12 Aug 2019

விடிவுகளின் சுவடு கொண்டு,,,,

ஞாயிறுகளின் விடியல் சற்று நீட்சி கொண்டு புலர்வதாய்த்தான் படுகிறது,

இல்லையென்றால்நான்கு மணிக்கு எழுந்தவன் திரும்பவுமாய் ஆறு மணிக்கு படுத்துத் தூங்கி விட்டு எட்டு மணிக்கு எழ வேண்டிய நிர்பந்தம் என்னவாய் இருந்து விட முடியும்?

அதிகாலையில் எழுந்து சாலை வழி நடந்து இளஞ்சூரியனை பார்த்து பாத சாரிகளை தரிசித்து,திறந்திருக்கிற டீக்கடைகளின் தரிசனம் பெற்று,,என இன்னும் இன்னுமாய் பார்த்து ரொம்பவும் நாட்களாகிப்போனது,

வேர்க்க விறுவிறுக்க எக்ஸர்ஸைஸ் செய்கிறவர்களும்,சைக்கிளிங்க் போகிற வர்களும், நடைப்பயிற்சி மேற்க்கொள்கிறவர்களும் சாலையை அந்நேரமே விரைவு படுத்தி இயங்க வைத்துக்கொண்டிருக்கிற காட்சியைக்காண கண்கள் இரண்டு போதாது.

மண் விரித்த மென் சாலையில் தன் பாதம் பதித்து நடந்தும் ஓடியும் நாட்கள் ரொம்பவுமாகிப் போனது,

அது ஒரு காலம்,அதிகாலை எழுந்து வீட்டில் முகம் கழுகிறவன் சாலையில் வந்துதான் முகம் துடைப்பான்.

வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து குருசாமி அண்ணன் கடையில் ஓரம் கட்டிவிட்டு நடையை ஆரம்பிப்பான்,

ஆரம்பிக்கிற நடை ஓட்டமாகி,ஓட்டம் சைக்கிளிங்கில் வந்து முடிந்து திரும்ப வும் டீக்கடையில் உறை கொள்கிற போது மாரியம்மாக்கா எதிர்ப்படுவாள் சமயத்தில்/

”யக்கா,என்னக்கா ,ஜே சி பி மிசின வச்சி இழுத்தாலும் சாமான்யத்துல வீட்ட விட்டு வெளியில வர மாட்ட,இப்ப என்னக்கா திடீர்ன்னு வாக்கிங்ன்னு கெளம்பீட்ட,என்றால் ”டேய் கிறுக்கா அக்காகிட்ட பேசுற மாதிரியா பேசுற கூறுகெட்டவனே இழுத்தேன்,கிழுத்தேன்னு,,அறிவு கெட்டவனே,, என்பவள்,,,

அது ஒண்ணுமில்ல ,டாக்டர்கிட்ட போயிருந்தேன் சொன்னாரு ,பேசாம காலையில எந்திருச்சி ஒரு மணி இல்ல அரை மணி நடங்க,ஒடம்புல இருக் குறபிரச்சனையிலகொஞ்சம்கொறையுமுன்னாரு,அதான்கெளம்பீட்டேன் நடக்க லாமுன்னு,,,,

”நானும் நடை முடிச்சி வர்றேன் ,நீயும் வர்ற இப்பிடி பாத்துக்கிட்டாத்தான் உண்டு போல,சரி வா டீ சாப்புடுவோம்,இனி நா வீட்டுல போயி அடுப்புப்பத்த வச்சி டீப்போட்டு சாப்புடறதுக்குள்ள விடிஞ்சி போகும் ,விடிஞ்சி,

”என்ன போட்டாலும் குருசாமியண்ணன் போடுற டீக்கு ஈடு வராது,வா வந்து உக்காரு பெஞ்சில,இந்த மாதிரி வேளைகள்ல ஒக்காந்து டீக்குடிச்சாத்தான் உண்டு. கொஞ்சம் நேரம் போச்சின்னா கூட்டம் வர ஆரம்பிச்சுரும்,

அதுலையும் பொம்பளைங்க நாங்க எங்க போயி டீக்கடையில் உக்காருறது,,?

இவ்வளவு பெரிய ஏரியாவுல பொம்பளைங்க உக்காந்து சாப்புடன்னு ஒரு டீக்கடை கெடையாது,அவுங்க ஒதுங்கன்னு ஒரு பாத்ரூம் கெடையாது.ஆனா ஆம்பளைங்க நீங்க நெனைச்ச கடையில உக்காந்து டீக்குடிக்கவும்,நெனைச்ச யெடத்துல ஒதுங்கி போய்ட்டு வந்துறவும் முடியுது,என்றவள்,,,

”டீக்கு ஒழுக்கமா காசு குடுத்துரு அக்கான்னு வாய் நெறைய கூப்புட்டா மட்டும் போதுமா”, ”வீட்டுக்குப்போயி இனி ஒங்க மாமாவ கெளப்பி விடணும் ,குட் செட்டு வேளைக்கி,அவருக்குன்னு தனி சாப்பாடு தனி ஏற்பாடுன்னு ஏதாவது செஞ்சி குடுக்கணும்,பாவம் ஒடம்ப படுத்தி ஒழைக்கிற மனுசன், ரத்தத்த வேர்வையா சிந்துறவருக்கு நாம் ஏதாவது செஞ்சி குடுக்கணுமில்ல, அவரு என்னா சாப்பாடுதான கேக்குறாரு அதக்கூட செஞ்சி குடுக்க முடிய லைன்னா நான் என்ன மனுசி” என அடையாளப்படுத்துகிற இவனது மாமா ரயில்வே குட் செட்டில் மூட்டை தூக்கிறார்,

உழைப்பின் தடத்தில் ஊறிப்போன உடலை போர்த்திக்கொள்ள இது நாள் வரை சட்டை கூடபோட்டதில்லை என்கிற குறைந்தபட்ச ஆடம்பரமே அவரது அடையாளமாய் இருந்தது,

ஒட்டிப்போன வயிறு ,வத்திப் போன கன்னம் கலைந்து போயிருக்கிற கேசம் உலர்ந்து போன தேகம் இதுதான் அவர் என ஏரியாவில் பிறந்த குழந்தை கூடச் சொல்லி விடும்/

நானும் அந்த மனுசனத்தேத்த கறியும் புளியுமாத்தான் சமைச்சிப் போட்டுப் பாக்குறேன்,ஒண்ணும் கதையாகிற மாதிரித்தெரியல,

என்னைக்கி மூத்த புள்ளை ஆசைப்பட்டவனுக்கு வாக்கப்பட்டுப்போனாளோ அன்னைக்கிலயிருந்தே ஒடுங்கிப்போனாரு மனுசன்,

ஜாதி அந்தஸ்த்தஸ்தெல்லான் பாக்கல அவரு, போற யெடத்துல புள்ள நல்லா இருந்தா போதுமுன்னு நெனைச்சாரு,அது நடக்கலை,

எப்பிடி நடக்கும்,அந்தப்பையன் வேணாம் அவன் நடத்த கெட்டவன் ,கொணம் கெட்டவன்னுஎத்தனையோசொல்லிப்பாத்தாரு,கேக்கல,நீங்ககட்டிவைக்கிறீங்க ளா, நாங்களா ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கவான்னு தாவாவுல இருந்த ஒரு நாளையில மாலையும் கழுத்துமா வந்து நின்னாங்க,

அன்னைக்கி மனசு ஓடிஞ்சவருதான்,மருந்தக்குடிச்சி உயிர மாச்சிக்கிலாமு ன்னு கூடநெனச்சாரு,என்னைய மனசுல வச்சிக்கிட்டுத்தான் கைவிட்டுட்டா ரு அந்த முடிவ,அன்னைக்கி ராத்திரி அவரு அழுத கண்ணீரு இருக்கே, விட்டி ருந்தா இந்த ஏரியா முழுக்க ஓடி நெறச்சிருக்கும் என்றாள்.

அவரை வேலைக்கு அனுப்பத்தான் அக்கா வேகமாகப்போய்கொண்டிருந்தாள்,

”நான்கு மணிக்கு எழுந்தாய்தானே,பின் ஏன் ஆறு மணிக்காய் தூங்கிப்போக வேண்டும்? பின் ஏன் ஆறில் ஆறபோட்ட உடலை தூக்கிக்கொண்டு எட்டு மணிக்கு எழ வேண்டும்”,,,?இவனுக்குள் குடிகொண்டெழுந்த கேள்விக்கு பதில் இவன் மட்டுமே அறிந்த ரகசியமாய்/

நான்கு மணிக்கு எழ முடியவில்லை,ஓடோடி வந்து ஒட்டிக் கொண்ட தூக்கத் தை புறங்கையால் எட்டுத்தள்ளிவிட்டும் தூரப்போ என கழுத்தைப் பிடித்துத் தள்ளாதகுறையாய் வம்படியாய் விரட்டி விட்டும் முகம் கழுவிக் கொண்டும் வந்து அமர்கிறான்,

பூக்காத பூவை பூக்க வைத்து விடலாம் ,ஆனால் வாசனை கொண்டு வர இயலாது என்பதை பொய்யாக்கி பூக்க வைத்தும் வாசனை கொண்டு வந்து வீடு முழுக்க மணக்க வைக்கிற வேலையை செய்கிறவனுமாய் ஆகிப் போனான் அந்த அதிகாலையில்/

அதிகாலைதூங்கிப்போன சுற்றம்.இலைகளின்அசைவு கூட காற்றின் அனுமதி கேட்டுத்தான் அசைகிறதாய் தெரிகிறது, ஏற்கனவே தயாராக்கி வைத்திருந்த வேலையை மனம் சுமந்து சிரமேற் கொண்டு செய்ய அமர்கி றான். வேலை வேலை வேலை,வேலை செய்கிறவர்களால் சும்மா இருக்க முடியாது என்பார்கள்,

”அழுதுக்கிட்டு இருந்தாலும் உழுதுக்கிட்டு இருப்போம்” என்பது போல எத்தனைதான் அழுத்தம் கொண்டு திரிந்த போதிலும் செய்கிற வேலையை செய்துதானே ஆக வேண்டி இருக்கிறது,”

”உழுகுறவனுக்கு ஓய்வு ஏர்க்காலோரம்” எனச் சொல்வது போல இவனுக்கு ஓய்வு இயங்கிக்கொண்டிருப்பதில்தான்,/ எனச் சொல்லலாம்,

அதிகாலைக்கு சற்று முன்னாகவே விழிப்பு வந்து விடுகிறது,பாத்ரும் போவ தற்காய் எழுந்திருக்க நினைத்தவன் மனமில்லாமல் படுக்கையிலேயே புரண் டு கொண்டிருக்கிறான்,

இது கூட ஒரு வித சுகமாகவே இருக்கிறது, பிரியம் விதைத்தவர்களும் மனம் நிறைந்தவர்களுமாய் வீடு நிறைத்திருக்க பிடித்தம் கொண்ட வாசனை யாயும் மனம் முழுக்க விசிறிப்பரவும் பூக்களின் சுகந்தமாயும் வீடுமனம் நிறைத்தி ருக்க வந்து விட்ட விழிப்பை தூரத்துரத்தி ஓடிப்போய் விட்ட தூக்கத்தை திரும்பவுமாய் அழைத்து வர முடியவில்லைதான்,

ஊடல் கொண்டவள்அது மறந்துமனம்முழுக்கவுமாய் அப்பிக் கிடக்கிற பிரியம் விரிய அருகில் வரும் போது திரும்பவுமாய் தலை எடுக்கிற ஊடல் போல தூக்கம் அருகருகாய் வந்து இமைகளை தொட்டு இள முத்தமிட்டு விட்டும் சிணுங்கல் காட்டிவிட்டுமாய் போய் விடுகிறது,

“அடபோங்கப்பா,,,கைக்குஎட்டியதுவாய்க்கு,,,,,வந்தவிழிப்புஇன்னும் கொஞ்சம் தாமதம்காட்டி வந்திருக்கலாம்,நான்கு மணிக்கு விழிக்கும் முன்பாய் இரண்டு மணிக்கி விழிப்புத்தட்டி விடுகிறது,

படர்ந்து பாவியிருக்கிற கொடி கொண்ட தரையின் நீட்சி சொல்லிக் கேளாத கோடாய் முளைகொண்டு செல்லும் பாதைகள் யாவும் பூப்பும் காய்ப்பும் மொட்டு விடலுமாய் நடந்து கொண்டிருந்த அதிசய நாற்றாங்காலாய் மண் பிளந்து துளிர்த்து வளர்ந்தது இலைகளும் கிளைகளுமாய் விழுதிறக்கி ஆக்ர மித்துக் கொண்டிருக்கிறதாய்,/

இன்னும் ஒரு மணிநேரம்கழித்து விழிப்புவந்திருக்குமானால்நேராய் குருசாமி யண்ணன் கடைக்குக் கூடபோயிருக்கலாம்டீக்குடிக்க/

சென்ற வாரத்தின் ஒரு குளிர் பொ ழுதின் மாலை வேளையாய் அவர் கொடு த்த டீயைகுடித்துக் கொண்டே கேட்ட பொழுது சொன்னார்,

”சார் காலையில மூண்றரை மணிக்கே கடை தெறந்துருவேன், இந்தா இருக்கு இருபது எட்டுல பால் டிப்போ,காலையில மொதப்பாலு நமக்குத்தான் சப்ளை யாகும்,

அதான் ஒங்க சேக்காலி இருக்காரே பால்பண்ணை ஓனரு,அவரு நமக்கு பால் கொண்டுவந்துகுடுத்துட்டு,அதே பால்ல டீரெடியானதும்குடிச்சிட்டு அப்பிடியே டிப்போவுல இருக்குற மத்த எல்லாருக்கும் கொண்டு வரச்சொல்லீட்டுப் போவாரு,

என்னையப்பொருத்தஅளவுக்கு அதுதா மொதபோனி.என்பார்,டீக்கடைக்காரர்.

பால் டிப்போவின் முதலாளி எப்போதிலிருந்து இவனில் முளைவிட்டார், எப்பொழுது தோள் படர்ந்தார் என்பது நினைவில்லை இவனுக்கு.

ஆனால் படர்ந்து விட்ட படரலை இன்றுவரை விடாமல் வசப்படுத்தி வைத் திருக்கிறார், இவனும் அந்த வசபடுத்துதலுக்கு இது நாள்வரை எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொள்கிறவனாய் ஆகித் தெரிகிறான்,

இவனை வசமிழக்க வைத்த விட்ட நெருக்கடியான பிரச்சனையின் போது நண்பர்கள்,தோழர்கள் உற்றவர்கள்,,எல்லாம் இருந்தும் அவர் தான் வந்து அருகில் நின்று தோள் தடவி மனம் நீவி விட்டார்,

ஒன்னும் கவலைப்படாதீங்க,நீங்க நெனைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணும் ஆகாது,அப்படி எதாவது ஒண்ணுன்னா நாங்க இருக்கோம் என்கிற ஒற்றைச் சொல்லில் நம்பிக்கை ஊட்டிவிட்டுப் போனார்,

அதன் கை பிடித்துதான் பிரச்சனை முடிகிற நாள் வரை நம்பிக்கை காத்தான். ஏற்கனவெ முளைகொண்டிருந்த பிரச்சனை ஊர்த்திருவிழா நாளில் துளிர் கொண்டு திமிர பற்றிக்கொள்கிறது ஊர் ,பற்றிகொண்டது இரண்டு பக்கமுமாய் பிரிந்து தெரிய சாதாரண மனங்களில் கொம்பு முளைக்க ஆரம்பித்திருந்தது.

இதுமுளைக்கிற கொம்பு இல்லையே,ஊனி வைக்கபடுகிற கொம்புதானே எனத் தெரிவதற்கு சிறிது நாட்கள் ஆனது,

அதற்குள்ளாய் ஊர் இரண்டு பட்டுப் போய் ஒன்றாய் இருந்த மனித மனங்கள் யாவும் பிளவு கொண்டு திரிய ஆரம்பித்ததாய்/

ஏற்பட்ட விரிசலை அதிகமாக்கவும்,முளைத்த கொம்பை கூர் தீட்டி விடவுமா ய் காத்திருந்தவர்களின் விஷ நகங்கள் ஊர் முழுவதுமாய் நீண்டிருக்க நீண்டி ருந்த கரத்தின் கொடும் விஷம் மென்னியை எட்டிப்பிடிக்க காத்திருந்த நேரத் தின் செய்தி அறிந்தவராய் அவர்சொன்னஅந்தவார்த்தைஇவனில்இன்று வரை வேர் ஊன்றித்தெரிவதாய்/

நெருக்கடி வேளைகளில்தான் உண்மையான நட்பும்தோழமையும் வெளிப் படும் என்பார்கள்.

அவரிடம்அதைக்காண முடிந்தது, அதை டீக்கடைக்காரர் எப்படியோ கண்டு கொண்டார்,

ஒருவர் அந்த ஏரியாவில் குடி வந்துவிட்டால் அவர் யார் என்ன எந்த ஊர் எந்த ஜாதி என்னென்ன அவரது நடைமுறை என்பது அவர்களுக்கு உள்ளங் கை நெள்ளிக்கனியாய் ஆகிப்போகிற வித்தையாய்/

அந்த அடிப்படையில்தான் டீக்கடைக்குப்போயிருந்த ஒரு நாளில் சொன்னார் ஆளரவமற்ற பொழுதில்.

”சார் இன்னென்ன மாதிரியா மில்ல,டிப்போக்கார மொதலாளி வருத்தப்பட்டுக் கிட்டு இருந்தாரு,அதெல்லாம் ஒண்ணும் ஆகாது கவலப்படாம இருங்க” என்றார்.

காலையில அவரு கொண்டு வந்து குடுத்த மொதப்பாலுக்கு அவர் கிட்ட கடன் சொல்ல முடியாது, கடையில் போனியும் ஆயிருக்காது,வீட்ல இதுக் குன்னு எடுத்து வச்ச காச குடுத்துருவம்,

”சமயத்துல அவரு குடுத்த பாலுக்கான காச முழுசா குடுக்க முடியாமப் போயிரும்.அந்த மாதிரி வேளைகள்ல இருக்குதக்குடுன்னு வாங்கீட்டுப் போயி ருவாரு,சமயத்துலசாய்ங்காலம்வாங்கப்போற பாலுக்கும் சேத்தே காலையில காசுகுடுத்துருவம்,என்ன வாங்காத பாலுக்கு அட்வான்ஸான்னுவாரு, டிப்போ முதலாளி,

”மத்த வேளையின்னா கடன் சொல்லிக்கலாம்,அப்பிடிச் சொல்லித்தான் பால் வாங்குவோம் இங்க இருக்குற கடைகாரங்களெல்லாம், அப்படித்தான் அவுங்க ளும் குடுக்க முடியும்,நாங்களும் வாங்க முடியும் ,எல்லாமே ரொக்கப் பரிவர் த்தனையிலைதா நடக்கணுமுன்னா இங்க எந்த வியாபாரமும் பாத்துக்க முடியாது பாத்துக்கங்க” ,,என்பார்,

”இந்தா பாருங்க ,கடைக்குள்ள ஒரு கனமான நோட்டு கெடக்கு பாருங்க,அது முழுக்க ,கடன் கணக்குதா,அந்த நோட்டுக்குள்ள ஒங்களப் போல ஆள்களும் இருக்காங்க,சில வெளங்காப் பயலுகளும் இருக்காங்க,ஒரு வருஷம் ஆகிக் கூட கையில காசு தராம கணக்குலஓடிக்கிட்டு இருக்குற ஆளெல்லாம் இருக் காங்க,அப்படிப்பட்ட பையலுகளுக்கு குடுக்காம இருக்கலாம்தான்,

ஆனா அது கஷ்டம்/

”ஐய்யோ ஒரு தடவை பாத்தீங்கன்னா காலையில கடை தெறந்த ஒடனே டீக்குடிக்க வந்தவன் எனக்கு டீயும் சிகரெட்டும் குடு,கணக்குல எழுதிக்கங்க ன்னு நிக்கிறான் ஒத்தக்கால்ல,

”அடேய் இப்பத்தான் கடை தெரந்திருக்கேன் ,கொஞ்சம் நேரம் கழிச்சி வாடா ன்னாலும் கேக்க மாட்டேங்குறான்,

”அப்புறம் என்ன செய்ய சத்தம் போட வேண்டியதாத்தான் போச்சி,”

”சரி சத்தம் போடுறாங்களே ,நம்ம ஒரு வருஷமா காசு குடுக்காம டீ குச்சிட்டு வர்றமேன்னு இல்லாம கல்லெடுத்து அடிக்க ஓடி வர்றான்,

அப்பறம் என்ன செய்ய மல்லுக்கட்ட வேண்டியதாப்போச்சி,பாம்ப அடிக்க கம்பெடுத்துத்தான ஆகணும்,ரெண்டு பேரும்கட்டி உருளுறோம், வெலக்கி விட ஆளு இல்ல அந்நேரத்துல,கேள்விப்பட்ட பால் டிப்போ மொதலாளிதா வந்து சண்டைய வெலக்கி விட்டுட்டு அவன சத்தம் போட்டு அனுப்பி வச்சாரு,

”அதுக்குள்ள அவன் வீட்டுல இருந்து கைப்புள்ளையோட ஓடி வந்த அவன் பொண்டாட்டிக்காரி கையெடுத்துக்கும்புட்டு கண்ணீர் வடிக்கிறா,,?”

”எதுன்னாலும் இந்த பச்சை புள்ள மொகத்துக்காக விட்டுருங்க,போன தடவ மாதிரி போலீஸ் ஸ்டேசனுக்குப்போயி நிக்காதீங்கங்குறா,

”ஏம்மா வேணுமுன்னா அவன் மேல போலீஸ்ஸ்டேசன்ல போயி புகார் குடுத்தேன்?அன்னைக்கி நா அப்பிடி போயிருக்கலைன்னா ஏங் கடைய கொளு த்தீருப்பான் தெரிஞ்சிக்க,கையில பெட்ரோல் பாட்டிலோட வந்து நிக்கிறான், அப்படியாப்பட்டவன என்ன செய்யச்சொல்லுற, கடனுக்கு வாங்கித்தின்னதும் இல்லாமஇப்பிடி வந்து கடையக்கொளுத்துவேன்னு நின்னான்னா தூக்கி வச்சி கொஞ்சவா செய்வாங்க,,,”என அன்று தள்ளி விட்டவனை இன்றும் நோட்டின் பக்கங்கள் சுமந்து கொண்டிருக்கின்றன,

”அவிங்கசார் விருதாவ திரியிறவிங்க,இந்தக் கடையில்லைன்னா வேற கடை அதுவும் இல்லைன்னாவேற கடை ,அதுவும் இல்லைன்னான்னு தாவித்தாவிப் போயிக்கிட்டுஇருக்குறவுங்க, நம்ம அப்பிடியில்ல தொழில் பண்ணுறவுங்க, மொதல் போட்டு நாலு காசு எடுக்குறவுங்க,

அப்பப்ப இப்பிடி ஒண்ணு ரெண்டு வருந்தான்,நாந்தான் தொழில் செய்யிற யெடத்துல வீண் பிரச்சனை வேணாமுன்னு அப்பிடியே விட்டுர்றது என்றார்,

தாமதம் காட்டி எழுந்த இந்த எட்டு மணிப் பொழுதில் அவரது கடைக்குச் சென்று டீ சாப்பிட வேண்டும் போல் இருந்தது.

4 comments:

வலிப்போக்கன் said...

அன்று வசதி ( காசு) இல்லாததால் டீ குடிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது.. இடையில் நண்பர்களுக்கு வாங்கி கொடுத்து அவர்கள் டீயை குடிப்பதை பார்த்தும் டீ குடிக்கும் பழக்கம வரவில்லை..கொஞ்சம் பால். சிறிது டிக்காசன், அதிகம் தண்ணீர் என்று சொல்வேன்.....இப்போது டீ குடிக்கும் நல்ல பழக்கத்தை விட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது....

vimalanperali said...

டீக் கடைகள் வெறும் டீக்களை மட்டும் தருவதில்லை.
டீக்ககடைகளில் விரிந்துகிடக்கும்
வாழ்க்கையையும் காணக்கொடுக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

உங்க எழுத்து ஒரு அற்புதம் அண்ணா...
அருமை.

vimalanperali said...

அந்த அற்புதத்தை செய்பவர்கள் நீங்கள்தானே,,,/