28 Jun 2018

திருஉரு,,,,

அலுவலகத்திலிருந்து கிளம்புகையில் மாலை மணி ஐந்து முப்பது ஆகியிரு ந்தது.

அழுத்துகிற வேலை பழுவை அழுத்தமற்ற மனோநிலையில் செய்து முடித்து விட்டு மீண்டெழுந்து வீட்டிற்குக் கிளம்புகிறான்.

கோர்த்திருந்தபூக்களை சேர்த்து கட்டியிருந்த நூலின் இறுக்கத்திலிருந்து விடு படுவதும் இறுகமற்று இருப்பதும் நல்லதனம் காட்டிய விஷயமாகவே/

அலுவலகத்தில் ஒட்டு மொத்த இருப்பும் இன்மையும் இவனில் பொதிந்திரு க்க இவன் அலுவகத்தை விட்டுக் கிளம்பும் போது டீக்கடைப்பையன் டீ ஆர்டர் கேட்டு வருகிறான்.

பூஞ்சையான உடல்,சின்னப்பையன்.நன்றாக இருந்தால் அவனின் வயது பதிமூன்று இருக்கலாம்.படிக்க வேண்டிய வயதில் பிழைப்பின் அவசியம் கருதியும்,அழுந்தி வாழ வாய்க்கபெற்ற வாழ்க்கையின் அவசியம் கருதியும் டீக்கடைக்கு வேலையை தத்தெடுத்துக்கொண்ட அவன் அலுவகத்தில் இருக் கிற அத்தனை இருக்கையில் இருந்த இருபதிற்கும் மேற்பட்ட எல்லோரிட மும் டீக்கும் காபிக்குமாய் ஆர்டர் எடுத்து விட்டு இவனிடம் வந்த போது இவன் சொல்கிறான் ”வேணாம் டீ எனக்கு ,இதோ இன்னும் ஒரு சில நிமிடங்களில் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவேன்,ஆகவே” ,,,,,,,,, என புள்ளி வைக்காமல் வார்த்தையை முடித்து விட்டுக்கிளம்புகிறான் அவ் விடம் விட்டு மைதானத்தை விட்டு வெளியேறிய பந்தாக,,,,/

டேபிளையும் சேர்களையும் கணிணியையும் இன்னும் சில எழுது பொருட்க ளையும் கடந்து செல்லும் போது திறந்துநின்ற அலுவலகத்தின் இரட்டைக் கதவில் இடது பக்கக்கதவின் கை பிடி ஓரம் தெரிந்த அழுக்கு நவீன ஓவியம் போலவும் அதன் பின்னால் வாசலை ஒட்டி இருந்த மண்ணெண்னை கேனும் அதை ஒட்டித்தெரிந்த பிளாஸ்டிக் புனலும் ஓவியத்திற்கு அழகு சேர்த்ததாயும் தனித்டு நின்ற இன்னொரு ஓவியம் போலவும் ஆகித் தெரிந்தது.

கதவின் கை பிடியை பிடித்தவனாய் வெளியேறுகிறான் அலுவலகம் விட்டு,,/

ஊருக்குச் செல்ல வேண்டும்,இவன் நிற்கிற இடத்திலிருந்து சரியாக ஐந்து கிலோ மீட்டர் இருக்கும் ஊருக்கு .இவன் அடிக்கடி சென்றதில்லையானாலும் கூட அவசியம் நேர்கிற போதும் சந்தர்ப்பங்களிலும் அவசிய அவசரங்களின் அழுத்தத்திலும் சென்று வந்திருக்கிறான்,

அலுவலத்தின் உள்ளிருந்து இரு சக்கர வாகனத்தை வெளில் எடுத்து கிளம் புகிறான் கூட்டிலிருந்து வெளிக் கிளம்பும் பறவையைப்போல/

இறக்கையின் வீச்சும் சுழற்சியும் காற்றின் வேகம் அறுத்து செல்வது போல செல்கிறான் வீறு கொண்டு/

இவன் செல்கிற வேகத்தில் சென்றால் அடுத்த கால் மணிக்கும் குறைவான நேரத்தில் ஊரில் இருக்கலாம்.

ஒரு ஊரில் ஒருவன் குடியிருப்பதற்கும் ஒரு ஊர் ஒருவனை வளர்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாய் சொல்வார்கள்,இவன் விஷயத்தில் ஊரே ஒன்று கூடி இவனை வளர்த்தது.

ஆமாம் சாப்பாடு மற்றும் துணி மணிகள் மற்றும் இதர இதரவைகளை சொந்த வீடு தந்த போதும் கூட பொதுவான அறிவையும் மனித முகங்களின் உள் விலா சங்களையும் மனித மனதின் உள் ஆழத்தையும் கற்றுக் கொடுத் ததும் அறிமுகம் செய்து வைத்ததும் ஊர்தான்,

அந்தவகையில் இவனுக்கு ஊர் மேல் எப்பொழுதும் ஒரு தனி மதிப்பும் பிரிய மும் இருந்தது,

சிறிது வேகம் கூட்டியே சென்று கொண்டிருந்தான், ஊருக்குச் செல்கிற வழியில் இரண்டு பக்கமுமாய் அடை கொண்டிருந்த காடுகளில் காட்சிப்பட்ட வெள்ளாமையை அழித்து அதன் மீது கட்டிடங்கள் கனரக மற்றும் மித ரக இயந்திரங்களை ஒரு சேர அடை கொண்ட மில்களும் சிறியதும் பெரியது மான வீடுகளுமாய் இருந்தன,

காட்சிப்பட்டவீடுகளின் வெளிப்புற சுவர்களில் பூசப்பட்டிருந்த வர்ணங்கள் இவன் மனதைப்போல் கலர்க்கலராகவும் புதிது பட்டும்/

ஊருக்குச் செல்கிறது வரை இது போல் பராக்குப்பார்த்துக் கொண்டேதான் சென்றான்.

