17 Jun 2018

சாமியானாக்களின் ஒற்றை வரைவு,,,,

சாவு வீட்டைத்தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது.

இப்படியாய் செல்கிற தினங்களின்பொழுதுகளில் இதையெல்லாம்எதிர் பார் த்துச் செல்வதில்லைதான், ஆனாலும் எதிர்பாரமல் நடந்து விடுவதை கை நீட்டி தடுத்து விட முடிவதில்லைதான்.

பொதுவாக இப்படியாய் அவசரமாகச்செல்கிற காலை வேளைகளில் இவன் போன் வந்தால் பேசுவதில்லை,பையிலிருந்து போனை எடுத்துப்பார்த்து வைத்து விடுவான்,

போன வாரம் மருத்துவரம்மா போன் பண்ணியிருந்தார்,எடுத்து பேச முடியாத இக்கட்டான சூழல்,ஆபீஸிற்கு தாமதமாகிப் போன வேளை.

அப்பொழுதுதான் திறந்திருந்த ரயில்வே கேட்டை முட்டிக் கொண்டும் தெரு முழுக்கவுமாய் இவனின் முன்னும் பின்னுமாய் வந்தும் சென்றும் கொண்டி ருந்த இரு சக்கர வாகனங்களும் சைக்கிள்களுமாய்/

சாலைகளில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிற சைக்கிள்களைப்பார்க்கிற போது சந்தோஷப்பட்டுப்போகிறது மனது.

வீட்டில் நான்கு பேர் இருந்தால் நான்கு அல்லது மூன்று இரு சக்கர வாகனம் என்பதுசர்வசாதாரணம்ஆகிப்போன நிலையிலும் அதைவாங்குவது எளிதாகிப் போன பின்னும் விற்கிற பொருளை கண் முன்னே வந்து கவர்ச்சி பண்ணி காட்சிப்படுத்துகிற போதும் அதை வாங்க வைக்க என்னென்னவோ வழிகளில் எளிது பண்ணி காண்பித்துமாய் வாங்கவைத்தும் விற்றும் விடுகிற போது இது போலான ஆடம்பரங்கள் வீடுகளை அடை கொண்டதிலும் ஆக்ரமித்த திலும் ஆச்சரியம் இல்லைதான்.

கணவனுக்கு ஒரு வாகனம் ,மனைவிக்கு ஒன்று ,பிள்ளைகள் பெரிதாகி நின் றால் அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு என கடலைமிட்டாய் வாங்கிக் கொடுத்ததுபோல்வாங்கிக்கொடுத்துவிடுகிறபோதுசாலைகளில்வழிகொள்ளா இரு சக்கர வாகனங்களின் ஆக்ரமிப்புகள் காணகிடைக்கிறதுதான்.

அதையும் மீறி இப்படியாய் சைக்கிள்களை பார்க்க முடிவது மிகவும் சந்தோஷமாவும் சற்றே ஆறுதலாகவும்/

சென்ற வாரம்தான் பழைய விலையில் இரு சைக்கிள் வாங்கியிருந்தான். சைக்கிள் பார்க்க நன்றாக இருந்தது,லேடீஸ் சைக்கிள். இவன்ஓட்ட முடியாது தான் ,இருந்தாலும் மனைவிக்கு ஆகட்டும் என வாங்கிப் போட்டான்,

இந்த 45 வயது வரை அவள் அது வேண்டும் இது வேண்டும் என ஆசைப் பட்டுபெரிதாக எதுவும் கேட்டதில்லை,சேலை துணிமணியான போதும் சரி தின்பண்டமான போதும் சரி, வாங்கிவந்து கொடுத்தால் ”எதுக்குப்போயி இப்பிடி காச கரியாகுறீங்க,,” என்பாள்.

அவளின் அந்த ”எதுக்குப்போயில்,,,” இருக்கிற ஈரமும் படர்ந்து பாவியிருக்கிற ஒட்டுதலும் இவனை என்னென்னவோ செய்து விடுவதுண்டுதான்.

”என்ன ஏன்,,,,,,,,,”என்றால் பிரியமாகவும் வாஞ்சை சுமந்த கண்களுடனும் அவள் இவனை பார்க்கிற தருணங்கள் மிக முக்கியம் வாய்ந்ததாய்/

“ஏய்சும்மாக்கெட என்றால் தோளில் சாய்ந்து கொண்டு வாங்கிக் கொள்வாள். பார்றா அம்மாவும் அப்பாவும் கொஞ்சுறத என பெரிய மகள் அருகில் வந்து இருவர் தலையையும் கலைத்து விட்டபடி முட்ட வைப்பாள்.

