14 Nov 2010

நெருஞ்சி,,,,,,,,,,,,

                           


              ந்த சிறுவனுக்கு பத்து பதினோரு வயதிருக்கலாம்.
பின்னே அந்த வயதிற்குரிய சேட்டைகளும்,விளையாட்டுத்தனங்களும் இல்லாமலா இருந்தது அவனிடம்?
சீசன் விளையாட்டுகள் களை கட்டும் நேரம் எக்ஸ்ட்ராவாய் இரண்டு கைகால்முளைத்துவிடும்அவனுக்கு.   
  கிட்டி,பம்பரம்,எறிபந்து,செதுக்குமுத்து,டயர் வண்டி(சைக்கிள் டயரை உருட்டி விளையாடுவது) இன்னும் இன்னுமான நிறைய விளையாட்டுகளில் அவன் முன் நிற்பான்.
    அவனுக்கு வாய் சரியாக பேசவராது.காதும் கேட்காது.ஆளே மெலிந்து வாடி மேனி கருத்துப் போய் உடல் ஒட்டி  இருப்பான்.பேச வராததாலும்,காது கேட்காததாலும் பள்ளிக்குப் போகவில்லை அவன்.
      காலையில் எழுந்தததும் முகம் கழுவிகிறானே இல்லையோ  நேராக ஊர் மந்தைக்கு வந்து விடுவான்.மந்தையை ஒட்டிய கண்மாய்க் கரை மேல் நான்கைந்து இச்சி மரங்கள்.கரையை ஒட்டிய இரண்டு டீக் கடைகள்.காலை நேரம் அந்த டீக் கடையும்,இச்சிமரப்பறவைகளும் கண்மாய்க் கரையும் கொஞ்சம் பிஸியாகவே இருக்கும். அவைகள்தான்  அந்த சிறுவனின் பொழுது போக்குக் களம்.
     பறவகளை கல்லை வைத்து எறிய,டீக்கடைக்கு வருபவர்களோடு வாக்குக் கொடுக்க,கண்மாய்க்குள் போகிறவர்களோடு விளையாட்டு,சேட்டைகள் என இதுதான் அவனின் அன்றாடங்களின் ஆரம்பம்.
     அப்புறம்,?
    அப்புறமென்ன,,,,,,,,,எல்லாம் முடிந்தவுடன் காலையில் வீட்டுக்குப் போவான்.அவனுக்கென ஈயத் தட்டில் சாப்பாடு,செம்பில் தண்ணீர் வீட்டில் காத்திருக்கும்.      இவனாக போட்டு சாப்பிட்டுக் கொள்ளவேண்டியது தான்.
அம்மா கூலி வேலைக்குப் போயிருப்பாள்.
         விளையாட்டும் பொழுது போக்குமாய் சாப்பிட்டுவிட்டு ,,,,,,வீட்டை பூட்டி முன்பிருந்த மாதிரியே கதவு நிலையின் மேல் சாவியை வைத்து விட்டு கிளம்பிவிடுவான்.திரும்பவும்மந்தைக்குவருவான்.வேறென்ன விளையாட்டுதான்.
    விரும்பினால் மதியம் சாப்பிடப் போவான்.இல்லையென்றால் பட்டினியோடு ஏதாவது ஒரு மர நிழலில் தூங்கிப் போவான்.
சாய்ங்காலம் ஆனதும் மணி அடித்தது போல விழித்து எழுவான்.விழித்து எழுந்தவன் கண்ணை கசக்கியவாறே நேராக கண்மாய்க் கரைக்குச் செல்வான்.
      அரைமணி நேரமாவது குளிப்பான்.கண்மாய் ஓரமாக உள்ள களிமண்தான் அவனுக்கு சோப்பு.உடலுக்கும் சரி,துணிகளுக்கும் சரி அவன் தேய்ப்பது அதைத்தான்.அதிலும் நைஸ் களிமண் கிடைத்தால் குளியல் கூட அரை மணி நீடிக்கும்.
       குளித்து முடித்து துவைத்த ஈரச் சட்டையாலேயே உடம்பைத் துவட்டிக் கொள்வான்.டவுசரை போட்டுக் கொண்டு சட்டையை உதறி உளர்த்தியவாறே நேராக வீடு செல்பவன் டவுசர், சட்டை மாட்டிக் கொண்டு தலை நிறைய அப்பிய எண்ணெயுடனும்,படிய வாரிய தலையுடனும் திரும்பவும் மந்தைப் பக்கம் அல்லது ஊருக்குள் வந்து விடுவான்.
    வாய்பேசமுடியாத,காதுகேட்காத, குச்சிக்குச்சியான கைகளிலும் கால்களிலும் படர்ந்து போய் செதில்,செதிலாய் இருக்கும் சொங்கையும்,சொறியையும் சொரிந்து கொண்டே திரியும் அந்தச் சிறுவன் கிட்டத்தட்ட அந்த ஊருக்கே செல்லப் பிள்ளை.
    ஆனால் அந்த செல்லப் பிள்ளையின் இறகுகள் அங்குலம்,அங்குலமாக பிய்த்து எறியப்பட்டு தீவத்து கொளுத்தபடுகிறது.
    சென்ற வருடம் நடந்த அந்த  திருவிழாவில் திடீரென பற்றிக் கொள்கிறது ஊர் .
  ஜாதிகளுக்குள்  சண்டை. கோகொல்லே என ஒரே ஆர்ப்பாட்டம், சத்தம்.எங்கும்,எதிலும் பற்றிக் கொண்ட பதற்றம்.வீட்டிற்குள்ளிருந்து  பத்தடி தூரம் நடந்து போகக் கூட பயம்.ஒண்ணுக்கு இருக்கக் கூட கண்மாய்க் கரைக்கு சென்றுவர பயம்.
     அங்குல,அங்குலமாக சிதறிப் போட்ட நெருஞ்சி முட்களாக ஊரெங்க்கும் அப்பிக் கிடக்கும் கலவர பீதி.
    தெருக்களில்,மந்தையில்,வீதிகளில் கோவில் முன் என அரிவாள்,கம்புடன் மனிதத் தலைகள்.ஆண்கள் கையில் அரிவாள் கம்பென்றால்,பெண்கள் கையில் விளக்கமாறு,அரிவாள்மனை.
     பரஸ்பரம்இரண்டுதரப்பிலும்இப்படித்தானேஇருந்திருக்க வேண்டும்.
எதனால்,எப்படி வந்தது எந்த சண்டை என்பது தெரியவில்லை.யாராலோ எங்கோ பத்த வைக்கப் பட்டது இங்கு வந்து வெடித்திருக்கிறது.
     ஆதிக்கம் செலுத்தும் மனோபான்மை உள்ளவர்கள் சாதாரணர்களின் மண்டையை திறந்து விஷவித்துக்களை ஊன்றி அவர்களை விஷஜந்துக்களாய் வளரவிட்டு ஊருக்குள் உலாவவிட்டு திட்டமிட்டு திராவகம் ஊற்றி எறிய விடப்படும் விஷஜுவாலைதானே ஜாதிச் சண்டை.
    இதைநீங்களும் அறிவீர்கள்.நானும் அறிவேன்.நாம் எல்லோருமே அறிவோம்.
      அந்த கலவரத்தில் ஒருவர் இறந்து போகிறார்.தோட்டங்காடுகளில் வெள்ளாமை பார்க்க ஆட்கள் இல்லை.விளைச்சல் எல்லாம் கொள்ளை போனது.
சரியாக நான்கு மாதம் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது.
    கோர்ட்,கேஸ்,ஆஸ்பத்திரி செலவு என குழைத்துப் போடப்பட்ட சகஜ வாழ்க்கை.
    ஊர் முழுவதும் பதட்டமும் ,பயமுமாய் மனிதமுகங்கள்.நெஞ்ச்சில் நெருடிய நெருஞ்சிமுட்களுடனானநினைவுகளைசுமந்துகொண்டுபூச்சாண்டி
குடிகொண்ட மனதுடன் அந்த ஊர் மக்கள்.முட்கள் மண்டிய புதராய் ஆகிப் போன அந்த ஊரின் சூழல்.,,,,,,,,,,,,,,.
     இப்பொழுதெல்லாம் அந்த சிறுவனை கண்மாய்க் கரைப் பக்கம் காணமுடியவில்லை.
அவனது கண்மாய்க்கரை குளியல் கிடையாது.சீசன் விளையாட்டுகள் கிடையாது.அவன் சக மனிதர்களுடன் கொண்டிருந்த அந்நியோன்யம் கிடையாது.டீக் கடை வம்பு கிடையாது.சேட்டைகள்கிடையாது.
  இப்படியான கிடையாது,கிடையாதுகளையும், தொலைந்து போனதுகளையும்  இன்னும் எத்தனை காலம்தான் காணப் போகிறோம் நாம் எனத் தெரியவில்லை

