கடலை பருப்பு வாங்க வேண்டுமாய் போய்
பட்டாணி நூறு கிராம் வாங்கி வந்தேன்
திடீர் ஞாபகம் வந்தவனாக.
பட்டாணிக்குப்பக்கம் கடலைப்பருப்பு
அதன் அருகாமையாய் உப்புக்கடலை
அடுத்த்தாக பொரிகடலை என
குவித்து வைத்திருந்தவைகள்
எல்லாம் நன்றாகவே இருந்தது.
அந்தக்கடைக்காரைத்தவிர.
பக்கத்திலேயே தேங்காய்க்கடை,
அதை ஒட்டியதாய் மிட்டாய்க்கடை,
பீடிக்கடை பலசரக்குக்கடை
ஜவுளிக் கடை என
பல் முளைத்திருந்த வரிசையாய்.
நான் நின்றிருந்த காய்கறிகடையில்
முட்டைக்கோஸ்,தக்காளி,வெங்காயம்
எப்போதுமே கிடைக்கும்
சிறப்பு என்கிறார் கடைக்காரர்.
அவர் குவித்து வைத்திருந்த
காய்கறிகளும் அதை வாங்கிய
பெண்களும்,ஆண்களும்
அழகாகவே தெரிந்தார்கள்.
இருநூற்றி ஐம்பதிலிருந்து
முன்னூறுக்குள்ளா இருக்கலாம் ,
அவர்கள் அணிந்திருந்த சேலை .
அதற்கு மேட்சான சட்டையும்
சுமார் ரகமாகவே.
அதைப்போலவே ஆண்களினதும்
அவர்கள் வைத்திருந்த பையும்,
பையினுள்ளிருந்த கையிருப்பும்
கொஞ்சமாகவே.
பட்டாணிக்கடையிலும்,
அதை ஒட்டியதேங்காய்க் கடையிலும்,
காய்கறிக்கடையிலும்,
இன்னமும் பிறகடையிலுமாக
நின்றவர்கள்,வந்தவர்கள்.
போனவர்கள்,வாங்கியவர்கள்,
வாங்க யோசித்து நோட்டமிட்டவர்கள்
எல்லோரிலும் எனது ஏழ்மை முகமும்
மனதும் பதிந்திருப்பதாகவே அறிகிறேன்.
No comments:
Post a Comment