“ஊம் திரும்புது இளமை,,,,,,”என அவளாக வாய்க்குள் சொல்லிக் கொண்டு அவர்கள் அருகில் இருந்து எழுந்து போகும் போது ஆனந்தத்தில் கொஞ்சம் கண்களில் நீர் கோர்த்து விடும் இருவருக்கும்,அது மாதிரியான நேரத்தில் கண்ணில் தூசு விழுந்தது போலான நடிப்பைக்காட்டியவர்களாய் அப் பக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக்கொள்வார்கள்,

“ஏய் என்ன இது அழுகை வந்தா அழுதுரு நேர்மையா,அது எதுக்கு முதுகத் திருப்பீட்டு கண்ணக் கசக்குற மாதிரி கண்ணத் தொடச்சிக்கிற,,,,”என இவன் சொல்லும் போது நீங்க மட்டும் என்ன அப்பிடித்தான செய்யிறீங்க,,,” என்பாள்,

”இதுல யாருக்கு யாரு குடுத்து வச்சவங்கன்னு தெரியல,என்ன எங்க ரெண்டு பேருக்கும் அப்பா போல மென்மையான மாப்புள அமையணுமுன்னு ஆசைப் படுறோம், கெடைப்பாங்களா,இல்ல சொல்லி வச்சி ஆர்டர்தான் பண்ணுமா ன்னுதெரியல,,,”என்றவாறே எழுந்து போன பெரிய மகள் சின்னவளையும் கூட்டிக்கொண்டு வந்து கிண்டல் செய்வாள்,

”அதெல்லாம் கெடைக்கும்டி, போங்க போயி படுங்க,இப்பயே கல்யாணம் மாப்புளைன்னு,,,”/ என அதட்டி விட்டு அப்படியே இவனது மடியில் படுத்துக் கொள்வாள்.

புதைத்துக்கொண்டமுகத்திலிருந்து வழிகிற கண்ணீர் இவனது மடியை நனை த்து விடுகிற சமயங்களில் “ஏய் கிறுக்கி என்ன இது ஏன் போட்டுக்கிட்டு,,, இப்ப என்னநடந்துருச்சின்னு இப்பிடி கண்ணீர் விட்டுக்கிட்டு இருக்க,,,,,” என்றால் ”இதைவிட என்ன நடக்கணுமின்னு சொல்றீங்க,என்னைய நாலு அடி அடிச்சிருந்தாக்கூட அழுதிருப்பேனா என்னன்னு தெரியல,இது நானா அழுகை லைங்க தானா வருது,ஏன்னு தெரியல,இப்பயெல்லாம் இது மாதிரி சின்னச் சின்ன சந்தோஷ பொழுதுகள்ல கூட படக்குன்னு கண்ணீரு வந்துருதுற்றத தவிர்க்கவோ தடுக்கவோ முடியல,நல்ல வேளை இது வரைக்கும் புள்ளைங்க முன்னாடிகண்ணீர் சிந்துனதில்ல,ஒங்க முன்னாடிதான் இப்பிடி ஆகிப் போ குது. அதுவும் நல்லதுதான்னு தோணுது,ஒங்களுக்கும் அப்பிடித்தான்னு சொல்லுறீங்க, சரி இதுவும் ஒரு குடுப்பினைதான்னு எடுத்துக்கிருவம்,,,” எனக் கூறி பேச்சை முடித்து விடுவாள்,

பொசுக்கென போய்விடும் இவனுக்கானால், இன்னும் சிறிது நேரம் பேசியிரு ந்தால் இன்னும் சிறிது செண்டிமெண்ட் நீண்டிருந்தால் இன்னும் சிறிது நேரம்ஆனந்தம்காட்டியகண்ணீர்த்துளிகள்மடியைநனைத்திருந்தால் இன்னும் சிறிதுநேரம்சந்தோஷம் கொண்டிருக்கலாம்,,” எனநினைத்துக்கொண்டிருக்கிற நேரங்களில் அவள் சாப்பாட்டுத் தட்டுடன் வந்து இவன் அருகில் அமர்ந்து விடுவாள்.

