25 Sept 2010

தொடர்வண்டி









எல்லாமே பிழைப்பை நோக்கிய
ஓட்டமாகத்தான்இருக்கிறது.
நான்
சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறேன்.
அலுவலகப்பணி நிமித்தமாக.
அவன்
ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கிறான்
டிக்கட் கலெக்டராக.
அரைமணி முன்புதான்
தனியார் மில்லில் வேலை பார்க்கும்
அவனது சாகோதரனை சந்தித்தேன்.
அவன் அணிந்திருந்த
அடர்த்தி நிற ஆடைகளே
அவனது வேலைக்கு ஏற்றது என்கிறான்.
"அப்படி நிறங்களே
தனக்கு பிடித்துப்போனதெனவும்,
அப்படிப் பார்த்தால்தான் ,
சுற்றுப்புறம் தன்னை,
அடையாள்ம் கண்டு கொள்கிறது" என்கிறான்.
ஷேர்ஆட்டோக்காரன்
"காக்கி உடைகளே"
எங்களின் அடையாளம் என்கிறான்.
நான் வெள்ளைப்பேண்ட்டும்
வெள்ளைச்சட்டையுமாய்.
பொன்னி அரிசிச்சாதமும்
ஏதாவது ஒரு நாளில்
பாசுமதியுமாய் நகர்கிற சாத்தியம்
எனதுகுடும்பத்திற்கு.
வாரச் சம்பளத்தை கணக்கிட்டே
வாழ முடிகிற
கச்சிதமும் ,கட்டாயமும்
மில் வேலைக்காரனிடம்.
ஓடுகிற நாட்களில் கை நிறையவும்,
ஓடாத நாட்களில் அரைக்கையுமாக
அள்ளிச் சாப்புடுகிற
ஷேர் ஆட்டோக்காரனின் வாழ் நிலை.
நான் வசிப்பது சொந்த வீட்டில்.
எனது பிள்ளைகள் இரண்டும்
இங்கிலிஸ் மீடியம் ஸ்கூலில்.
மில் வேலைக்காரன் வாடகை வீட்டில்.
அவனுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை.
ஷேர் ஆட்டோக்காரன்
ஒத்திக்கு வீடு எடுத்து.
அவனது பிள்ளைகள் நகராட்சிப் பள்ளியில்.
எங்களின் சேமிப்பு ,செலவு ,
சிறுபாடு,வங்கிக்கையிருப்பு,
சுற்றுலா,விசேச நிகழ்வுகள்
எல்லாமே
எங்களது ஓட்டத்தை பொறுத்தே
அமைவதாக உள்ளது.
ஆகவே ஓடும் ஓட்டம் யாவிலும்
பிழைப்பே பிரதானப்புள்ளியாகிப்போகிறது. .

No comments: