26 Sept 2010
அஞ்சலி
பாண்டியராஜனின்
தாயார் இறந்து போகிறார்.
தனது
எழுபத்தியிரண்டாவது வயதில்.
ஓய்வறியா
உழைப்பாளியின் தேகம்
வீட்டின் நடு ஹாலில்
வைக்கப்பட்டிருக்கிறது.
நான் செல்கிறேன்
பார்த்து விட்டு வர.
உடன் தோழர்கள் வருகிறார்கள்,
அடுத்தடுத்ததாய் நண்பர்கள்,
உறவினர்கள்,பழகியவர்கள்,
தெரிந்தவர்கள் எனபார்த்து விட்டு
அருகில் அமர்ந்து
அழுது கொண்டிருந்தவர்களுக்கு
ஆறுதல் கூறிவிட்டு
வெளியில் வருகிறோம்.
ஊதாக் கலரில் கதவும்,
சிவப்புக்கலரில் ஜன்னலுமாய்
இருந்த அந்த க்காலத்து வீடு
விட்டங்கள் தாங்கி
அங்கங்கே காரை பெயர்ந்து.
இறப்பதற்க்கு ஒரு வாரம்
முன்புவரை
தெரு முனையிலிருந்த
குழாயடியிலிருந்து
தண்ணீர் சுமந்தார்கள்,
துணி துவைத்தார்கள்,
சமையல் வேலை செய்தார்கள் .
இது போக ஓய்வு நேரங்களில்
தீப்பெட்டி ஒட்டினார்கள்.
எனச் சொன்ன ஆறாம் வீட்டுப்பாட்டி
அவளுக்கும், எனக்கும்
ஒரே வயதுதான்.
இதே ஊரிலே பிறந்து,
இதே ஊரிலே வளர்ந்து
இதே ஊரிலேயே வாழ்க்கைப் பட்ட
நாங்கள்
ஏழையாகவேபிறந்து
ஏழையாகவே இறந்து போகிறோம்.
அவள் முந்திக்கொண்டாள்.
நான் முடிகிறவரை உழைத்து
முடியமற்போகிற நாட்களில்
இறந்து போவேன். என
தனது அஞ்சலியைத்
தெரிவித்துக்கொள்கிறாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment