2 Apr 2011

வேப்பஞ்ச்சிரிப்பு


                                
     


       




       அரவமற்ற தோட்டத்தில் நீண்டு கிடந்த பிலிம் சுருளில் சிரித்த கதாநாயகி யாரை நோக்கிச் சிரித்தாள், எதற்காக்ச் சிரித்தாள் என்பது இன்னும் பிடிபடாமலேயே/
      புகை போல் போர்த்தியிருந்த மந்தகாச இருளை வெகுநாள் கழித்து அன்றுதான் பார்க்கிறேன். “மனம் சொக்கச்செய்கிற அழகை இத்தனை நாட்களாக பார்க்கத்தவறிப் போனோமே,” நினைக்கவே கொஞ்சம் கூச்சமாக இருந்தது.
     தினசரி இரவு படுக்கையில் மறுநாள் காலை சீக்கிரம் எழ வேண்டும் என நினைப்பதுதான்.ஆனால் முடியாமல் போய்விடுகிறது.நினைத்து முடியாமல் போய் விடுகிற எத்தனையோ வைராக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்றாய் ஆகிப் போகிறது.அது குறித்து வருத்தப் பட நிறைய இல்லாவிட்டாலும் கூட சமயங்களில் வருத்தம் கூட மேலிடுவதுண்டு.
      ஆ............சூப்பர்.முகத்தை கழுவிவிட்டு கால் தூக்கத்துடன் கண்களை இடுக்கிச்சொருகியவாறும்,கொட்டாவிவிட்டவாறுமாய் வீட்டின் நடையிலிருந்து பார்க்கிறேன்.
எனக்கும், நான் நின்றிருந்த நடைக்குமாய் இருந்த உறவு ஈரமிக்காதாய் அந்நேரம்.
     தரையின் சில்லிப்பு காலில் ஏறி உடல் முழுவதுமாய் பரவி சிலிர்க்கச் செய்தது. “ஏய் எப்படியிருக்கிறாய்.நலம்தானே?,நலம் நலமறிய ஆவல்”என இருளும் வெளுப்புமாக தெரிந்த அந்த இடத்தின் காட்சிகள் என்னோடு பேசியவாறு.
    ஆழ்ந்து மூச்சிழுத்தவனாய் எதிர்த்தாற்ப் போல் தெரிந்த வெற்றுவெளியில் நின்றிருந்த முள்மரத்தைப் பார்க்கிறேன். மரங்களின் முனைகளிலும்,
கிளைகளுமாய் தெரிந்த இலைகள் பச்சை பசேலென கறுமைபடர்ந்து/
    வழக்கத்தைவிடஇன்று சீக்கிரமாகவே எழுந்து விட்டேன்.வெயில் காலமாதலால்சரியாகதூங்கமுடிவதில்லை.உடல்ரொம்பவே வியர்க்கிறது.
இரவெல்லாம் உடலின் வியர்வை பிசுபிசுப்பு படுத்திருக்கிற பாயில் ஒட்டிக் கொள்கிறது.தூக்கம் வரமாட்டேன்கிறது.அதன் காரணமாகக் கூட இருக்கலாம் எனது அதிகாலை விழிப்பு.
    வீதி,எதிர் சாரி முள்வெளி என நகண்டபார்வை எங்களது தோட்டத்தில் நின்றபோதுதான் கவனித்தேன் நீண்டு தரையில் கிடந்த பிலிம் சுருளை.
    கடந்த இரண்டு நாட்களாக தோட்டம் பெருக்கி சுத்தபடுத்தபடாமல் வேப்பமர இலைகளும் பன்னீர்மர பூக்களுமாய்.
காற்றுக்கு பரந்து கிடந்த இலைகளும்,பூக்களும் சிலது பழுத்தும்,நிறம் மங்கியும்,கண்விழித்துச் சிரித்தவாறும்/
சிரித்த பூக்களது இலைகளின் அடியில் ஒட்டியிருந்த மண்துகள்கள் வெயிலேற,ஏற உதிர்ந்து போகலாம்.
    இப்படிப்பார்க்கையிலும் நன்றாகத்தான் இருந்தது. வீடு கட்டியது போக மீதமிருந்த இடத்தை சும்மா போடக்கூடாது என்பதற்காக அதை தோட்டம்  என அறிவித்துவிட்டிருந்தோம்  நானும்,எனதுகுடும்பத்தாருமாகச் சேர்ந்து.   ரோஜா,முல்லை,தஞ்சாவூருகதம்பம்என்றெல்லாம் இல்லை.மா,பலா,வாழை,
தென்னை என்றும் கிடையாது.
    காக்கை,குருவிகள்வந்தமரவும்,நிழல்வேண்டியுமாய்மூன்று வேப்பமரங்களும்,
இரண்டு பன்னீர் மரங்களுமாக நின்றன.மரங்கள் வளர்ந்ததும்,பறவைகள் வந்து கூடு கட்டியதா அல்லது அவைகள் கூடு கட்டிய ராசியால் மரங்கள் வளர்ந்ததா தெரியவில்லை.அதனால் என்ன,எதனால் ஏதெது,என்கிற விபரமெல்லாம் தயவுசெய்து வேண்டாமே இப்பொழுது.
மரங்கள் அதன் இலைகள்,கிளைகள்,பசுமை,நிழல் இலையுதிர்வு,பறவைகளின் கூடு,தங்கல்இதுமட்டும்போதுமே இப்பொழுது.மற்றதெல்லாம்வேண்டாமே.
தேவையில்லாத இடத்தில் தேவையெல்லாததையெல்லாம் யாரும் பேசாதீர்கள்,உங்களையும்தான் சார் என்கிறது அந்த குண்டுக்குருவி.
   அது எங்கிருந்து வந்தது.யார் சொல்லி அழைத்து வந்தார்கள்.ஏன் இங்குவந்தது எதுவும் தெரியவில்லை.


     சேட்டைக்கார முத்துதான் கேட்டான். சங்கரபாண்டியலிங்கபுரத்திற்கு
வெளிநாட்டுபறவைகளெல்லாம் வருமாமே?
ஆஸ்திரேலிய பறவைகளெல்லாம் கூட வந்து தங்குமாமே சீசனுக்கு,அது எப்படிஅங்குவந்து தங்கியது,எங்கிருந்தோ வரும் பறவைகளுக்கு அந்த இடம் எப்படித்தெரியும் என அது சம்பந்தமாக நீண்டு விரிகிறது அவனது கேள்வி. என்னால் பதில் சரியாக சொல்ல முடியவில்லை.சமாளித்து சிரித்தேன்.
     நிறைந்த அடைமழைமாதத்தின் ஓரிரவில் பெய்த பலத்த மழையில் அந்த ஊரின்  கண்மாய் கரையில் நின்றிருந்த ஆலமரம் சாய்ந்ததையும்,அதன் கிளைகளில் தங்கியிருந்த  வெளி நாட்டு பறவைகள் இறந்து ரோட்டில் கிடந்ததையும் கூறினேன்.
   மூன்றரையடி உயரமும்,ஒருபாகம் நீளமும் இருந்த பறவைகள் கால் விரித்து வாய் திறந்து,இறக்கைகள் கலைந்து ஒழுங்கற்று இறந்து கிடந்ததை பார்க்க ஊரே திரண்டு வந்திருந்தது.ஒரு மூதாட்டி இதைப் பார்த்து அழுதே விட்டாள்.
   ஊருக்குள் வளைந்து நுழைந்த தார்சாலையின் இடதுபுறமாய் உயர்ந்து நின்ற கண்மாய்க்கரைமேட்டின்மீதுதான் அந்த ஆலமரம் நின்றிருந்தது.பரந்து,விரிந்து பழுத்த ஆலமரம் இளம் பச்சையும்,பழுப்புமாய் இலைகளுடனும்,ஒங்கி உயர்ந்து நீட்டிக் கொண்டிருந்த கிளைகளுடனும், முதிர்ந்துநின்ற பட்டைகளுடனுமாய் உருவகம் தந்தது.
     அந்த உருவகம் போலவும், வெளிநாட்டு பறவைகள் போலவும்தானா நமது நிலை?என கேட்டவனை நோக்கி சிரித்து வைத்தார் அவர்.அந்த சிரித்தலும்,எள்ளலும்,எகத்தாளமும்அவனைமிகவும்புண்படுத்திவிட “எண்ணன்ணே என என்னைப்பார்க்கிறான்.
     அப்படியான தர்ம சங்கடங்கள் வரும் நேரம் என்னைத்தான் பார்ப்பான்.நானும் பேசாமல் இருக்கும்படி சைகை காட்டிவிடுவேன்.அப்படியான் சைகைகளுக்குகட்டுபடுகிற மனோநிலை கொண்டவனின் நினைப்புபறவைகள் பற்றியும் இருந்தது.
ஆஸ்திரேலியபறவைகள்,சங்கரபாண்டியலிங்கபுரம்,அகன்றுவிரிந்த கண்மாய்,
அதன் உயர்ந்த கரைகள்,கரைமேல் நின்ற ஒற்றை ஆலமரம் எல்லாமுமாக எப்படி கேள்விப்பட்டான் எனத்தெரியவில்லை. அவனது உள்ளகிடைக்கையில் அது பற்றியதான நினைவுகளுக்கும் இடம் ஒதுக்கி வைத்திருப்பான் போல்த்தெரிகிறது.
    அப்படியானஎந்தகேள்விப்படுதலுக்கும்,சர்சைகளுக்கும் உட்படாத இந்த குண்டுப்பறவைகள் கொஞ்சமாய் எங்கள் வீட்டு வேப்பமரத்தில் அடைவது கண்டு சந்தோஷம் எனக்கு.
