6 May 2018

எசக்கு கூட்டி,,,,

ஏறிய படிகளில் இறங்கிய கால்கள் எத்தனை எனத்தெரியவில்லை,

படிகள் கொஞ்சம் பழுப்பு நிறம் தாங்கியும் அழுக்கும் தூசியும் மண் துகள்கள் சுமந்துமாய்,,,/

படிகளில் காணப்பட்ட கோடுகளும் வரிகளும் அதன் ஓரங்களில் மடித்து அடிக்கப்பட்டிருந்த அலுமினிய பீடிங்கும் படிக்கு அழகு காட்டி கொஞ்சம் ஓரம் கட்டவைத்திருந்தன,

காரணம் அதன் அழுக்கும் தூசியும் மண்ணும்தான் போலி ருக்கிறது, அழுக் கையும் தூசியையும் மண்ணையும் துடைத்துகழுவி சுத்தம் செய்ய ஒரு ஆள் தேவைப்படும் போலிருக்கிறதுதான்,

கண்டக்டரைக் கேட்டால் சொல்கிறார், ”அத ஏங் கேக்குறீங்க சார்,(சரி கேட்க வில்லை, தெரியாம கேட்டுட்டேன் என்றாலும் விடமாட்டார் போலிருக்கிற தே,,,,,,,,) பஸ்ஸ ஸ்டாண்டல இருந்து எடுத்துட்டு வரும் போது சுத்தமா தொடைச்சிதான் எடுத்துட்டு வருவோம்,அது வர வர ஆள்க ஏற யெறங்க இப்பிடி ஆகிப்போகுது,ஒரு ஸ்டாப்புல அஞ்சி பேருன்னு வச்சாக்கூட இங்க இருந்து மதுரை போறதுங்குள்ள பத்துஸ்டாப்பு அம்பது பேரு,அம்பது பேருக்கு நூறு கால்க,நூறு கால்க ஒவ்வொரு தடவையும் ஏறி யெறங்கும் போது யெற நூறு மொற ஆகிப் போச்சி,அந்த யெற நூறு மொறையும் சேர்ற சேர்மானம் இருக்கே,அதுதான் இங்க மண்ணும் கல்லும் அழுக்கும் தூசியுமா சேந்து கெடக்கு,,,/இதுல பஸ்ஸீ வர்ற அதிர்வுல உதிர்ந்தது போக மிச்சம் இருக்குற துதான் இது,இதெல்லாம் மொத்தமா இருந்தா எப்பிடி இருக்கும்ன்னு நெனை ச்சிப் பாருங்க,,” என்றார் கண்டக்டர்,

வீட்டிலிருந்து ஆறு மணிக்கெல்லாம் கிளம்புவதாகத்தான் உத்தேசம்,மிகச் சரியாகச்சொல்லப் போனால் ஆறு மணிக்கு வெளியில் கிளம்பி போயிருக்க வேண்டும் என்பதே இவனது பிளானாக இருந்தது,

இங்கிருந்து மதுரைக்கு அம்பது கிலோ மீட்டர்தூரத்திற்குள்ளாக வந்து விடும் ஊரை எட்டிப்பிடிக்க பஸ் அல்லது ரயில் எதில் போகலாம் என யோசித்த வேளையில் ரயிலுக்கு என்றால் அதன் நேரத்திற்கு நாம்,பஸ் என்றால் நம் நேரத்திற்கு அது, காத்திருக்க வேண்டாம்,பஸ் வர வர எறி போய்க்கொண்டே இருக்கலாம்.ஆக வேண்டிய காரியங்களை சீக்கிரம் முடிக்கலாம்,ஆக வேண் டியது சீக்கிரம் ஆகிப் போகும்,ஆக வேண்டியவைகள் சீக்கிரம் ஆனால் லேசாகிப் போகிற மனதில் எளிதாய் ஓடோடி வந்து குடி கொண்டு விடுகிற எண்ணங்கள் நல்லனவாகவும் நல்லவிதமாயும் யோசிக்க வைத்து நல்லது செய்ய வைத்து விடும்,அப்படியாய் அமைகிற அன்றைய தினத்தை முழு மலர்ச்சியாய் வைத்திருக் கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. என நேற்று இரவு நினைத்து தூங்கப் போன போது கொஞ்சம் தாமதமாகிப் போகிறதுதான்.

தாமதம் என் றால் நீங்களும் நானுமாய் நினைக்கிற ஒரு மணி அரை மணி தாமதம் இல்லை, இரண்டரை மணியாகிப்போனது,இரண்டரை மணிக்குப் படுத்து தூங்க எப்படியும் மூன்று அல்லது மூன்றரை மணி ஆகிப் போயி ருக்கலாம்.

இவனுக்கு அப்படித்தான் ஆகிப்போகிறது,படுக்காமல் முழித்துக்கொண்டிருக் கும் போதும் தூக்கம் இமகளைபிடித்து இழுக்கும்.இழுத்த நுனிபற்றித்தொங்கு கிற கயிற்றை எட்டிப்பிடிக்க தரையிலிருந்து கொஞ்சம் உயரம் காட்டி தவ்வி முதல் கயிற்றை எட்டிப்பிடித்து மூன்றாம் கயிறு நான்காம் கயிறு என ஒவ்வொன்றாய் தவ்வித்தவ்விபோய் அறுத்து விட்டு வந்து அமர்ந்த போதும் கூட தூக்கம் இவன் கண்களை அழுத்திப்பிடித்துக் கவ்வும்.

எத்தனை முறை தான் முகத்தை கழுவி விட்டு வந்து அமர்ந்த போதும் கூட தூக்கம் ம்,,,,கூம் போக மறுக்கும் தான்,என்ன செய்ய எனத்தோணாமல் கழுவிய முகத்தை திரும்பத்திரும்பக்கழுவி விட்டுவந்தாலும் கூட அவசர அவசரமாய் ஓடோடி வந்து கட்டியணைத்துக்கொள்கிற தூக்கத்தை தள்ளி வைக்க இயலாமல் போய் படுக்கையில் விழுந்தால் அது இப்படியாய் பண்ணுகிறது, என்ன செய்யவெனத்தெரியவில்லை.

ஆனால் போக வேண்டிய காரியத்திற்கும் ஆற்ற வேண்டிய பணிக்கும் காலமும் நேரமும் ஒதுக்கி ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துத்தானே ஆக வேண்டியதிருக்கிறது.

ஒரு மழை மாதத்தின் முகூர்த்த நாள் ஒன்றில் சென்றிருந்த கல்யாண வீட்டி ல் இப்படித்தான் தூங்கித்தூங்கி வழிய எதிர்தாற்போல் உட்கார்ந்திருந்த லட்சுமி மதினி ”ஏய் இவளே ஓங் புருஷனுக்கு தூக்கம் தூக்கமா வருதாம் கூட்டிக்கொண்டு போயி,,,,,,தூங்க வையி” என கண்ணடித்தாள் இவனது மனைவியைப் பார்த்து,/

அந்த கண்ணடிப்பின் அர்த்தம் இப்பொழுதுதான் என்னவெனப் புரிகிறது,புரிந்த அர்த்தத்தை புடமிட்டு பாதுகாக்க இப்பொழுது என்ன, எப்பொ ழுது வேண்டு மானாலும் முயலலாம் போலிருகிறதுதான் ,வாழ்க லட்சுமி மதினி.

இவனும் சின்னவனுமாக வீட்டை விட்டு கிளம்பும் போது மணி ஏழு சொச்சம் இருக்கலாம்,ஏழு மெயினாகவும் சொச்சங்களில் அடை கொண்ட நிமிடங்கள் உதிரியாகவும்பட்ட காட்சியின் கைபிடித்தவர்களாய் இவனும் மகனுமாய் வருகிறார்கள் இரு சக்கர வாகனத்தில்,/

ஏறிய வாகனம் தன் வழி காட்டி முன் செல்ல வீட்டில் எடுத்து வைக்க வேண் டிய பொருட்களும் பாதுகாப்பாய் அதனதன் இடத்தில் இருக்கிறதா எனவும் பாதுகாப்பாய் அததை வைக்க வேண்டிய இடத்திலும் வைத்து விட் டோமா எனவும் பூட்ட வேண்டியதை பூட்டியும் பாதுகாக்க வேண்டியதை பாதுகாத் துமாய் பத்திரமாய் வைத்து விட்டோமா எனவுமாய் ஓடிய எண்ணத்தின் சுமையுடன் வந்து கொண்டிருந்த பொழுது இவர்களை தாங்கி வந்த இரு சக்கர வாகனத்தை எங்கு நிறுத்துவது எனத் தெரியவில்லை.

பாலத்தில் எறி இறங்கினால் பறந்து செல்கிற பட்டாம் பூச்சியின் மென் இறகு மீது பயணிப்பது போல் பயணித்து பாலம் முடிகிற இடத்தில் பாலத்தின் இறக்கத்தில் நின்று நிதானித்து வழுக்கிச்சென்று இறக்கி விட அதன் இறக்கத் தில் பெட்ரோல் பங்கை ஒட்டிய தெருவில் இருக்கிற இரு சக்கர வாகனக் காப்பகத்தில் நிறுத்தி விட்டு வரலாம்,

இல்லையெனில் சிவகாசி பாலத்தின் அருகில் இருக்கிற சைக்கிள் ஸ்டாண் டில் நிறுத்தி விட்டு வந்திருக்கலாம்,

இவனுக்குள் என்னவோ நேராக கள்ளிக் குடியில் போய் வண்டியைப்போட்டு விட்டு அப்படியே போகலாம் என்பதான நினைப்பு கூடு கட்டியது,

கட்டிய கூட்டில் ஏதும் சேதாரம் ஆகி விடாமலும் செய்வதறியாது போய் விடாமலுமாய் கள்ளிக்குடிக்கே வந்து கொண்டிருந்தார்கள் இவனும் பைய னுமாக,/

எப்பொழுது மதுரை போவதென்றாலும் சரி ,கள்ளிக்குடியில் இரு சக்கர வாக னத்தை நிறுத்திவிட்டுதான் செல்வான்,

எதற்கு இந்த மெனக்கெடல், விருதுநகரிலேயே இருக்கும் இருசக்கர வாகனக் காப்பகத்தில் எதிலாவது ஒன்றில் நிறுத்தி விட்டு அங்கேயே பஸ்ஸேறி வந்து விடலாமே, அங்கேயே என்றால் உட்கார இடமும் சௌகரியமும் தேடிக் கொள்ளலாமே,,,?எனக்கேட்பர்களிடம்சொல்வான்,அப்படியில்லைசார், இப்படி இரு சக்கர வாகனத்த்ல் திறந்த வெளியில் வரும் பொழுது மண்ணை யும் மண் சார்ந்த மனிதர்களையும் இயற்கையையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ள லாமே என்கிற ஆசையிலும் முனைப்பிலுமாய் வருவதுதானே தவிர்த்து வேறொன்றுமாய் எதுவும் கிடையாது,

பொதுவாகவே மண்ணையும்மனிதர்களையுமாய் பார்க்கத்தெரிகிற அளவிற்கு இந்த கரெக்ட்நெஸ் தெரியவில்லை,இல்லை அதை கற்காமல் வளர்ந்து வந்து விட்டானா,,?வளர்ந்து கெட்டு விட்டான் போலும்/

இவனுக்குத் தெரிந்த நண்பர் ஒருவரை வாருங்கள் சார் மதுரைக்குப் போகி றோம் ஒரு கண்கட்சிக்கு ,அப்படியே வேனிலேயே போய் விட்டு வேனிலே யே வந்து விடுவோம் நூறு ரூபாய் மட்டும் கொடுங்கள் என சொன்னதும் நூறு ரூபாயா இதற்கு நான் ஐந்து முறை ட்ரெயினில் போய் விட்டு வந்து விடுவேனே எனச்சொன்னவர்,இல்லை நான் வரவில்லை,ட்ரெயினில் வந்து விடுகிறேன் எனச்சொல்லி ட்ரெயினில்தான் வந்தார்,மதுரையிலிருந்து திரும் பப் போகும் போதும் ட்ரெனில்தான் போனார்,

அது போல் கணக்கு வழக்குமாய் கறாராக இருக்க இனி பழகிக்கொள்ள வேண்டும்தான் போலிருக்கிறது எனவாய் நினைத்துக் கொள்கிறான் இரு சக்கர வாகனத்தில் வரும் பொழுது/

நினைத்த நினைவின் முடிச்சு அவிழும்முன்பாய் வந்து விடுகிற கள்ளிக் குடியில் இரு சக்கர வாகனத்தின் ஸ்டாண்டில் வண்டியை நிறுத்தி விட்டு இவர்கள் வருவதற்கும் ஒரு பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. ஏறி விட்டார்கள்,

ஏறும் போதுதான் பையன் சொல்கிறான் ,இன்னும் என்ன எளவட்டமுன்னு நெனைப்பாப்பா, ஏறி உள்ள போங்க படியிலயே தொங்கீட்டு வராட்டி என்ன என./

வாஸ்தவம்தான் ,ஓடுகிற பஸ்ஸில் அது நிற்பதற்கு முன்பாகவே ஏறுவதும், இறங்குவதுமாய் இருந்த காலங்கள் இளமையை இவனில் அடை வைத்துக் கொண்டிருந்த நேரம்/.”ஏண்ணே இப்பிடி என்றால் அப்பிடித்தான் விடுங்க, இதப் போயி பெரிசா பேசிகிட்டு,பசங்களெல்லாம் என்னையவிட என்னென்னெமோ பண்ணுறாங்க, நீங்க இதப்போயி பெரிசா பேசிக்கிட்டு என்பான்,அந்த வயதில் பேசிய பேச்சின் மிச்சம் தாங்கி நின்ற பொழுதாய் இன்று பஸ்ஸின் படியோ ரம் கம்பியைப் பிடித்துக் கொண்டு ஒட்டி நிற்பதில் வந்து காட்சிப்படுவதாய்,,/

படியேறி உள்ளே போகும் பொழுது ஏறிய ஆட்களை எண்ணவும் இல்லை. இறங்கிய ஆட்களின் மீது கவனம் கொள்ளவும் இல்லை.தவிர்த்து எண்ணு வதற்கும் கவனம் கொள்வதற்கும் இது நேரமும் இல்லை இடமும் இல்லை. இவை எல்லாம் போக எண்ணுகிற மனோ நிலையிலும் இல்லை இவன்,

ஆனாலும்பார்த்துவிடுகிறான் சும்மா இருக்கிறதா கண்ணும்மனமும், சொன்ன படி கேட்டால் தானே,…? இறங்கியவர்களது எண்ணிக்கை நான்காகவும் ஏறிய வர்களது எண்ணிக்கை பத்தாகவும் இருந்தது.அதில் கொலுசணிந்த கால்கள் இரண்டு தன் நிலை பட்டு கொலுசொலியை அந்த இடத்திலும் ஒலிக்க விட்டு காட்டி விட்டுச்சென்றதாக,/

கொலுசணிந்த கால்கள் மிஞ்சியை மறக்காமல் அணிந்திருக்குமா என்பதை கொலுசிட்ட கால்களுக்கு சொந்தக்காரியிடம் போய் எப்படி கேட்பது, அப்ப டியே கேட்டாலும் சொல்வாளா பதில் ஒழுங்காக என்கிற ஐயத்தில் அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை,

கேட்காததும் நல்லதாய் போயிற்று போலும், அவள் வெட்டிய வெட்டிற்கு இந்த பஸ்ஸே காணாத போது இவனது கேள்வி யெல்லாம் பஞ்சாய்ப் போயி ருக்கும்தான்,

பஸ்ஸினுள்ளே இவன் அமர்ந்திருந்த சீட்டில் இவனுக்குப் பக்கதில் ஒரு இள வயது பையன் அமர்ந்திருந்தான்,

இவனது மூத்த மகன் வயதிருக்கலாம்.அவனுக்கு.கையில் செல்லை வைத் துக் கொண்டு நோண்டி கொண்டே வந்தான்,

இப்பொழுதெல்லாம் இப்படித்தான் எங்கும் யாரையும் யாரும் நிமிந்து பார்ப் பதில்லை போலும்,ஒரே செல்,செல்,செல்தான், அதில் அவர்களாக பேச, அவர் களாக சிரிக்க,அவர்களாக நடக்க என இருக்கிறார்கள்,

அதற்கு அர்த்தம் என் பக்கத்தில் வராமல் சென்று விடு தூர என்பதா என்ன வென தெரியவில்லை.அவர்களது பேச்சும் பார்வையும் அப்படித்தான் இருக் கிறது உண்மைக்கும் அவர்களை அப்படித்தான் சித்தரிக்கிறது உண்மையில் அவர்கள் அப்படியாய் இல்லாத போதும் கூட/

இவனுடன் சேர்ந்து பஸ்ஸில் ஏறிய பத்துப் பேரில் இவனும் மகனும் தவிர் த்து ஏறிய மிச்ச எட்டுப் பேரும் அவரவர்கள் பணி நிமித்தமாய் வெளியூர் செல்வதற்காய் ஏறியவர்கள் போலூம்/

அதில் கைலி கட்டிய ஒருவர்,வேஷ்டி கட்டி மூவர், மற்றவரெல்லாம் பேண்ட சர்ட்டிலேயே இருந்தார்கள்.இருக்கட்டும்,

அது ஒன்றும் தப்பிலையென்றாலும் கூட பேண்ட சர்ட் போட்டவர் மதிக்கப் படுவதற்கும் வேஷ்டி சட்டையும் கைலி கட்டியவர் மதிக்கபடுவதற்கும் பஸ்ஸிற்குள் வெகு வித்தியாசம் இருப்பதாய் பளிச்சிட்டுத்தெரிந்தது.

கைலி கட்டியவர் கொத்தனார் வேலைக்குப் போவதாகச் சொன்னார். வேஷ்டி கட்டியவரும் அதையே சொன்னார்.

பேண்ட் போட்டவர் மட்டும் நான் ஆபீஸ் வேலைக்குப்போகிறேன் என்றார், ஆபீஸ் என்றால் எந்த ஆபீஸ்..? எந்த ஊரில் இருக்கிறது அது,,?அங்கு அவரு க்கு பணிக்கப்பட்ட வேலை என்ன,,…?அவ்வளவு போட்டி கொண்ட ஆபீஸில் அவர் எதில் சிறப்புச்செய்து தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார்.,,,?என்பது போலான கேள்விகள் அவரை பார்க்கும் போது நிலை கொண்டும் வேர் விடாமலும் இல்லை இவனில்,

அவரதுவேலைசம்பாத்தியம் உடைகள் குடும்பம் பிள்ளை குட்டிகள்,,,, ,,,,என அவர் தன்னை எந்த தனத்தில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சற்றேற எதுவும் குறையாமல் இருப்பவர்கள் வேஷ்டி கட்டியவர்களும் கைலி கட்டியவர்களும்என்கிறஎண்ணம் ஏனோ இவனில் விதை ஊன்றி தோணாமல் இல்லை.

தோணட்டும் தோணட்டும் தோன்றி விட்டுப்போகட்டும் அதனால் என்ன இப் பொழுது,,,? என எண்ணுவதற்கும் தனியார் பஸ் ஒன்று இவர்களது பஸ்ஸை கடந்து போவதற்கும் சரியாக இருந்தது.

பேசாமல் அதிலேயே போயிருக்கலாம். அதில் போவதற்கும் இதில் போவ தற்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இருந்து விடப் போவதில்லை, பாட்டாய் பாடுகிற பாட்டுக்களும் இசையும்தான் வித்தியாசம்,,,,,,/

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை பொறுத்து ரசனை...

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,,!

கோமதி அரசு said...

நல்லனவாகவும் நல்லவிதமாயும் யோசிக்க வைத்து நல்லது செய்ய வைத்து விடும்,அப்படியாய் அமைகிற அன்றைய தினத்தை முழு மலர்ச்சியாய் வைத்திருக் கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை//

உண்மைதான்.நன்றாக சொன்னீர்கள்.

vimalanperali said...

வணக்கம் மேடம்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

iramuthusamy@gmail.com said...

எசக்கு கூட்டி நல்ல கதை

vimalanperali said...

அன்பும் பிரியமும்,,,