7 Oct 2018

நகர்வுகளின் திசை காட்டி,,,,

இதோ கிளம்பி வந்து விடுகிறேன் உடனே,கையிலிருக்கிற வேலையை முடித்து விட்டு,வேலையை முடித்து விட்டு எனும் போது ”உடனே” என்பது கொஞ்சமாய் தாமதபட்டுப்போகலாம்தான்,

எதிர்பார்த்து நிற்கிற காதலைனை காக்க வைத்து தாமதம் காட்டி வருகிற காதலியைப்போலவும் மனைவியை காத்திருக்கச் சொல்லிவிட்டு தாமதமாக வருகிற கணவனைப்போலவுமாய்,,/

முன்னாள் காதலன்தானே இந்நாளின் கணவன்,இந்நாளின் மனைவிதானே இந்நாளின் காதலி என்கிற அடர்த்திகொண்ட சொல் அரை கொண்ட நாட்களி ல் இது போலானவைகள் சகஜம்தானே வாழ்க்கையில்/

கொஞ்சம் வேலையாய் இருக்கிறேன் எனச்சொல்கிற சொல்லை வேறார்த் தமாய் அர்த்தப்படுத்திப் பார்க்கிற போனின் எதிர்முனை எப்படி எடுத்துக் கொள்ளும் இவனது பேச்சை என்பது இது நாள்வரை பிடிபடாவிட்டாலும் கூட இப்படியான பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டும் முடிட்டுக்கொண்டும் இருக் கிறதுதான்.

தொடர்கிற பேச்சின் ஆழமும் அடர்த்தியும் கன பரிமாணமும் ஆளாளுக்கு வித்தியாசப்பட்டபோதும் சரி பொய்யாய்,உண்மையாய் தொடர்ந்த போதும் சர் அது அப்படித்தான் இருக்கிறது என்கிறார்கள்.

இதில் உண்மை என்பது உள்ளளவு,பொய் என்பது அனுமதிக்கப் பட்ட அளவு. என்கிறார்கள் வாழ்ந்தறிந்தபெரியவர்கள்,

அவர்கள் சொல்வதும் சரிதான், அனுமதிக்கப்படுகிற எல்லாம் சிறிது நன்றா கவே இருக்கிறதுதான்.சமயத்தில் இனிமை காட்டியும்/

சொக்க வைக்கிற பொய்களும் சொக்கிச்செல்கிற உண்மைகளும் வலிமை பொதிக்கிற நேரங்களில் வாழ்வின் அர்த்தமும் அடர்த்தியும் கொஞ்சம் லேசு பட்டு பிடிபடுவதாக/

படட்டும் அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்.நான் உன்னிடமும் நீ என்னிட முமாய் எப்பொழுதும் பேசுகிற பேச்சுக்களிலும்,படுகிற கோபங்களிலும் கொஞ் சமாய்பொய்பூசிக்கிடக்கிறதுதானே,இல்லையானால்நான்பேசுகிற ஒவ்வொரு பேச்சிற்கும் சொல்கிற ஒவ்வொரு சொல்லிற்குமாய் நீகாட்டுகிற உடனடி எதிர்வினை வெறுங்கையை ஓங்கிக்கொண்டோ இல்லை கையில் வைத்திரு க்கிற தோசைக் கரண்டி அல்லது பருப்புகடைகிற மத்து என ஏதாவது ஒன்றை தூக்கிக்கொண்டு அடிக்க வருவது போல் பொய்யாய் கை ஓங்கி வருவது தானே?

ஓங்குகிற கையை எதிர் கொண்டு தடுக்கிற வேகத்துடன் கை நீட்டி முன் சென்று தோசைகரண்டியையும் மத்தையும் பிடுங்கி வைத்துகொள்வதும் இல்லையானால் பதிலுக்கு ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு ”டிஸ்யூம் டிஸ்யூம்” இடுவதுமாய் கரைந்து போகிற நிமிடங்களில் சற்றே இனிமை கூடி மனது ஊ லால,,,லாலா,,,, பாடிவிடக்கூடும்தான்.

அதுபோலான பாடல்களின் ரீங்கரங்களை சுமந்து திரிய கொஞ்சம் வாழ்வின் எல்லையற்ற கனங்களில் கரைந்து போய் விடலாம்தான்,அப்படியாய் கரை ந்து காணாமல் போய் விடுகிற நேரங்களில் தாமதப்பட்டுப் போகலாம் தான் சிறி தே/

மற்றபடி வேலை,வேலை,வேலை,,,,, என அலுத்துக்கொள்கிற நேரங்களிலும் அது சம்பந்தமாய் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் கூட சோறு போடுவது அதுதானே இல்லையா என்கிறார் நண்பர் ஒருவர்,

கை நிறைந்த சம்பாத்தியம் ,சொந்த வீடு,இருசக்கர வாகனம்,கார் மற்றும் இதர இதரவையான வசதிகள்,,,கூடவே முளைத்துக்கிளைத்து படர்ந்து பாவித் தெரிகிற சமூக அந்தஸ்த்து என சமூகத்தின் அடுக்குகளில் படர்ந்து தெரிகிற எல்லாமும் இதனால்தானே என்கிறார் கூடவே/

சரி என சொல்லி விட்டு முடிக்கலாம் பார்த்துக்கொண்டிருக்கிற வேலையை என நினைக்கிற நேரம் முடிவது போல் இருந்த வேலை நீண்டு போகிறது யார் சொல்லியும் கேட்காத வாலாய்/

சரி முடித்து விட்டே கிளம்புவோம் என நினைத்தவனாய் வேலையின் முனைப்பில் இருக்கும் போது திரும்பவும் ஒரு முறையாய் வந்து விடுகிற தங்களது போனுக்கு செவி சாய்த்துக் கொண்டே வேலையின் முனைப்பிலும் அதன் விடுபடாத தன்மையிலுமாய்/

காலின் முனையின் ஆரம்பித்து இறுகிய கட்டிய கட்டு மெல்ல மெல்ல சிற்றிச்சுற்றி தலை வரை வந்து பார்வையை மட்டுமாய் விலக்கி விட்டு இறுக்கி நிற்கிறது ,

தலை வரை வந்து நின்ற சுற்றலின் இறுக்கலை சற்றே இறக்கியும் தளர்த் தியுமாய் கழுத்துவரை கொண்டு வந்து விட்டு விட்டு விழி கழண்டு ஓடும் பார்வையை எடுத்து திரும்பவுமாய் அதன் இடத்தில் அமர வைத்து விட்டு வேலையைப்பார்ப்பவனாகிறான்,

ஒட்டவைத்த பார்வை இவனை நோக்கி முகம் கோணி கோபித்துக் கொண்டு என்ன இது, இப்படியெல்லாம் அநியாயம் செய்தால் எப்படி,,,?விழி கழண்ட நேரத்திலிருந்து இந்நேரத்திற்கு தரையிறங்கி படர்ந்து பாவி எங்கெங்கெ ல்லாமோ சென்று விட்டும் நல்லது பொல்லதுமாயும் கண்ணுக்குக்குளிர்ச்சி யாயும் ஏதாவது பார்த்து விட்டும் வந்திருப்பேனே,,அதை கெடுத்தும் தடுத்தும் விட்டீர்களே இப்படி அநியாயமாய்,,,,என முறையிட்ட விழியை நோக்கி தலை சாய்த்து மன்னிப்புக்கேட்டவன் ”விட்டிருக்கலாம் உன்னை அப்படியே,ஆனால் நீ திரும்பவுமாய் என்னில் வந்து சேர்கிறது வரை நான் எப்படி உன்னை பிரிந்து இருப்பது என நீ யோசிக்க வேணாமா,,,,?கண்ணே கனியமுதே, பார் வையே விடி வெள்ளியே,விடி விளக்கே,சுடர் கொடியே என எத்தனை எத்த னையான உதாரணங்களில் உன்னை பாராட்டிய போதும் கூட நீ செல்கிற வேலையை முடிக்காமல் வர மாட்டாய்,இதற்காய் நீ பஸ்ஸேறியோ ,காரிலே யோ ,இரு சக்கர வாகனத்திலேயோ செல்ல வேண்டாம் அருகாமையாய் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாகத்தான் நீ சென்று வரப்போகிறாய்,அதற்குள் என் பாடு,,,,,,? என இவன் கொஞ்சம் அழுத்தம் கூட்டிச்சொன்ன போது ஆச்சரி யத்தாலும் வியப்பு கொண்டுமாய் விரிந்த விழிகள் வாஸ்தவம் இல்லாமல் இல்லை நீங்கள் சொல்வதிலும்,அதை நான் யோசிக்காமல் விட்டு விட்டேன் மன்னிக்கவும் என பணித்து நிற்கிறது.

பரஸ்பரம் விழிகளுக்கும் இவனுக்குமிடையே நடுமாவாள் யாரும் இல்லா மல் நடைபெற்ற பேச்சில் எதுவும் தங்கு தடையற்றுத்தெரிய இவன் மறு படி யும் போனில் உரையாடுபவனாகிறான்,

போனில் எதிர் முனையில் பேசியது செவந்தி அக்காதான்,அவளது பெயர் என்னவெனத்தெரியாது இவனுக்கு,

இவனுக்கு மட்டும் என இல்லை,அனேகமாய் யாருக்கும் தெரிவதில்லை அவள் வயது ஆட்களைத் தவிர்த்து/

ஆனால் அவர்களை தேடிப்போய் பெயர் கேட்பதற்கு யாரும் மெனக் கெடு வதில்லை.அப்படியே மெனக்கெட்டுப்போய் கேட்டாலும் கூட அவர்கள் சொல் வதில்லை.ஆமா இது ஒரு வேலையின்னு வந்துட்டான்,போடா போயி வேற யாருகிட்டயாவது போயி கேட்டுத்தெரிஞ்சிக்கங்க,,,,என்பாள்.

லேசாய் முகம் கோணி சிரிக்கிற அவள் இது போலாய் பெயர் கேட்டுப் போகிறவர்களிடம் தலை நிறைந்த பூக்கள் சூடிக்கொள்வதில் அவள் பிரியமா னவள் என்பதை காட்டிக்கொள்வாள்.

தலையில் சூடியிருக்கிற பூவால் அவளுக்கு அழகா,இல்லை அவளால் அந்தப் பூக்களுக்கு அழகா என்பது அவளை பார்க்கிற முன் கணம் வரையிலும் தீர்மானமாகாது,

ஆனால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.மெலிதான சங்கீதங்களில் சிரிக்கிற மென் மனதின் வருடலைப்போல் காணப்படுவாள்.

அப்படியாய் காணப்படுகிற அவள் பெயர் சரியாய் தெரியாவிட்டால்தான் என்ன இப்போதைக்கு அக்கா என்றே இருக்கட்டும் ,அதுவே நன்றாகத்தானே இருக்கிறது,

அக்கா,அக்கா,அக்கா ,,,,,,என இவன் அழைக்கிற தருணங்களில் நெக்குருகிப் போவாள் .

“அடப்போடா பைத்தியகாரா,நீயும் அக்கா அக்கான்னுதான் கூப்புடுற, நானும் தம்பி தம்பின்னுதான் பாசத்தை வைக்கிறேன்,ஆனா ஒண்ணும் பெரிசா பிரயோஜனத்தக்காணம்” எனச் சிரிப்பாள்,

செவ்வந்திஅக்காவுக்கு பெண் ஒன்றும் ஆண் ஒன்றுமாய் இரண்டு பிள்ளை கள், பெண்ணுக்கு வயது பத்து கூட எட்டியிருக்காது,மூன்றாம் வகுப்போ நான்காம் வகுப்போ படிக்கிறாள், பையன் பெண் பிள்ளைக்கு இரண்டு வயது மூப்பு.

“ஏண்டா டேய் கிறுக்குப் பையலே,ஏங் புள்ளைய கட்டிக்கிர்றேன் கட்டிக்கிர் றன்னு சொல்லீட்டு கடைசியில அந்த ஆஸ்பத்திரிக்காரரு பொண்ணக் கட்டிக் கிட்டயாமில்ல.,,”என்றபோது கண்ணீர் வந்து விட்டது இவனுக்கு/

“ஏய் ஏண்டா இதுக்குப்போயி கண் கலங்கி நிக்குறவன் எதுக்கு,,,?என்றாள்,

காரணமிருக்கிறது ,கேள்விகேட்கிற தெரியாது கண்ணீருக்கான விடை/

செவ்வந்தி அக்காவிடம்,சொல்கிறான்.”இல்லக்கா,இந்தப்பொண்ணு பொறந்த ஒடனேதான் ஓங் கஷ்டமெல்லாம் தீந்து போச்சின்னு சொன்ன,ஆனா இப்ப இப்பிடி வந்து கேக்குறையே” என்றதும்,,,,

“வாஸ்தவம்தாண்டா சின்னப்பையலே ஓங் மாமன் இவபொறக்குறதுக்கு முன்னாடி தெனம் தண்ணியப்போட்டுட்டு வந்து வீட்ட ரெண்டாக்கிட்டு இருந்துச்சி,”

குத்தம் சொல்ற தடித்தனமான பேச்சுக்கும்,குடுக்குற தர்ம அடிக்கும் பஞ்சமி ல்ல,தொனம் தெனம் பொழுது விடிஞ்சி பொழுதடைஞ்சா இந்தக் கூத்துதான். சரி பாடு படுற மனுசன் ஏதோ ஒடம்பு வலிக்கு ஆத்தமாட்டாமா குடிச்சிட்டு வர்றாரு சத்தம் போடுறாருன்னு பாத்தா அப்பறம்தான் தெரிஞ்சிச்சி,அந்த மனுசன் ஒடம்பு வலிக்காக குடிக்கல,மனசுல கூடுகட்டி குப்பயாகிப்போன சந்தேகத்தால் குடிச்சிருக்காருன்னு/,,”

“ஆகா இது வம்புல்லன்னு என்னய்யா யாரு மேல சந்தேகமுன்னு கேட்டா என்னைய்யும் ஏங் நடப்பயும் தூக்கி முன்னாடி வைக்கிறாரு,அட கஷ்ட கால மேன்னு நொந்து போயி இருக்குற நேரம்தான் அவரோட சந்தேகமும் தண்ணி போட்டுட்டு வந்து அவரு பண்ணுற அலம்பலும் கூடிக்கிட்டே போச்சி ஒரு அளவுக்குள்ள நிக்காம,

“அட கர்மம் புடிச்ச மனுசான்னு நொந்து போறத தவுர வேற வழியில்ல எனக்கு,என்னசெய்யிறது,பதிலுக்குநானும்தண்ணியப்போட்டுட்டுவந்துசலம்பவா முடியும்?

“ஒன்னையப்போல அறிஞ்சவுங்க தெரிஞ்சவுககிட்டபோயி சொல்லி மனச ஆத்திக்கலாமுன்னு பாத்தா அதுக்கும் வழியில்ல. அதையும் சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாரு,

“சொந்தங்களா இருக்குற சித்தப்பாமார்க,பெரிபப்பா மார்க அண்ணன் தம்பி மொற கொண்டவுங்களோட பேசீட்டா சும்மா இருந்துர்றாரு,வேற யாராவது கிட்ட பேசுனா சண்டைக்கு வந்து என்னய இழுத்து வீதியில போட்டுறாரு. இதுக்குப்பயந்தே நானும் யாருகிட்டயும் பேசுறது இல்ல,