    ஏன் அப்படி என தெரியாவிட்டாலும் கூட அப்படித்தான்.குண்டு,குண்டாய் குட்டையாய் உருட்டிச் செய்தது போல் ஒரே மாதிரியான் உடல் வாகிலும்,கலரிலும்,குட்டிக்குட்டியாய் கத்தித்திரிகிற பறவைகளை கண்டால் உள்ளம் பூரித்து விரிந்து விடுகிறது.அந்த மயக்கத்தில் இருக்கின்ற என்னை சரிபோய் வா பார்த்தது போதும் என அவைகளும் சொன்னது இல்லை.நானும் போய்வருகிறேன்எனஅவைகளிடம்உத்தரவுகேட்டதில்லை.இருக்கும்வரை
பார்ப்பேன்.அவைகள் போய் விட்டால் நானும் வந்து விடுவேன்.அவ்வளவுதான். அப்படியானகுருவிகளைபார்த்துஒன்றுசொல்லத் தோனுகிறது.
“குருவிகளே,குருவிகளே நீங்கள் கொத்தித்தின்ன நெளியும் புளுக்களும்,பறந்து திரியும் வண்டுகளும்,சிதறிக்கிடக்கிற தானியங்களும்,சோற்று பருக்கைகளும் தவிர்த்து வேறில்லை.நீங்கள் குதித்து விளையாடவும்,நீந்தி திரியவுமாய் நீர்நிலை எதுவும் கிடையாது.பரந்த பெருவெளி எதுவும் இல்லை இங்கு.ஆனாலும் எது உங்களை இங்கு கூடு கட்ட,அடைகாக்க,பறந்து திரிய அழைக்கிறது”என.
     அவைகள்கூட்டிலிருந்து வெளியேறி,மரமிறங்கி,தரைதொட்டு இரைதேட இரைஎடுக்க ஆரம்பிக்கிற நேரம் எனது பார்வையும் ரசனையுமாய் போய்விழுவதாய் கணக்கெணக்கு.
அந்த கணக்கை சீர்செய்கிறவனாக அல்லது சீர் செய்கிற முனைப்புடனானவனாக அந்த இடத்தை நோக்கி நகர்கிறேன்.பொழுதின் இருள் பிரிந்து வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருந்தது.
    வேப்பமரத்தடி இலைகளின் உதிர்வுகளுக்கு ஊடாக பிலிம் சுருளில் கிடந்த கதாநாயகியை அள்ளி எடுக்கிறேன் .அவளுக்கு என்னின் அந்த செய்கை சம்மதமா, இல்லையா என தெரியாவிட்டாலும் கூட கீழே கிடப்பவளைகண் கொண்டு பார்த்த பின்பு எப்படி விட்டு,விட்டுப்போவது.
நீண்டு கிடந்த பிலிம் சுருளில் சிரித்த கதாநாயகியின் தலையின் மீது பன்னீர்ப்பூ ஒன்று தெரிந்தது.சற்று தள்ளி வேப்பம்பூ கிடக்கிறது.அருகில் அமர்ந்து பார்க்கிறேன்.   
கீழேகிடந்தஇரண்டடிநீளபிலிமில் சிரிக்கிறகதாநாயகியும்,வேப்பம்பூக்களும்
பன்னீர் பூவுமாய் மாறி,மாறித்தெரிந்தது. 

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நமது சூழலிலேயே நமக்கு எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
தொடர்ந்து, நன்கு எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானே?நமது சூழல் மூலமாய் நிறைய சொல்லுவதற்கும் இருக்கிறது.
வீட்டின் சன்னல் வழியாக பரந்த உலகை காணமுடியும்.
பரந்த உலகிலிருந்து பார்க்கையில் ஜன்னல் தெரியாமல் போய்விடும் அல்லது ஜன்னலை பார்க்க மறந்து போவோம்.