அக்கணத்தில் பூத்து வெடிக்கிற ஒற்றை மலரின் மலர்வும் எங்கோ கேட்கிற தூரத்துப்பறவையின் கானமும் மனம் பிடித்த இசையும் இவன் மனதை ஆக்ரமித்து நனைத்து விடுவதாய் ஆகிப்போகும்.

இது போல் அடுத்த ஜென்மம் ஒன்று இருக்குமானால் இவளே மனைவியாக கிடைக்கவேண்டும் என அவளிடம் சொல்லும் போது சொல்வாள்,அது எதுக்கு அப்பிடி,நீங்க வேணா பொண்ணா பொறங்க,நான் வேணா ஆணா பொறக் குறேன் ,நீங்க எனக்கு பொண்டாட்டியாவும் நான் ஒங்களுக்கு புருஷனாவும் இருந்துட்டுப்போறேன் என்பாள்,

அவள் சொல்லில் நீண்டு கிடக்கிற நிஜமற்ற சொல்லிருவாக்கத்தை அவள் கண்முண் கீழே எடுத்துப் போட்டவனாய் சாப்பிடுவான். அவள் முகத்தை பார்த்தவாறே,,,/

அவளும் இவன் எதிரில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவாள் வெட்கத்தை சுமந்த படி,,,/

ஒற்றைக்கொன்றையில் பூத்து விடுகிற சிற்று மலராய் மணம் வீசி அழகு காட்டும் வாய்ப்பும் மடியில் முகம் புதைத்து பரஸ்பரம் கண்ணீர் சிந்துகிற பாக்கியமும்கிடைக்கப்பெறுகிற வரம் வேண்டும் வாழ்க்கை முழுக்கவுமாய் என்பதே அவர்களது சாப்பாட்டு நேரத்து வேண்டுதலாய் இருக்கிறது,

வந்தபோனுக்காக இரு சக்கர வாகனத்தை ஓரம் கட்டிய போதுதான் அருகில் வந்த சைக்கிள்க்காரர் இவன் மீது தவறாக இடித்து விடுகிறார்,

இடித்தவர் மீது தப்பு இல்லை,இவன்மீதுதான் தவறு என ஒத்துக்கொள்கிறது மனம்,

இருந்தாலும் இடித்த வேகத்தில் கொஞ்சமாய் தடுமாறி கீழே விழப்போவது போல் தள்ளமாடியவரை கை கொடுத்து தூக்கி விடுகிறான்,

போனை எடுத்துப் பேசும்போதுதான் அது டாக்டரம்மாவிடமிருந்து வந்தது தெரிகிறது,

அவரிடமிருந்து போன் வந்தால் எடுத்து விட வேண்டும்,இல்லையென்றால் அவ்வளவுதான்,என்ன இது போன் வந்தா எடுக்க மாட்டீங்களா என்பதில் ஆரம்பித்து பிடித்து விடுவார்கள் ஒரு பிடி.

பிடிக்கிற பிடியின் இறுக்கம் சமயத்தில் உடும்புப்பிடியாய்க்கூட மாறி உடல் மனம் என வருத்தம் கொள்ள செய்து விடுவதுண்டு,

அது தவிர்க்கவே பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான் இடங்களில் பெரும்பாலுமாய் எடுத்து பேசிவிடுவான் உடனடியாக/

அது அல்லாத நேரங்களில் அவர்கள் ஏன் நான் பண்ணிய போனை எடுக்க வில்லை என கோபம் கலந்த கண்ணீரில் வந்து முடிப்பார்கள்.

”இல்லம்மா வேலையின் முக்கியத்துவமும் கிடைக்கப்பெற்ற நேரமும் உங்ககிட்ட பேச என்னை அனுமதிக்கல”என்று சொன்னால் கூட கேட்க மாட் டார்கள்.

அடபோடா இந்த வெட்டிச்சமாதானம்,நொண்டிச்சாக்கெல்லாம் சொல்லாத என் பார்.

இல்லம்மா அது வந்து என சங்கடப்பட்டால் நான் ஒனக்கு சொந்தமா பந்தமா ஒட்டா ஒறவா எதுவும் கெடையாது,பின்ன எதுக்கு நீ வரப்போற ,நான் ஏதோ வீதியில கெடக்குறவதான என கழிவிறக்கம் ஏற்பட அவள் பேசுகிற பேச்சு உண்மையிலுமே இவனை சங்கடப்படுத்திவிடுவதுண்டுதான்,

அவர்களது சொல்லில் பொதிந்திருக்கிற உண்மையை இவன் உணர்கிறானோ இல்லையோ அவர்களது தெருவிற்கு அடுத்ததெருவிலிருக்கிற மூத்த மகன் உணர்வான் என்கிற நம்பிக்கை இவனுக்கு எப்பொழுதும் உண்டு,

இவன் அவனைப்பார்த்து பேசுகிற போதும் சரி சந்தித்து சிரிக்கிற போதும் சரி மற்ற மற்ற நேரங்களில் மனம் விட்டு உரையாடும் போதும் சரி,அவன் இவனது சொல்லை ஏற்று ஆமோதித்தும் அம்மாவை விட்டுக்கொடுக்கா மலும் பேசுகிற ஒட்டுதல் இருக்கும்,

பிறகு என்ன என்றால்,,,”அது வேற ஒண்ணும் பெரிசா எனக்கும் அவுங்களுக் கும் இல்லை,என்னோட கல்யாணத்த அவுங்களால ஏத்துக்குறமுடியல, அந்தப் பொண்ண தொலைச்சி தலை முழுகீட்டு வா,ஒன்னைய ஏத்துக்கிறே ங்குறா ங்க,இவுங்கசொல்லுக்கு கட்டுப்படாம ஏங் விருப்பப்படி லவ் மேரேஜ் பண்ணிக் கிட்டதால நீ எனக்கு வேணாம்ன்றாங்க, வேணாம்ன்னா நான் வேணுமாம். எனக்குவாக்கப்பட்ட ஏங் பொண்டாட்டி மட்டும்வேணாங்குறா ங்க, நான் ஒனக்கு கோர்ட்மூலமாவிடுதலை வாங்கித்தர்றேன்,அவள அத்துக் கிட்டுவா, ஒன்னைய ஏத்துக்கிறேங்குறாங்க,இல்ல நீ இந்த வாசப்படிய மிதிக்க வேணாமுன்னு சொல்றாங்க,அவுங்க சொல்ற படி எப்பிடி செய்ய முடியும், என்னைய நம்பி நானே கதின்னு அவுங்க வீட்ட எதுத்துக்கிட்டு வந்தவள நான் எப்பிடி,,,,,,,?அவ என்ன உயிரற்ற பொருளா ,நெனைச்ச ஒடனே தூக்கி எறியிறதுக்கு,,,? ஆயிரம் இருந்தாலும் ரத்தமும் சதையும் உணர்வும் இருக்குற மனுசி இல்லையா அவ,அவளப்போயி ,,,,,/

“இன்னமும் இவுங்க அந்தக்காலத்துலயே இருந்தா எப்பிடி,,,,?கொஞ்சம் காலத் துக்கு தக்கன யெறங்கி வரணும் என்பது டாக்டரம்மா மகனின் வாதமாய் இருக்கிறது,

சரிப்பா அதுக்காக அவுங்க செய்யிறது சரின்னு நான் சொல்ல வரல,நீ செய்யி றது தப்புன்னும் சொல்ல வரல,அதுக்காக பெத்ததாயி கண்ணு முன்னால ஒத்தையில கெடக்கும் போது ஏங் நீயி இவ்வளவு பிடிவாதம் புடிக்கிறைன்னு தான் தெரியல என்றால்,,,மொதல்ல அவுங்கள ஏங் பொண்டாடிய மனசார ஏத்த்க்கிற சொல்லுங்க ,நான் அந்த வீட்டுள்ள காலடி எடுத்து வைக்கிறேன் என சொல்கிற மகனின் பேச்சை ஒரு சிறு பரிசீலனைக்காக ஏற்றுக்கொள்ள மறுக் கிற அப்பிடியெல்லாம் அந்த தொரை ஒண்ணும் பெரிய மனுசுப்பண்ணி வர வேணாம்.நீ எதுக்கு எனக்காக ஏத்துக்கிட்டு இப்ப அவன் கிட்ட போயி பேசுற, இப்பப் பாரு,ஓங் மூஞ்சிலதான கரியப் பூசி அனுப்பீருக்கான்,

“நீயும் என்ன செய்வ பாவம்.ஏங் மேல ஏற்பட்ட பரிதாபத்தால போயி பேசிரு க்குற,

”ஒனக்கும் குடும்பம் புள்ளகுட்டிகன்னு இருக்குறாங்கப்பா,நீயும் கூட அடிக்கடி எனக்காக வர வேணாம்,என்னைய நான் பாத்துக்கிடுறேன் என டாக்டரம்மா சொல்கிற வேளைகளில் அப்பிடியெல்லாம் இல்லம்மா,ஒங்கள நான் வேற யாரோ மூணாவது ஆளா நெனைக்கலமா,இப்பக்கூட ஏங் வீட்டம்மாதான் ஞாபகப்படுத்துனா,போற வழியில அந்தம்மாவபோயி ஒரு எட்டுப் பாத்துக் கிட்டு வந்துருங்கன்னு,இல்லைன்னா எனக்கு சத்தியமா ஞாபகம் வந்துருக் காது, எனச் சொல்லும் போது கண் கலங்கிப்போகிற டாக்டரம்மா காய்ச்சல் என்றால் கால்பால் தலைவலி என்றால் சாரிடன் என்கிற பேச்சை தன்னக த்தே அடை கொண்டு வைத்திருந்ததால் அவள் டாக்டரம்மா என அறியப் பட்டவர் ஓங் பொண்டாட்டி புள்ளைங்கள இந்த ஞாயித்துக்கெழம லீவுல கூட்டுக் கிட்டு வா,அன்னைக்கி மதியம் கறி எடுத்து ஏங் கையால சமைச்சிப் போடுறேன்.ஓங் பிரண்டோட அம்மாங்குற ஒரே காரணத்துக்காக நீ எனக்கு இவ்வளவு செய்யும் போது நான் ஓங் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு சமைச்சிப்போடக் கூடாதா,,,?என்பார்.

அந்நேரம் பிறக்கிற வலியும் இன்மையும் புதிது புதிதான அர்த்தங்களை கற்றுத் தந்து விட்டுப் போவதாக,,,/

அன்று இவனுக்கும் இவனது மனைவி மக்களுக்கும் சமைத்துப் போட்ட டாக் டரம்மா அதற்கு பின்னான நாட்களில் டவுனுக்கு மகள் வீட்டுக்கு போய் விட்டார்/

சைக்கிளில் இடித்தவர் மன்னிப்பு கேட்டு விட்டு வந்த வழியில் தொடர்கிற வாய்/

ரயில்வே கேட்டை தாண்டி கேட்டின் வடைக்கடை சந்தைக்கடக்க நினைக்கிற வேலையில்தான் சந்தின் முக்கில் சாவு வீடு கண்ணில் படுகிறது.

நேர்த்தியாக இழுத்துக்கட்டப்பட்டிருக்கிற சாமியானா பந்தல்,அதன் கீழ் போடப் பட்டிருக்கிற பிளாஸ்டிக் சேரில் அங்குமிங்குமாய் அமர்ந்தும் அமரா ம லுமாய் கூடியிருந்த மனிதர்கள்,வழக்கம் போல் ஒதுங்கிப்போய் ரகசியம் பேசு கிறவர்கள்,அங்குமிங்குமாய் ஏதோ ஒரு வேலையாய் ஓடிக் கொண்டிருப்ப வர் கள். ஒன்று போல் அமுக்கி வாசிக்கப் பட்டுக்கொண்டிருந்த பறை ஓசை,,,, எல்லாம் ஒரு சாவு வீட்டிற்கான முன்னறிவிப்பை தந்து கொண்டிருந்தது.

முக்கில் திரும்பியவன் இரு சக்கர வாகனத்தை நிதானித்து நிறுத்தி திரும்பிப் பார்க்கிறான் சாவு வீட்டை,அங்கு தூரமாய் நின்றிருந்தது டாக்டரம்மாவின் மகன் போல தெரிந்தான்.

2 comments:

வலிப்போக்கன் said...

எங்க ரெண்டு பேருக்கும் அப்பா போல மென்மையான மாப்புள அ்மையணுமுன்னு ஆசைப் படுறோம், கெடைப்பாங்களா,இல்ல சொல்லி வச்சி ஆர்டர்தான் பண்ணுமா ன்னுதெரியல,,,”....- ---அருமை

vimalanperali said...

அன்பும் நன்றியும்,,,,!