இந்த வயதிலும் யார் ,என்ன, எங்கே, என்னது, ஏன், எப்படி,,,,,என பாராக்குப் பார்க்க வாய்க்கப்பெற்ற பாக்கியமும் உயர்தனமும் கிடைத்திருப்பது ஒரு வரம் போலவே,,,,,,என நினைத்து மகிழ்ச்சி கொள்வதுண்டு சமயத்தில்/

இவன் ஊருக்குச்சென்ற நேரத்தில் அனைவரும் தண்ணீர் பிடித்துக் கொண்டி ருந்தார்கள் தெருக்குழாய்களில்.

ஊர் பொதுக்கிணற்றில் வாளிபோட்டு இறைத்த நீரை இப்பொழுது தெருக் குழாய்கள் தந்து கொண்டிருந்தன.கிராமத்தின் திண்ணைகள் ஓரம் சாத்தி வைக்கப்பட்டிருந்த கலப்பைகள் இருந்த இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன,

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தோடு இரு சக்கர வாகன மாய் இவனது வாகனத்தையும் நிறுத்தி விட்டுஅம்மாவீட்டிற்கு செல்கிறான், பூட்டிக் கிடக்கிறது வீடு.சாவியை பையிலிருந்து தேடி எடுத்து திறக்கிறான் கதவை. திறந்த கதவு படியேறி இவனை உள்ளே வரச்சொல்லி அழைத்ததும் மெய் சிலிர்க்கச் செல்கிறான் வீட்டிற்குள்/

அங்கு அம்மா இல்லை, மாறாக புத்தம் புதிதாய் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த வீட்டின் எதிர்ப்புறச் சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோவில்,மாலைக்குப் பின்னால் வாய் கொள்ளாத வெள்ளந்தியான சிரிப்புடன் ரூபமாயும், அரூப மாயும் மாறி மாறி காட்சிப்பட்டார்,

“இனி அவர்கள் இருந்த இடத்தில் அவர்கள் இல்லை,அவர்கள் அமர்ந்திருந்த இடம் வெற்றிடமாகவே,அவர்கள் நின்ற இடமும் நடந்த இடமும் இனி வெற்றிடமாகவே/,அன்பும் பிரியமும் வாஞ்சையுமாய் அவர்கள் இட்ட சோறும் குழம்பும்,வெஞ்சனமும் இனி காணக்கிடைக்கப்போவதில்லை. இடுப் பில் கைவைத்துஅரட்டி சண்டை போட்டுவாதிட்ட நாட்கள்இனி வரப் போவ தில்லை, வாழ்நாள் முழுக்கவுமாய் பிள்ளைகளை வளர்க்கவும் ஆளாக்கவும் அவர்களை நல்லதான ஒரு இடத்தில் அமர வைக்கவுமாய் பாடு பட்டு ஓடாய் தேய்ந்த அந்த திரு உரு இனி காணக்கிடைக்கப்போவதில்லை. மறையப் போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை தனி ஆளாய் உறை கொண்டு தன்னையும் தன் குஞ்சுகளையும் இறக்கைக்குள் வைத்து பாது காக்கிற தாய்க் கோழியாய் தன்னை உருவகித்துக்கொண்ட ஈர உள்ளம் இனி காணக் கிடைக் காதுதான் என்கிற நினைப்புடன் அவர்கள் வாழ்ந்து மறைந்த அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு படியிறங்குகையில் தடுக்கி விட்ட ஒற்றைக்கால் அவர்களின் அந்திமத்தில் இறுக்கிப்பிழியப்பட்ட கறும்புச் சக்கையாய் படுத்தி ருந்த கட்டிலை நோக்கி முன்னேறி தொட்டுக்கும்பிட்டு வருமாறு பணிக்கிறது,

அவ்வாறே செய்து விட்டு வீட்டை விட்டு வெளிவரும் முன் அம்மாவின் திரு உருவப் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து விட்டு படியிறங்குகிறான் கதவை பூட்டி விட்டு/

பூட்டி கொள்ள மறுத்த கதவின் உள்ளிருந்து பக்கவாட்டாக எட்டிப்பார்த்த அம்மாவின் திரு உரு இவன் கன்னத்தை அழுந்தப்பற்றி முத்தமிடுகிறது வாஞ்சை மிக,,,/

கண்ணீர் மல்க முத்தத்தை ஏற்றுகொண்ட இவன் பின்னால் திரும்பிப் பார்த் தவாறே வருகிறான்,போய் வாருங்கள்,தாயே போய் வாருங்கள் என்கிற சொல் தாங்கியும் மறைந்து நான்கு நாட்கள் ஆகிப்போன தாயின் திரு உருவை மனதில் ஏந்தியவனாயும்,,,,/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நெகிழ்ச்சி...

vimalanperali said...

நன்றியும் அன்பும்!

iramuthusamy@gmail.com said...

அருமை

vimalanperali said...

அன்பான நன்றிகள்,,,/