”ஆனா அது பாரு ஒரு எல்லையே இல்லாம யாரு கூட பேசுனாலும் தராதரம் இல்லாம பேச ஆரம்பிச்சிட்டாரு,அவரு சண்டை இழுக்க ஆரம்பிக்கிற வார்த் தையே அங்க போயி என்ன,,,,,,,,,ன்னு தான் ஆரம்பிப்பாரு,

“எனக்குன்னா ஒரே உயிர் வாதையாகிப்போகும் இப்பிடியான பேச்சும் சத்த மும். எப்படா இந்த ஆள் கிட்ட இருந்து விடுதலை கெடைக்கும்ன்னு இருந்த நேரத்துலதான் ரெண்டாவது பொண்ணு பொறந்தா,அதுல அவருக்கு தீராத சந்தேகம், இந்தப்பொண்ணு எனக்குப்பொறந்ததா இல்லயான்னு ஆரம்பிச்சிட் டாரு,

“இதெல்லாம் பாத்துக்கிட்டிருந்த ஏங் மாமியாரு என்னடா கழுதப்பயலே ரொ ம்பவும் ஓவாரத்தான் அவளப் போட்டு பாடா படுத்திக்கிட்டு இருக்குற ,என்ன பொம்பளைன்னா ஒனக்கு அவ்வளவு எளக்காரமா போச்சா நாயி,நானும் ஒரு பொம்பளதான் என்னையவும் இப்பிடித்தான சந்தேகப்பட்டுருப்ப,வெளங்காத பயலேன்னு சொல்லி நீ ஒன்னும் இப்பிடியெல்லாம் பேசிக்கிட்டு அவ கூட இருக்க வேணாம்,பேசாம எங்கிட்டாவது போயி எப்பிடியாவது இருந்துக்கன் னு சொல்லீட்டு இப்ப குடியிருக்குற தெருவுக்கு அடுத்த தெருவுல வாடகை க்கு ஒரு வீடு பாத்து குடி வச்சிட்டாங்க,

குடி வச்சது மட்டுமில்லாம அவுங்கதான் எனக்கு காவலு,ஏங் வீட்டுக்காரரு நான் குடியிருக்குறவீட்டுப்பக்கம் வராமபாத்துக்குறம் ஏங்கூட வந்து சோறு தண்ணி காய்ச்சி ஒத்தாசையா இருக்குறதும் அவுங்களாத்தான் இருந்தாங்க,

”பச்சை ஒடம்புக்காரின்னு எனக்குஏதாவது நல்லது பொல்லது சமைச்சிக்குடுக் குறதும்,எனக்கு ஏதாவது ஒதவியுமா இருந்தாங்க,இப்பிடி இருந்த ஒரு நாளை யிலதான் சின்னவளுக்கு ஏதோ ஜொரம் வந்த மாதிரி ஆகிப்போச்சி,

ஜொரம் வந்த கொஞ்ச நேரத்துல கை காலெல்லாம் வெடி வெட்டி இழுக்க ஆரம்பிச்சிருச்சி/ நல்ல நடு ராத்திரி நேரம்,பண்ணெண்டு மணிக்கு மேல இருக்கும்.அமாவாசை இருட்டு வேற ,

மாமியார கூப்புட்டுக்கிட்டு டவுன் ஆஸ்பத்திரிக்கிபோகலாமுன்னு பாத்தா மாமியாரும் ஊர்ல இல்ல,என்ன செய்யிறதுன்னு கையப்பொசைஞ்சிக்கிட்டு நின்னப்ப பக்கத்து வீட்டுக்காரி தற்செயலா நடுராத்திரியில எந்திரிச்சிவ என்ன இந்நேரத்துல லைட் எரியுது வீட்லன்னு விசாரிக்க வந்தட்டு கண்ணீரும் கம்பலையுமா நிக்குற என்னையப்பாத்து நேராப்போயி அவுங்க பெரிய மகன விட்டு ஏங் வீட்டுக்காரர கூட்டீட்டு வரச் சொன்னாங்க,

“அவரும்வந்தாருஅரைப்போதையோட,எங்கபடுத்துக்கெடந்தாரோஎன்னவோ,  வந்து என்னையப்பாத்ததும் ஓன்னு ஒரே ஒப்பாரி,,,பக்கத்து வீட்டு அம்மாதான் சொன்னாங்க,மொதல்ல அழுகுறத நிறுத்தீட்டு ஒங் கொழந்தைய ஆஸ்பத்தி ரிக்கு கூட்டிக்கிட்டு போற வழியப்பாரு,

“இந்தா ஏங்பையனோட வண்டி இருக்கு, எடுத்துக்கிட்டு போயிட்டு வா,வண்டி ஓட்டுற நிதானத்துல இருக்கையா இல்ல,,,கூட வேணுமுன்னா ஏங் பையன் இன்னும்ஓங்கூட்டாளிகளசேத்துக்க,,”ன்னு சொன்னவ பையன்ட்ட வண்டிய எடுத்துக் கொணந்து விடச் சொன்னா”

”நான் ஏங் பையனையே கூட்டிக்கிட்டு போகச் சொல்லீருப்பேன், அதுக்கும் நீயி ஏதாவது சந்தேகப்படுவையின்னுதான் விட்டுட்டேன், சரி போ சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போற வழியப்பாருன்னு சொன்னதும் இல்ல வேணாமுக்கா, நான் இன்னும் போதை தெளியாதவனாத்தான் இருக்கேன், இப்போதைக்கி தம்பி வண்டி ஓட்டட்டும்,நானும் ஏங் கூட்டாளி ஒருத்தனும் பின்னாடியே போறோம்,வண்டியில,அவன் என்ன போதையில இருந்தாலும் தெளிவா வண்டி ஓட்டுவான்.அவன் கூட நான் வர்றேன்னு சொன்னவரு அன்னைக்கி ஆஸ்பத்திரியில் வந்து அழுத அழுகை இருக்கே ஊரு கொள்ளாத அழுகை யாப் போச்சி,

”ஆஸ்பத்திரிக்குப்போன நாங்க அங்க ஒரு ரெண்டு மணி நேரம் கொழந்தைய வச்சிட்டிருந்துட்டு அப்பிடியேவீட்டுக்கு வந்தம். வீட்டுக்கு வர விடிஞ்சி போச்சி பொழுது,

“அன்னைக்கிலயிருந்து ஏதோ ஒரு முடிவெடுத்தவரா கொஞ்சம் கொஞ்சமா குடியக்கொறச்சிக்கிட்டாரு, ஒரேயடியா இல்லாட்டிக்கூட கொஞ்சம் கொஞ் சமா கொரச்சிக்கிர்றேன்,திடீர்ன்னு என்னால நிப்பாட்டீற முடியாது ,கொஞ்ச நாள் குடு,நான் திருந்தீர்றேன்னு சொன்னவரு அது போலவே இருந்து காட்டு னாரு,

ரெண்டாவதா இவ பொறந்தப் பொறகு மடியில கட்டி வச்சிருந்த காசுன்னு கொஞ்சம் பணத்தக் கொண்டு வந்து கையில குடுத்து இந்த மாதிரி ஊருக்கு வெளியில ஒரு நஞ்சை வெலைக்கி வருது ,வாங்கிப்போடலாமுன்னு இருக் கேன்னு சொல்லீட்டு மட மடமடன்னு அதுக்குண்டான வேலைப்பாத்தவரு அந்தப் பணம் எப்பிடி வந்ததுன்னு கேட்டப்ப நாங்க சின்னப்புள்ளைங்களா இருந்தப்ப ரோட்டு மேல இருந்த மூணு செண்டு காட்ட வித்தாங்க, அந்தக் காசுதான் இது,அப்பயே பேங்குல போட்டு வச்சிருந்துருக்காங்க,

அத எடுத்து ஏங்கிட்ட குடுக்கணுமுன்னு நெனைக்கும் போது குடியும் கையு மா அலைஞ்சிக்கிட்டுருந்திருக்கேன்,

மத்த புள்ளைங்களுக்குக்குடுத்துட்டு ஏங் பங்க மட்டும் மறுபடியும் பேங்குல போட்டு வச்சிருந்திருக்காங்க/ நல்ல வேளையா எனக்கு அப்பிடி ஒரு தொகை பேங்குல இருக்குன்னு தெரியவும் தெரியாது.அதுவும் நல்லதாத்தான் போச்சி/

“இல்லைன்னா நான் குடிச்சே அழிச்சிருப்பேன்னு சொன்னவரு எந்த சாமி புண்ணியமோ இல்ல கொழந்த பொறந்த ராசியோ என்னவோதெரியல, கை கூடி வரட்டும் எல்லாமுன்னு மறுவாரமே என்னையக் கூப்புட்டுக்கிட்டுப் போயி வாங்குன நெலத்த பதிஞ்சிக்கிட்டு வந்துட்டாரு,

“அதுலயிருந்து கொஞ்சம் நம்பிக்கையா காலூனி நிக்க ஆரம்பிச்சவரு இப்ப யெல்லாம் சொந்த நெலத்துல வேலை இருந்தா செய்யிறாரு ,இல்லைன்னா யாராவது கூலிக்குக் கூப்புட்டாங்கன்னு போயிறாரு,அது கொத்த வேலையா இருந்தாக்கூட பரவாயில்லைன்னு,ஏங் மாமியார் கூட கேட்டாங்க,அதான் எல்லாம் சரியாயிருச்சே,இனி எதுக்கு தனியா வாடகை வீட்டுல இருந்துக் கிட்டு ,வாங்க ஒன்னாவே இருந்துறலாமுன்னு கூப்புட்டப்ப வேண்டாம் இனிம  நாங்க இப்பிடியே இருந்துக்கிறமுன்னு சொல்லி இருந்துக்கிட்டாரு,

இப்ப வாடகைக்கு இருந்த வீட்ட ஒத்திக்கு எடுத்துட்டோம்,கூடிய சீக்கிரம் வாங்கலாமுன்னு ஒரு யோசனை.

“பாப்பம் எல்லாம் ரெண்டாவது புள்ளயா இவ பொறந்த நேரமுன்னு தூக்கி கொண்டாட ஆரம்பிச்சவரு,இப்ப நல்லாயிருக்காரு,எப்பவாவது கொஞ்சம் போதையோடவருவாரு,அப்பிடி வர்றன்னைக்கி ஏங்கிட்ட சோத்த வாங்கி ட்டுப் நேரா தோட்டத்துல படுத்துக்கிருவாரு,

”இப்ப நல்லாயிருக்கம் என்றவள் சும்மா கேலிக்காகத்தான் கேட்டேன் ஏங் பொண்ணக்கட்டிக்கிறையான்னு,,,/எனமுடித்தாள்/

அவள் சொன்ன கேலி ”இப்படி ஒருபையன் எனது பெண்ணுக்கு திருமணம் ஆகும் தருணத்தில் வாய்ப்பானா”,,?எனச்சொல்லிச்செல்வதாய்,,,,/

5 comments:

vimalanperali said...

அன்பும் மறவாத நன்றியும்,,,/

ஸ்ரீராம். said...

பெண் பிறந்த நேரம்...

vimalanperali said...

பெண் பிறந்த நேரம் என்பது தவிர்த்து
ஒரு மனிதன் ஒவ்வொன்றிலிருந்தும்
மீண்டு வருகிற காலம் என ஒன்றிருக்கும்தான்,
அதுதான் இது,
அதை ஒரு கதையாக எழுத வேண்டும்,

வலிப்போக்கன் said...

என்னையும் இப்படித்தான் சொன்னார்கள்.“நான் பிறந்தவுடன் அப்பனை தூக்கி முழுங்கிட்டேன்னு...

vimalanperali said...

அன்பும்.நன்றியும்!