வித்த தினங்கள் வழுக்கிய தருணத்தை இவனும் கண்ணுற்றவனாய் போய்க் கொண்டிந்தான்,

இவன் சாலை கடந்த நேரம் அரசு மருத்துவ மனையில் அழகான குழந்தை ஒன்று பிறந்திருப்பதாய் எட்டுத்திக்கும் சென்ற செய்தி அசரீரியாய் ஒலித்தது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் ஒரு குழந்தையாய் மாறிய தருணம்...

vimalanperali said...

குழந்தை மனம் எல்லோரிலும் குடி கொண்டுள்ளதுதானே,,,?