13 comments:

 1. மூர்த்தி உன் நடை அசத்துகிறது.பொருள் இன்னும் கூடத் தீட்டியிருக்கலாம்.

  ReplyDelete
 2. நன்றி காம்ஸ்.நன்றி

  ReplyDelete
 3. சமுகத்தை பற்றிய உங்கள் வெறுப்பும்,அக்கறையும் கலந்த பார்வை சூப்பர்......

  ReplyDelete
 4. நன்றி காஜ மைதீன் சார்,உங்க்ளது கருத்துரைக்கு.

  ReplyDelete
 5. களிமண்ணை சோப்பாக . பயன்படுத்தும் கிராமத்துக்குளியல் அதுவும் துணிகளுக்கு. புதிய தகவல். கதையை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாம். வெறும் செய்தி மாதிரி ஆகிவிட்டது

  ReplyDelete
 6. கதை அருமையாக இருக்கிறது. நெட்டிவிட்டி கதையுடன் ஒன்ற வைக்கிறது. நன்றி நண்பரே...

  ReplyDelete
 7. களி மண்ணைக் கூட அல்ல,
  வெறுமனே உவர் மண்ணை எடுத்து உடம்பு தேய்துக்கொள்கிற யதார்த்தமெல்லாம் உண்டு சிவகுமாரன் சார்.

  ReplyDelete
 8. நன்றி பாலா சார்.உங்களது கருத்துரைக்கும் வருகைக்கும்.

  ReplyDelete
 9. நன்றி ஜீ சார்.நைஸ்,நைஸ்,நைஸ்,உங்கலது கருத்து.

  ReplyDelete
 10. எனக்கும் அனுபவமுண்டு விமலன் சார். கரிததூளால் பல்துலக்கி, உவர் மண்ணால் உடல் தேய்த்து., துணி வெளுக்கும் சௌக்காரத்தால் மெருகேற்றி(?) குளித்த அனுபவமுண்டு கிராமத்தில். களிமண்ணால் துணி துவைத்தல் தான் புதிய செய்தியாய் இருந்தது எனக்கு. புனேயில் இருந்த போது காலில் தசைமுறிவுக்காக Naturopathy என்ற பெயரில் உடல் முழுதும் களிமண் பூசிக் கொண்டு கிடந்ததும் உண்டு. முன்பு இல்லாமையால் செய்தவை எல்லாம் , இப்போது இருப்பதால் நோய்கள் பெருப்பதால் காசு கொடுத்து செய்து கொண்டிருக்கிறோம்

  ReplyDelete
 11. வாஸ்தவம்தான் சிவகுமார் சார், முன்பு இல்லாமையால் செய்ததை இப்பொழுது காசுகொடுத்து செய்கிறோம்.நோய்கள் பெருத்துப் போனதால்.நண்றி உங்களது கருத்துரைக்கு.

  ReplyDelete
 12. \\அங்குல,அங்குலமாக சிதறிப் போட்ட நெருஞ்சி முட்களாக ஊரெங்க்கும் அப்பிக் கிடக்கும் கலவர பீதி.\\

  \\ஆதிக்கம் செலுத்தும் மனோபான்மை உள்ளவர்கள் சாதாரணர்களின் மண்டையை திறந்து விஷவித்துக்களை ஊன்றி அவர்களை விஷஜந்துக்களாய் வளரவிட்டு ஊருக்குள் உலாவவிட்டு திட்டமிட்டு திராவகம் ஊற்றி எறிய விடப்படும் விஷஜுவாலைதானே ஜாதிச் சண்டை. \\

  நடை பிரமாதம்

  ReplyDelete