23 Sept 2010

மின்சாரம்




நூற்றி ஐம்பத்தைந்து ரூபாய்
மின்சாரக்கட்டணம் கட்டவேண்டும்
என தேனீர் ஆற்றிக்கொண்டே
சொன்ன கடைக்காரர்
தொப்பை சரிந்து சிரிக்கிறார்.
போகும் தின்ந்தோறும்
ஏதாவது ஒன்றைப்பற்றி
பேசுபவராகவே உருவகப்படும்
அவரில்
மனைவி,மக்கள்,குடும்பம்,
வரவு,செலவு,கடன்பாக்கி
பொருளுக்கு கட்டவேண்டிய தவணை,
என்பதே அவர் பேச்சகவும்பதிவாகவும்.
"சேவக்கூவ" கடைதிறக்கும் அவர்
இரண்டுரக வடைகளும்,
இனிப்பு பணியாரமுமாக
கடையை னிரப்பிக் காட்சிப் படுத்துவார்.
வடை,இனிப்பு,
பீடி,சிகரெட்,கலர்,
சாந்திப்பாக்கு,பான்பராக்,
இவைகளுடன் தேனீர்,
என்கிற வரிசையில்
"ஒன்றை வைத்துத்தானே இன்னொன்று போனி"
எனப்பேசும் அவரது கடையில்
இப்போதெல்லாம்
வெறும் தேனீர் மட்டுமே இருந்தது.
"வீட்டுக்காரிகீழ விழுந்ததுல
இடுப்பு ஒடிஞ்சுபோச்சு.
படுக்கையில கெடக்குறா ,
ஒம்போதுமணிக்கு கடை எடுத்துவச்சிட்டு
அவளுக்குப்போயி நாந்தான்
எல்லாம்பாக்கணும்."
என்ற அவர்
காதருகே வந்து மெதுவாக கேட்கிறார்.
"சார் மலம் கழிக்கும் கோப்பை
எங்கு என்ன விலையில்
கிடைக்கும்" என./

No comments: